
குளிர்காலம் என்று வந்து விட்டாலே வீட்டில் இருக்கும் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை இருமல் சளி காய்ச்சல் பிரச்சனை தான். இதிலிருந்து தப்பிப்பது அவ்வளவு எளிது அல்ல. மருந்து மாத்திரை சாப்பிட்டாலும் சாப்பிடவில்லை என்றாலும் ஒரு வாரத்திற்கு மனுஷனை பாடாய்படுத்து விடும். இப்படிப்பட்ட பிரச்சனைகள் வராமல் தடுக்கவும், வந்த பிரச்சனையை சரி செய்யவும் ஒரு திப்பிலி ரசம் ரெசிபி இதோ உங்களுக்காக.
நாட்டு மருந்து கடைகளில் திப்பிலி, கண்டந் திப்பிலி என்று கேட்டால் உங்களுக்கு கிடைக்கும். அதை கொஞ்சம் கொஞ்சம் வாங்கி பாட்டிலில் போட்டு ஸ்டோர் செய்து வைத்துக் கொள்ளுங்கள். 50 கிராம், 100 கிராம் எவ்வளவு தேவையோ கேட்டால் கொடுப்பார்கள். வாரத்தில் ஒரு நாள் ரசம் வைக்கும் போது தேவையான அளவு இதை எடுத்து பயன்படுத்திக் கொள்ளலாம்.
அடுப்பில் ஒரு கடாயை வைத்து, அதில் 1 ஸ்பூன் எண்ணெய் ஊற்றி, கருப்பு நிறத்தில் இருக்கும் திப்பிலி – 6, கண்டந்திப்பலி – 4, மிளகு – 1/2 ஸ்பூன், வர மிளகாய் – 2, பூண்டு பல் – 2, சீரகம் – 1 ஸ்பூன், துவரம் பருப்பு – 1/2 ஸ்பூன், இந்த பொருட்களை எல்லாம் போட்டு வறுக்க வேண்டும். இந்த பொருட்கள் எல்லாம் வாசமாக வறுபட்டு வந்தவுடன் அடுப்பை அணைத்து விடுங்கள். இதை மிக்ஸி ஜாரில் கொட்டி நன்றாக ஆற வைத்து பொடித்து அதன் பின்பு கொஞ்சமாக தண்ணீர் ஊற்றி விழுதாக அரைத்துக் கொள்ள வேண்டும். அரைத்த இந்த விழுது அப்படியே இருக்கட்டும்.
இப்போது ரசத்தை தாளித்து, கூட்ட வேண்டும். அடுப்பில் ஒரு கடாயை வைத்து எண்ணெய் – 1 ஸ்பூன், ஊற்றி கடுகு – 1/2 ஸ்பூன், கருவேப்பிலை – 2 கொத்து, நறுக்கிய பெரிய தக்காளி பழம் – 1, மஞ்சள் தூள் – 1/4 ஸ்பூன், பெருங்காயத்தூள் – 1/4 ஸ்பூன், உப்பு – தேவையான அளவு, போட்டு தக்காளியை நன்றாக வதக்கி விட வேண்டும். இதில் நெல்லிக்காய் அளவு புளிக்கரைசலை கரைத்து ஊற்றி பச்சை வாடை போக கொதிக்க வையுங்கள்.
அதன் பின்பு மிக்ஸி ஜாரில் அரைத்து வைத்திருக்கும் அறவையை, கடாயில் இருக்கும் புளி கரைசலோடு ஊற்றி 2 கப் அளவு தண்ணீரையும் ஊற்றி, நன்றாக கலந்து, அடுப்பை மிதமான தீயில் வைத்து ரசம் நுரை பொங்கி ஒரு கொதி வந்ததும் அடுப்பை அணைத்துவிட்டு, மேலே கொத்தமல்லி தழையை தூவி சுடச்சுட ரசத்தை, சுட சுட சாதத்தின் மேல் விட்டு அப்படியே பிசைந்து சாப்பிட்டால் சூப்பராக இருக்கும்.
இதையும் படிக்கலாமே: உடல் எடையை குறைக்க வேண்டுமா? டக்குனு 10 நிமிடத்தில் செய்யக்கூடிய சூப்பரான இந்த தோசையை ட்ரை பண்ணி பாருங்க. உடல் எடை குறைந்து சும்மா சிக்குனு சூப்பரா மாறிடுவீங்க.
சின்ன பவுலில் இந்த ரசத்தை ஊற்றி மேலே கான் சிப்ஸ் துவி குழந்தைகளுக்கு அப்படியே கொடுத்தாலும் குடிக்கும்போது தொண்டைக்கு இதமாக இருக்கும். உங்களுக்கு இந்த திப்பிலி ரசம் பிடித்திருந்தால் மிஸ் பண்ணாம ட்ரை பண்ணி பாருங்க. இதில் மருத்துவ குணம் ஏராளமாக நிறைந்து இருக்கிறது. ஆரோக்கியத்திற்கு அத்தனை நல்லது.