
கிருஷ்ண ஜெயந்தி அன்று கிருஷ்ணருக்கு பிடித்த பலகாரங்களை நெய்வேத்தியமாக செய்து வைத்து வணங்குவது நம்முடைய வழக்கமாக உள்ளது. அந்த வகையில் கிருஷ்ணருக்கு பிடித்து உணவுகளும் பல வகை செய்து படைப்பார்கள். இதில் முறுக்கு, சீடை, பாயாசம், அப்பம் இன்னும் பல உண்டு. இவற்றையெல்லாம் செய்ய அதிக நேரம் செலவு ஆகும். இதையெல்லாம் முடிந்த அளவிற்கு எவ்வளவு எளிமையாக வீட்டில் உள்ள பொருட்களை வைத்து நிறைவாக செய்ய முடியும் என்று பலரும் யோசிப்பார்கள். அப்படியானவர்களுக்கான ஒரு அருமையான ரெசிபி தான் இந்த ரவை அப்பம். இந்த அப்பத்தை வீட்டில் இருக்கும் பொருட்களை வைத்து ரொம்பவும் சுலபமாக அதே நேரத்தில் சீக்கிரமாகவும் செய்து முடிக்கலாம். வாங்க அதை எப்படி செய்வது என்று தெரிந்து கொள்ளலாம்.
மைதா மாவு – 1 கப், ரவை – 1/2 கப், சர்க்கரை -1/2 கப், ஏலக்காய் பொடி – 1/4 டீஸ்பூன், உப்பு -1 சிட்டிகை, அப்பம் பொரித்தெடுக்க தேவையான அளவு எண்ணெய்.
இந்த அப்பம் செய்வதற்கு முதலில் ஒரு பௌலில் மைதா மாவை எடுத்துக் கொள்ளுங்கள். இதில் மைதா மாவிற்கு பதிலாக கோதுமை மாவையும் சேர்த்து செய்யலாம். அது உங்கள் விருப்பத்தை பொறுத்து சேர்த்து கொள்ளுங்கள். இந்த மைதா மாவில் சர்க்கரை, ரவை, ஏலக்காய் பொடி, உப்பு என அனைத்தையும் சேர்த்த பிறகு தண்ணீர் ஊற்றாமல் ஒரு முறை நன்றாக கலந்து விடுங்கள்.
அடுத்து இந்த மாவில் கொஞ்சம் கொஞ்சமாக தண்ணீர் விட்டு இட்லி மாவு பதத்திற்கு கலக்க வேண்டும். மாவு கொஞ்சம் கூட கெட்டி பட்டு இருக்கக் கூடாது நன்றாக வைத்து கலந்து விடுங்கள். அப்போது தான் அப்பம் நன்றாக வரும். இந்த மாவை அரை மணி நேரம் வரை தட்டு போட்டு மூடி அப்படியே வைத்து விடுங்கள். இந்த நேரத்திற்குள்ளாக மாவு ரவை எல்லாம் நன்றாக ஊறி மாவு இன்னும் கூட கொஞ்சம் கெட்டியாக மாறி இருக்கும்.
அடுத்து ஊறிய மாவில் கொஞ்சமாக தண்ணீர் ஊற்றி கரைத்துக் கொள்ளுங்கள். ரவை ஊற்றி கெட்டியான பிறகு அந்த மாவை அப்படியே ஊற்றினால் அப்பம் போல இருக்கும் அதனால் கொஞ்சமா தண்ணீர் ஊற்றி மாவை கரைத்த பிறகு, அடுப்பில் கடாய் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானவுடன் அடுப்பை மிதமான தீக்கு மாற்றி வைத்துக் கொள்ளுங்கள். இப்போது தயார் செய்து வைத்திருக்கும் அப்பம் மாவிலிருந்து ஒரு கரண்டி மாவை எடுத்து அப்படியே நேரடியாக எண்ணெயில் ஊற்றுங்கள்.
இதையும் படிக்கலாமே: காலிஃப்ளவரை வைத்து அருமையான சுவையில் குழம்பு செஞ்சு கொடுங்க. அப்புறம் உங்க வீட்ல சிக்கன் குழம்பு செய்ய மாட்டீங்க. அந்த அளவுக்கு சுவையில் சிக்கன் குழம்பை மிஞ்சிடும்.
இதை ஊற்றிய சிறிது நேரத்திற்கெல்லாம் அப்பம் பூரி போல உப்பி மேலே வரும். அப்போது அப்பத்தின் மேல் கொஞ்சமாக எண்ணெய் கரண்டி வைத்து மேலே தெளிப்பது போல ஊற்றி விடுங்கள். அப்பம் இன்னும் நன்றாக மொறு மொறுவென்று வெந்து வரும். அதன் பிறகு மற்றொரு புறம் திருப்பிப் போட்டு சிவந்த உடன் எடுத்து விடுங்கள். பஞ்சு போன்ற சாப்டான ரவை அப்பம் தயார். இந்த முறை கிருஷ்ண ஜெயந்தி நெய்வேத்தியத்தில் இந்த அப்பத்தை செய்து வைத்து பாருங்கள். ரொம்பவே வித்தியாசமான சுவையில் டேஸ்டாக இருப்பதுடன் அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள்.