
நம் உடம்பில் இருக்கும் பல்வேறு பிரச்சனைகளை தீர்த்து தலைமுடியை அடர்த்தியாக்கி, உடல் எடையை குறைத்து, எலும்புகளை வழுவாக்கி நம்மை நல்ல ஒரு திடகாத்திரமாக மாற்றக்கூடிய அற்புதமான ஒரு வரப்பிரசாதம் இந்த லட்டு ஆகும். இதில் பல வகையான தானியங்களும், விதைகளும் சேர்க்கப்பட்டுள்ளன. இது பாரம்பரிய மிக்க ஒரு ரெசிபி ஆகும். இதை ஒரு முறை நீங்கள் செய்து வைத்துக் கொண்டால் பிரிட்ஜில் வைத்து ஒரு மாதம் வரை சாப்பிடலாம். இந்த சத்து உருண்டையை எப்படி எளிதாக வீட்டிலேயே தயாரிப்பது? என்பதைத் தான் இந்த பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ள இருக்கிறோம்.
சத்து உருண்டை செய்ய தேவையான பொருட்கள்:
கருப்பு எள் – ஒரு கப், ஆளி விதை – ஒரு கப், பூசணி விதை – கால் கப், கசகசா – கால் கப், பொடித்த வெல்லம் – ஒன்றரை கப், ஏலக்காய் தூள் – ஒரு டேபிள்ஸ்பூன், நெய் – மூன்று டேபிள் ஸ்பூன்.
சத்து உருண்டை செய்முறை விளக்கம்:
முதலில் இந்த சத்து உருண்டை செய்வதற்கு கருப்பு எள் ஒரு கப் அளவிற்கு எடுத்துக் கொள்ளுங்கள். சில கருப்பு எள்ளில் குப்பைகள், தூசுகள் இருக்கக்கூடும். எனவே ஒரு முறை நன்கு அதை கழுவி காய வைத்து பின்னர் அடுப்பில் போட்டு லேசாக வறுத்து எடுத்துக் கொள்ள வேண்டும். நீங்கள் எடுக்கும் எள் சுத்தமாக இருந்தால் நீங்கள் அப்படியே மெல்லிய தீயில் வைத்து வாணலியில் இட்டு வாசம் வர லேசாக கிரிஸ்ப்பியாக வறுத்து எடுத்துக் கொள்ள வேண்டும். பின்னர் அதே வாணலியில் ஆளி விதைகளை ஒரு கப் அளவிற்கு சேர்த்து லேசாக வறுக்க வேண்டும். இதில் சேர்க்கப்பட்டிருக்கும் விதைகள், தானியங்கள் அனைத்தும் சத்து மிகுந்தவை. இவற்றை எல்லாம் ஒன்றாக கலந்து லட்டு போல பிடித்து நாம் சாப்பிடும் பொழுது பூரண சத்து நமக்கு உடலுக்கு கிடைக்கிறது.
ஆளி விதைகளை நன்கு வறுத்து எடுத்த பின்பு பூசணி விதை கால் கப் அளவிற்கு சேர்த்து இதே போல பொன்னிறமாக லேசாக வறுத்து எடுத்துக் கொள்ளுங்கள். நீங்கள் வறுக்கும் பொழுது சூடு ஏறி பொன்னிறமாக சிறிது நிறம் மாற வேண்டுமே தவிர, கறுத்து போய் விடக்கூடாது எனவே அடுப்பை கண்டிப்பாக குறைந்த தீயில் வைத்துக் கொள்ளுங்கள். அதே போல கடைசியாக கசகசாவையும் சேர்த்து மிதமான தீயில் லேசாக வறுத்து எடுத்துக் கொள்ள வேண்டும்.
பின்னர் வறுத்தெடுத்த எல்லா பொருட்களையும் ஒரு மிக்ஸி ஜாரில் எடுத்துக் கொள்ளுங்கள். பின்னர் ஒன்றரைக் கப் அளவிற்கு பொடித்த வெல்லத்தை சேர்த்து மீண்டும் அரைக்க வேண்டும். நன்கு அரைபடவில்லை என்றால் வெல்லத்தை துருவி சேருங்கள். கசகசா கொஞ்சம் எடுத்து வைத்துக் கொள்ளுங்கள். கடைசியாக நீங்கள் உருண்டைகள் பிடிக்கும் பொழுது சிறிதளவு சேர்த்துக் கொண்டால் பார்ப்பதற்கு நன்றாக இருக்கும்.
அரைத்த பின்பு சுத்தமான நெய் மற்றும் ஏலக்காய் தூளை சேர்த்து நன்கு எவ்வளவு அழுத்தம் கொடுத்து பிசைய முடியுமோ, அவ்வளவு அழுத்தம் கொடுத்து உதிர்த்து உதிர்த்து பிசைந்து கொள்ளுங்கள். பின்னர் நீங்கள் லட்டு பிடித்தால் அழகாக லட்டு பிடிக்க வரும். இதற்கு தண்ணீர் எதுவும் சேர்க்க வேண்டிய அவசியம் இல்லை. இது பத்து நாட்கள் வரை வெளியில் வைத்திருந்து சாப்பிடலாம். அதற்கு மேல் வைத்திருக்க வேண்டும் என்றால் பிரிட்ஜில் வைத்துக் கொள்ளுங்கள். ரொம்பவும் சத்தான, சுவையான இந்த லட்டு நம் உடம்பில் பல்வேறு பிரச்சினைகளை தீர்க்கக்கூடிய அற்புதமான ஒரு வரப் பிரசாதமாகும் நீங்களும் இதே மாதிரி வீட்டில் செய்து வைத்துக் கொள்ளுங்கள், தினம் ஒன்று உண்டு நலம் பெறுங்கள்.