
காய்கறிகள் பிடிக்காதவர்கள் கூட அதனை சரியான பக்குவத்தில் சுவையாக செய்து கொடுத்தால் விருப்பமாக சாப்பிடுவார்கள். ஒரு சில குழந்தைகள் வீட்டில் செய்யும் உணவுகளை சாப்பிட மாட்டார்கள். ஆனால் வெளியில் அழைத்துச் செல்லும் பொழுதும், பக்கத்து வீட்டில் ஏதேனும் சமைக்கும் பொழுதும் அவற்றையெல்லாம் விருப்பமாக சாப்பிடுவார்கள். இப்படி அவர்கள் அவற்றை மட்டும் விருப்பமாக சாப்பிடுவதற்கு காரணம் நீங்கள் செய்யும் உணவின் சுவை அவர்களுக்கு பழகி விட்டது. எனவே ஒரு புதுவிதமான சுவையை உணரும் போது அதனை விருப்பமாக சாப்பிடுகிறார்கள். ஆகவே நீங்களும் உங்கள் சமையலில் சுவையை அதிகரிக்க இப்படி மசாலா அரைத்து செய்து பாருங்கள். ஒரு முறை காலிஃபிளவர் பொரியலை இப்படி மசாலா அரைத்து எப்படி சுவையாக செய்வது என்பதை இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்வோம்.
தேவையான பொருட்கள்:
காலிஃபிளவர் – 1, பெரிய வெங்காயம் – 2, கடுகு – அரை ஸ்பூன், சீரகம் – அரை ஸ்பூன், மிளகு – ஒரு ஸ்பூன், சோம்பு – ஒரு ஸ்பூன், கிராம்பு – 2, பட்டை சிறிய துண்டு – 2, பச்சை மிளகாய் – 1, இஞ்சி சிறிய துண்டு – 1, பூண்டு – 10 பல், மிளகாய்த்தூள் – ஒன்றரை ஸ்பூன், தனியாத்தூள் – அரை ஸ்பூன், உப்பு – ஒரு ஸ்பூன், எண்ணெய் – 8 ஸ்பூன்= மஞ்சள் தூள் – அரை ஸ்பூன்.
செய்முறை:
முதலில் காலிபிளவரை பொடியாக நறுக்கிக் கொள்ளவேண்டும். பின்னர் ஒரு பாத்திரத்தில் தண்ணீர் வைத்து, அதனை அடுப்பில் வைத்து சூடுபடுத்த வேண்டும். அதில் கால் ஸ்பூன் உப்பு மற்றும் மஞ்சள் தூள் சேர்த்து, அதனுடன் காலிஃப்ளவரை சேர்த்து ஒரு கொதி வரும் வரைக் கொதிக்க வைத்து, பின்னர் அடுப்பை அனைத்துவிட வேண்டும். பிறகு தண்ணீரை வடிகட்டி காலிபிளவரை தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.
பிறகு வெங்காயத்தை பொடியாக நறுக்கி வைக்க வேண்டும். பின்னர் ஒரு மிக்ஸி ஜாரில் கிராம்பு, பட்டை, இஞ்சி, பூண்டு, பச்சை மிளகாய், சோம்பு மற்றும் மிளகு இவை அனைத்தையும் சேர்த்து முதலில் ஒரு கொரகொரப்பாக அரைத்துக் கொள்ளவேண்டும். பின்னர் இவற்றுடன் சிறிதளவு தண்ணீர் ஊற்றி பேஸ்ட் போல் அரைத்துக் கொள்ள வேண்டும்.
பிறகு அடுப்பின் மீது ஒரு கடாயை வைத்து முதலில் இரண்டு ஸ்பூன் எண்ணெய் ஊற்ற வேண்டும். பிறகு கடுகு மற்றும் சீரகம் சேர்த்து தாளிக்க வேண்டும். பின்னர் நறுக்கிய வெங்காயத்தை சேர்த்து பொன்னிறமாக வதக்கிக் கொள்ள வேண்டும். பிறகு இதனுடன் காலிஃப்ளவரை சேர்த்து 2 நிமிடம் வதக்கி விட்டு, மூடி போட்டு 5 நிமிடம் வேக விடவேண்டும்.
பின்னர் இவற்றுடன் மிளகாய் தூள் உப்பு மற்றும் தனியா தூள் சேர்த்து கலந்து விட வேண்டும். இவை நன்றாக வதங்கிய பின்னர் இவற்றுடன் இரண்டு ஸ்பூன் கடலை மாவை தூவி விட்டு, அதனை சுற்றி இரண்டு ஸ்பூன் எண்ணெய் ஊற்ற வேண்டும். பின்னர் ஒவ்வொரு பாகமாக பிரட்டி விட வேண்டும். அடுத்ததாக மற்றொரு முறை இரண்டு ஸ்பூன் கடலை மாவை தூவி, இரண்டு ஸ்பூன் எண்ணெய் ஊற்ற வேண்டும். ஒரு நிமிடம் கழித்து பிரட்டி விட வேண்டும். அதேபோல் மூன்றாவது முறையும் 2ஸ்பூன் கடலைமாவை தூவிவிட்டு, 2 ஸ்பூன் எண்ணெய் ஊற்றி ஒரு நிமிடம் கழித்து பிரட்டி விட வேண்டும். பின்னர் இறுதியாக கொத்தமல்லி தழை தூவி கலந்து விட்டால் சுவையான காலிபிளவர் பொரியல் தயாராகிவிடும்.