- Advertisement -
சமையல் குறிப்புகள்

சுவையான வெள்ளை சுண்டல் குழம்பை ஒரு முறை இவ்வாறு செய்து பாருங்கள். சாதத்துடன் சேர்த்து சாப்பிட மிகவும் அருமையாக இருக்கும்

- Advertisement -

தினமும் மதியம் சாப்பாட்டிற்கு சாம்பார், காரக்குழம்பு, ரசம் போன்றவற்றை தான் தொடர்ந்து அடுத்தடுத்து என சமைத்து கொண்டிருப்போம். சற்று வித்தியாசமாக வெள்ளை சுண்டல் வைத்து குழம்பு செய்து பாருங்கள். வெள்ளை சுண்டல் உடம்பிற்கு தேவையான ஆரோக்கியம் மிகுந்ததாக இருக்கிறது. இதனை வளரும் குழந்தைகளுக்கு சாப்பிடக் கொடுக்க அவர்களின் வளர்ச்சி தடைபடாமல் இருக்கும். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் இந்த சுண்டலை சாப்பிடலாம். வாருங்கள் இந்த வெள்ளை சுண்டல் வைத்து அருமையான ஒரு குழம்பு ரெசிபியை எவ்வாறு செய்வது என்பதை இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்வோம்.

தேவையான பொருட்கள்:
வெள்ளை சுண்டல் – கால் கிலோ, பெரிய வெங்காயம் – 2, தக்காளி – 2, இஞ்சி – சிறிய துண்டு, சீரகம் – ஒரு ஸ்பூன், கிராம்பு – 4, பட்டை – சிறிய துண்டு, ஏலக்காய் – 2, வர மிளகாய் தூள் – ஒரு ஸ்பூன், குழம்பு மிளகாய் தூள் – ஒரு ஸ்பூன், கரம் மசாலா – அரை ஸ்பூன், உப்பு – ஒன்றரை ஸ்பூன், மஞ்சள் தூள் – அரை ஸ்பூன், இஞ்சி பூண்டு விழுது – ஒரு ஸ்பூன், பெருங்காயத் தூள் – அரை ஸ்பூன், எண்ணெய் – 6 ஸ்பூன், கருவேப்பிலை – ஒரு கொத்து, கொத்தமல்லித்தழை – ஒரு கொத்து.

- Advertisement -

செய்முறை:
முதலில் கால் கிலோ வெள்ளை சுண்டலை முதல் நாள் இரவே சுத்தம் செய்து தண்ணீர் ஊற்றி எட்டு மணி நேரம் ஊற வைக்க வேண்டும். பின்னர் மறுநாள் சமைப்பதற்கு ஊற வைத்த சுண்டலில் இருந்து தண்ணீரை வடிகட்டி, சுண்டலை ஒரு குக்கரில் சேர்த்து அதனுடன் இரண்டு டம்ளர் தண்ணீர், அரை ஸ்பூன் உப்பு, 4 கிராம்பு, 2 ஏலக்காய், சிறிய துண்டு பட்டை மற்றும் 2 தக்காளியை நறுக்கி இவற்றுடன் சேர்த்து கொண்டு குக்கரை மூடி அடுப்பின் மீது வைக்க வேண்டும்.

குக்கர் 4 விசில் வரும்வரை சுண்டலை நன்றாக வேக விடவேண்டும். பின்னர் குக்கரை இறக்கி பிரஷர் குறையும் வரை அப்படியே விட்டுவிட வேண்டும். பிறகு ஒரு கடாயை அடுப்பின் மீது வைத்து நான்கு ஸ்பூன் எண்ணெய் ஊற்ற வேண்டும். எண்ணெய் நன்றாக காய்ந்ததும் அரை ஸ்பூன் சீரகம் சேர்த்து தாளிக்க வேண்டும். பிறகு இரண்டு பெரிய வெங்காயத்தை பொடியாக நறுக்கி எண்ணெயில் சேர்த்து நன்றாக வதக்கிக் கொள்ள வேண்டும்.

- Advertisement -

அதன் பிறகு ஒரு ஸ்பூன் இஞ்சி பூண்டு விழுதை வெங்காயத்துடன் சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்கிக் கொள்ள வேண்டும். பிறகு வரமிளகாய் ஒரு ஸ்பூன், கரம் மசாலா அரை ஸ்பூன், குழம்பு மிளகாய் தூள் ஒரு ஸ்பூன் மற்றும் ஒரு ஸ்பூன் உப்பு சேர்த்து நன்றாக வதக்கி விட வேண்டும். பிறகு குக்கரை திறந்து இரண்டு ஸ்பூன் சுண்டலை மற்றும் தனியே எடுத்து மிக்ஸியில் சேர்த்து நன்றாக அரைத்துக் கொள்ள வேண்டும்.

பிறகு மீதமுள்ள சுண்டல் அனைத்தையும் வேகவைத்த தண்ணீருடன் அப்படியே கடாயில் சேர்த்துக் கொள்ள வேண்டும். பிறகு அரைத்து வைத்துள்ள சுண்டல் பேஸ்ட்டையும் இவற்றுடன் சேர்த்து நன்றாக கொதிக்க விட வேண்டும். அதன்பின் ஒரு தெளிப்பு கரண்டியை அடுப்பின் மீது வைத்து இரண்டு ஸ்பூன் எண்ணெய் ஊற்றி அரை ஸ்பூன் சீரகம், ஒரு கொத்து கறிவேப்பிலை மற்றும் பொடியாக நறுக்கிய இஞ்சி சேர்த்து தாளித்து குழம்புடன் சேர்த்து நன்றாக கலந்து விட வேண்டும். பின்னர் இறுதியாக கொத்தமல்லி இலைகளை தூவி இறக்கினால் போதும். சுவையான சுண்டல் மசாலா குழம்பு தயாராகிவிடும்.

- Advertisement -