
தர்பூசணி பழ சீசன் வருடத்துக்கு மூன்று அல்லது நான்கு மாதங்கள் மட்டுமே இருக்கும். அந்த சமயங்களில் அனைவரும் தர்பூசணி பழத்தை வாங்கி விருப்பமாக சாப்பிட்டு மகிழ்வார்கள். பழத்தை சாப்பிட்டு அதன் தோலை தேவையில்லாத குப்பையில் தூக்கி போடுவது தான் அனைவரின் வழக்கமாக இருக்கும். ஆனால் இவ்வாறு தூக்கிப் போடும் தர்பூசணி பழத்தோலை வைத்து சுவையான அல்வா செய்து சாப்பிட முடியும். இதனை எப்படி செய்வது என்பதை பற்றி தான் இந்த பதிவில் தெளிவாக தெரிந்து கொள்ளப் போகின்றோம்.
தேவையான பொருட்கள்:
தர்பூசணி பழம் – கால் கிலோ, தேங்காய் – அரை மூடி, வெல்லம் – ஒன்றரை கப், நெய் – 2 ஸ்பூன், சோள மாவு – 2 ஸ்பூன், உப்பு – கால் ஸ்பூன், ஏலக்காய் பொடி – அரைஸ்பூன், முந்திரி – 15.
முதலில் தர்பூசணி பழத்தை நான்கு துண்டுகளாக வெட்டிக்கொண்டு, அதிலிருக்கும் பழத்தை மட்டும் தனியாக எடுத்து வைக்க வேண்டும். பின்னர் தர்பூசணி பழ தோலின் மேல் புறத்தை தோல் சீவும் பீலர் வைத்து சுத்தம் செய்துகொள்ள வேண்டும். அதன்பின் தர்பூசணி பழத்தோலை நன்றாக சிறிய துண்டுகளாக நறுக்கி வைத்துக்கொள்ள வேண்டும்.
பின்னர் தேங்காயை நன்றாக துருவிக் கொண்டு அதனை மிக்ஸி ஜாரில் சேர்த்து அதனுடன் சிறிதளவு தண்ணீர் சேர்த்து, அரைத்து வடிகட்டி எடுத்துக்கொள்ள வேண்டும். இவ்வாறு ஒரு கப் அளவு இருக்குமாறு தேங்காய்ப்பால் எடுத்து வைத்துக்கொள்ள வேண்டும்.
நறுக்கி வைத்துள்ள தர்பூசணிப் பழத்துண்டுகளை ஒரு மிக்ஸி ஜாரில் சேர்த்து நன்றாக பேஸ்ட் பதத்திற்கு அரைத்துக் கொள்ள வேண்டும் அதன்பின் தனியாக எடுத்து வைத்துள்ள தர்பூசணி பழங்களையும் மிக்ஸி ஜாரில் சேர்த்து நன்றாக அரைத்து எடுக்க வேண்டும் அரைத்து எடுத்த இவை இரண்டையும் ஒன்றாக சேர்த்து கலந்து ஒரு வடிகட்டியை பயன்படுத்தி வடிகட்டி எடுத்துக்கொள்ள வேண்டும்.
வடிகட்டிய இந்த பழச்சாறுடன் ஒரு கப் தேங்காய்ப்பால், 2 ஸ்பூன் சோள மாவு, கால் ஸ்பூன் உப்பு மற்றும் அரை ஸ்பூன் ஏலக்காய் பொடி சேர்த்து நன்றாக கலந்து கொள்ள வேண்டும். அதன்பின் ஒரு அடி கனமான கடாயை அடுப்பில் வைத்து ஒரு ஸ்பூன் நெய் சேர்த்து நெய் நன்றாக இளகியதும் 15 முந்திரிப் பருப்புகளை சேர்த்து நன்றாக பொன்னிறமாக பொரித்து ஒரு தட்டில் எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும்.
அதன் பின் அதே கடாயில் கலந்து வைத்துள்ள பழச்சாறை ஒரு முறை நன்றாக கலக்கி விட்டு கடாயில் ஊற்ற வேண்டும். இவை சற்று சூடானதும் இதனுடன் ஒன்றரை கப் வெல்லம் சேர்த்து நன்றாக கலந்துவிட வேண்டும். அடுப்பை மிதமான தீயில் வைத்து கை விடாமல் கிளறிக் கொண்டே இருக்க வேண்டும். சிறிது நேரத்தில் இந்தக் கலவை கெட்டியாக ஆரம்பிக்கும்.
இவ்வாறு கெட்டியாக ஆரம்பிக்கும் நேரத்தில் மீளமுள்ள ஒரு ஸ்பூன் நெய் சேர்த்து, மீண்டும் நன்றாக கலந்து கொண்டே இருக்க வேண்டும். இப்பொழுது அடுப்பை முழுவதுமாக சிறிய தீயில் வைத்து விடவேண்டும். இவ்வாறு ஒரு பத்து அல்லது பதினைந்து நிமிடங்கள் கலந்து கொண்டே இருக்க வேண்டும். இறுதியாக வறுத்து வைத்துள்ள முந்திரி பருப்புகளை இதன் மீது தூவி இறக்கினால் சுவையான அல்வா தயாராகிவிடும்.