
எல்லோருடைய வீட்டிலும் ஏதாவது ஒரு செடி, கொடிகளை வளர்ப்பது நிச்சயம் உண்டு. பெரிய இடம் இல்லாதவர்கள் கூட, தனக்கு இருக்கும் சிறிய இடத்தில் ஏதாவது ஒரு பூச்செடிகளை வைத்து அழகு பார்ப்பது உண்டு. இப்படி நீங்கள் வளர்க்கும் பூச்செடிகளுக்கு நல்ல ஊட்டச்சத்துக்கள் கிடைக்க அதிக அளவு செலவு செய்து உரம் வாங்க வேண்டிய அவசியம் இல்லை. நம் வீட்டில் இருக்கும் சாதாரண பொருட்கள் அல்லது தேவையில்லை என்று தூக்கி எறியும் பொருட்களை வைத்தே உரத்தை தயாரிக்கலாம். அதில் நாம் சாதம் அல்லது அரிசியை வைத்து வீணாக்கி கொண்டு இருக்கும் இந்த சத்து மிகுந்த தண்ணீரை எப்படி பயன்படுத்தினால் கொத்துக் கொத்தாக பூக்களை அள்ளலாம்? என்பதைத் தான் இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ள இருக்கிறோம்.
ரோஜா பூ அல்லது மல்லி செடி வைத்திருப்பவர்கள் கண்டிப்பாக இதை செய்து பாருங்கள், நிறைய பூக்கள் பூக்க ஆரம்பிக்கும். ஒரு கிளையில் பத்து பதினைந்து பூக்கள் கூட பூக்கும் அளவிற்கு சத்துக்களை கொண்டுள்ள இந்த தண்ணீரை நாம் சிங்க்கில் கொட்டி வீணாக்கிக் கொண்டிருக்கிறோம். அதில் முதலாவதாக அரிசி களைந்த தண்ணீர்!
பொதுவாக சாதம் வடிக்கும் பொழுது அரிசியை இரண்டு முறை கழுவி மூன்றாவது முறை நல்ல தண்ணீர் ஊற்றி ஊற வைப்போம். முதல் முறை குழுவிய தண்ணீரை கண்டிப்பாக பயன்படுத்த மாட்டோம், அதை கீழே தான் கொட்டி விடுவோம். இரண்டாவது முறை குழுவிய தண்ணீரில் இருக்கும் சத்துகள் செடி, கொடிகளுக்கு நல்ல ஒரு வளத்தைக் கொடுக்கக் கூடியது. பூக்களில் போக்கும் மொட்டுக்கள் உதிராமல் இருக்கவும் இந்த சத்து உதவுகிறது.
காய்கறி கழிவுகள், பழக் கழிவுகள் போன்றவற்றை விட அதிக சக்தி இந்த அரிசி கழுவும் தண்ணீருக்கு உண்டு. அது மட்டுமல்லாமல் அரிசி வடித்த தண்ணீர் மற்றும் சாதத்தை ஊற வைத்த தண்ணீர் போன்றவையும் அதீத வளத்தை கொடுக்கக் கூடிய சத்துக்களை தன்னுள்ளே அடக்கி வைத்துள்ளது.
நீங்கள் சாதம் வடிக்க அரிசியை களையும் பொழுது அதிலிருந்து கிடைக்கக் கூடிய அரிசி களைந்த தண்ணீர் அரை லிட்டர் அளவிற்கு எடுத்துக் கொள்ளுங்கள். அதனுடன் அதே அளவிற்கு முந்தைய நாள் வடித்த சாதத்தை ஊற வைத்த அந்த பழைய சாத தண்ணீரை அரை லிட்டர் அளவிற்கு எடுத்துக் கொள்ளுங்கள். சாதம் வடித்த கஞ்சி அரை டம்ளர் அளவிற்கு எடுத்தால் போதும். இது எல்லாவற்றையும் ஒன்றுடன் ஒன்றாக கலந்து மூன்று நாட்கள் நன்கு புளிக்க விட வேண்டும்.
மூன்று நாட்களுக்கு பிறகு நன்கு புளித்த இந்த தண்ணீரில் நுரை போன்று நொதித்தல் ஏற்பட்டிருக்கும். இதை நன்கு வடிகட்டி வைத்துக் கொள்ளுங்கள். பின்னர் இதனுடன் 4 லிட்டர் அளவிற்கு தண்ணீர் சேர்த்துக் கொள்ளுங்கள். மொத்தம் 5 லிட்டர் தண்ணீரை தயார் செய்து, உங்கள் வீட்டு பூச்செடிக்கு உரமாக கொடுங்கள். மேலும் இதை ஸ்ப்ரே பாட்டிலில் அடைத்து பூச்செடிகளின் மீது ஸ்ப்ரே செய்து விடுங்கள். இந்த நீரில் இதிலிருந்து உருவாகக்கூடிய நுண்ணுயிர்கள் மண் வளத்தைப் பெருக்கி, செடியின் வேருக்கு ஊட்டச்சத்து கொடுத்து மொட்டுக்கள் உதிராமலும், பக்க கிளைகளில் அதிகம் மொட்டுக்கள் புதிதாக முளைக்கவும் உதவும். வாரம் ஒருமுறை இவ்வாறு செய்தால் கூட கொத்துக் கொத்தாக உங்கள் பூ செடிகளில் இருந்து மலர்களை அள்ளலாம்.