- Advertisement -
சமையல் குறிப்புகள்

இதைவிட ஹெல்தியான சூப்பரான ஸ்நாக்ஸ் எங்க தேடினாலும் கிடைக்காது. சுவையான ‘ஸ்வீட் ராகி கொழுக்கட்டை’ செய்வது எப்படி?

- Advertisement -

ஆரோக்கியம் தரக்கூடிய ஸ்னாக்ஸ் பொருட்களை இப்போதெல்லாம் நாம் திரும்பிக் கூட பார்ப்பது கிடையாது. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை நொறுக்கு தீனி என்றாலே சிப்ஸ் வகைகளை தான் இப்போது ரொம்பவும் விரும்புகிறார்கள். ஆனால் கொஞ்சம் அதையெல்லாம் தள்ளிவைத்துவிட்டு, ஆரோக்கியம் தரக்கூடிய தானிய உணவுகளையும் ஸ்நாக்ஸாக செய்து சாப்பிடுவோம். அந்த வரிசையில் இன்னைக்கு ஹெல்தியான ஒரு ராகி கொழுக்கட்டை எப்படி செய்வது என்பதைப்பற்றித்தான் இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளப் போகின்றோம்.

1 கப் அளவு கேழ்வரகு மாவை எடுத்து கடாயில் போட்டு வாசம் வரும் வரை வறுத்துக் கொள்ள வேண்டும். எந்த கப்பில் வேண்டும் என்றாலும் கேழ்வரகு மாவை அளந்து கொள்ளலாம். பின் சொல்லக்கூடிய மற்ற பொருட்களையும் அதே கப்பில் அளந்து கொள்ளுங்கள். வாசம் வரும் வரை சிவக்க வறுத்த மாவை அகலமான ஒரு பவுலில் மாற்றிக் கொள்ளுங்கள்.

- Advertisement -

அடுத்தபடியாக ஒரு மிக்ஸி ஜாரில் 1/2 கப் அவல் போட்டு, பொடியாக நைஸாக அரைத்து, இதையும் கேழ்வரகு மாவுடன் சேர்த்துக் கொள்ள வேண்டும். வறுத்த கேழ்வரகு மாவு – 1 கப், அரைத்த அவல் – 1/2 கப், தேங்காய் துருவல் – 1/2 கப், ஏலக்காய் – 1/2 ஸ்பூன், இந்த பொருட்களை சேர்த்து முதலில் நன்றாக கலந்து கொள்ளுங்கள். (கெட்டி அவல், லேசான அவல், சிவப்பு அவல் எந்த அவல் வேண்டுமென்றாலும் பயன்படுத்திக் கொள்ளலாம்.)

அடுத்தபடியாக 1 கப் அளவு வெல்லத்தை நன்றாக தூள்செய்து கடாயில் போட்டு 1/4 கப் அளவு தண்ணீர் ஊற்றி, அடுப்பில் வைத்து விட வேண்டும். மிதமான தீயில் இந்த வெல்லத்தை நன்றாக கரைத்துக் கொள்ளுங்கள். இந்த வெல்ல கரைசலை சுடசுட அப்படியே வடிகட்டி தயாராக எடுத்து வைத்திருக்கும் கேழ்வரகு மாவுடன் ஊற்றி ஒரு கரண்டியை வைத்து நன்றாக கலக்குங்கள். மாவில் வெல்லக் கரைசலை சேர்க்கும்போது கட்டிகள் விழக்கூடாது.

- Advertisement -

மாவு கை பொறுக்கும் சூடு வந்தவுடன் மாவை உங்கள் கையை கொண்டு நன்றாக பிசைய வேண்டும். இறுதியாக இந்த மாவில் இரண்டு ஸ்பூன் நெய் விட்டு பிசைந்து கொள்ளுங்கள். வேகும்போது மணக்க மணக்க இருக்கும்.

தயார் செய்த இந்த மாவை கையில் எடுத்து அழுத்தம் கொடுத்து பிடித்தால், பிடி கொழுக்கட்டை போல வரவேண்டும். ஒருவேளை உங்களுக்கு மாவு உதிர்ந்தால் இதில் கொஞ்சமாக 1 டேபிள்ஸ்பூன் அளவு தண்ணீரை தெளித்து மீண்டும் பிசைந்து கொள்ளலாம். கொழுக்கட்டைகளை பிடித்து இட்லி தட்டில் அடுக்கி விடுங்கள்.

அடுப்பில் இட்லி பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி நன்றாக கொதிக்க வைக்கவேண்டும். இட்லி தட்டில் பிடித்து வைத்த கொழுக்கட்டையை, இட்லி சட்டியில் ஆவியில் வைத்து 10 லிருந்து 12 நிமிடங்கள் மிதமான தீயில் வேக வைத்து எடுத்தால் சுட சுட சூப்பரான கொழுக்கட்டை தயார். உங்களால் பிடி கொழுக்கட்டை போல மாவை பிடிக்க முடியவில்லை என்றாலும், இந்த மாவை சிறு சிறு உருண்டைகளாக பிடித்து வைத்து வேகவைத்தும் குழந்தைகளுக்கு கொடுக்கலாம். அது நம்முடைய விருப்பம்தான். ஆக மொத்தத்தில் ஹெல்த்தியான ஸ்னாக்ஸ் தயார். உங்களுக்கு இந்த ரெசிபி பிடிச்சி இருந்தா உங்க வீட்ல ட்ரை பண்ணி பாருங்க.

- Advertisement -