
ஒவ்வொரு ஊரிலும் ஒவ்வொரு உணவுப் பொருள் பிரசித்தி பெற்று விளங்குகின்றன. மணப்பாறையில் முறுக்கு, திருநெல்வேலி அல்வா, மதுரையில் மல்லி, திருப்பதியில் லட்டு என்று வரிசையாக சொல்லிக் கொண்டே போகலாம். இந்த உணவு பொருட்களின் பெயரை சொன்னாலே, அந்த ஊர் தான் நமக்கு முதலில் ஞாபகம் வரும். அந்த வகையில் திருப்பதியில் லட்டு பிரசித்தி பெற்றது எப்பொழுது? லட்டு உருவான கதை என்ன? என்னும் தகவல்களை தான் இந்த ஆன்மிகம் சார்ந்த பதிவின் மூலம் நாம் தொடர்ந்து அறிந்து கொள்ள இருக்கிறோம்.
பதினெட்டாம் நூற்றாண்டில் 1715 ஆம் ஆண்டு, ஆகஸ்ட் மாதம், இரண்டாம் தேதி முதல் லட்டு தயாரித்து திருப்பதி ஏழுமலையானுக்கு நைவேத்தியமாக படைக்கப்பட்டது. அதற்கு முன்பு வரை பல்வேறு நெய்வேத்திய பொருட்கள் பிரசாதமாக வெவ்வேறு காலகட்டங்களில் தயாரிக்கப்பட்டு படைக்கப்பட்டு வந்தது. திருப்பொங்கல், சுயம், அப்பம், வடை, அதிரசம், மனோகரம் என்று விதவிதமான நைவேத்திய பொருட்கள் படைக்கப்பட்டு வந்த பிறகு தான், லட்டு நைவேத்தியமாக ஏழுமலையானுக்கு படைக்கப்பட்டது, இருப்பினும் அது பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்படவில்லை. அக்காலங்களில் அவ்வளவாக போக்குவரத்து வசதி இல்லாத காரணங்களினால் பெரும்பாலான பக்தர்கள் நீண்ட நாட்கள் பயணம் செய்து தான் கோவிலுக்கு வருவார்கள். அதற்கு ஏற்ப சீக்கிரம் கெட்டுப் போகாத நைவேத்திய பொருட்களை பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்குவார்கள்.
பின்பு 19ஆம் நூற்றாண்டின் துவக்கத்தில் 1803-ல் பூந்தியாக உதிர்த்து பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்பட்டு வந்தது. 1940 ஆம் ஆண்டு நடைபெற்ற நித்திய கல்யாண வைபவத்தில், கல்யாணம் ஐயங்கார் என்பவரால் உருவாக்கப்பட்டது தான் தற்போதைய பெரிய வடிவிலான ஶ்ரீ வாரி லட்டு சாம்ராஜ்யம். அன்று முதல் இன்று வரை திருப்பதி ஏழுமலையானுக்கு நைவேத்தியமாக வழங்கப்படும் இந்த லட்டுவை தான், பக்தர்களுக்கும் பிரசாதமாக வழங்கி வருகின்றனர்.
சுவையிலும், தரத்திலும் சுத்தமாகவும் பிரம்மாண்டமான அளவிலும் தயாரிக்கப்பட்ட இந்த திருப்பதி லட்டு என்றாலே பக்தர்களுக்கு அவ்வளவு பிடித்தமானதாக இருந்தது. இந்த லட்டு அவ்வளவு எளிதாக நம்மால் பெற்றுவிட முடியாது. எம்பெருமான் ஏழுமலையான் நினைத்தால் மட்டுமே நமக்கு இந்த லட்டு கிடைக்கும் என்கிற நம்பிக்கை பக்தர்களிடையே நீண்ட காலமாக இருந்து வந்தது.
தரிசனம் செய்துவிட்டு வரும் பக்தர்களுக்கு, சிறிய லட்டு இலவசமாகவும், கூடுதல் லட்டுக்கள் பெற விரும்பினால் காசு கொடுத்தும் வாங்கி ருசிப்பார்கள். பிரசித்தி பெற்ற இந்த திருப்பதி லட்டு எல்லா இடங்களிலும், இதே சுவையில் கிடைக்கப் பெறுவது கிடையாது. இதற்கென தனி காப்புரிமையும் திருப்பதி தேவஸ்தானத்திற்கு மட்டுமே வழங்கப்பட்டுள்ளது.
இதையும் படிக்கலாமே:
உண்டியலில் பணம் சேர சரியான நேரம் என்ன?
கோவில் வளாகத்திலேயே தயாரிக்கப்பட்டு வழங்கப்படும் இந்த பிரசாதம் நாத்திகர்களுக்கு கூட அமிர்தமாகவே தென்பட்டது. இதன் சுவை மற்றும் நறுமணம் வேறு எந்த இடத்திலும் தயாரிக்கப்படும் லட்டுவில் நம்மால் கண்டுவிட முடியாது. பல மணி நேரம் பக்தர்கள் காத்திருந்து, சில மணித்துளிகள் மட்டுமே ஏழுமலையானை உடல் முழுக்க புல்லரிப்புடன், மனதில் பெரும் பக்தியுடனும், கண்களில் கலங்கிய கண்ணீருடனும் தரிசிப்பார்கள். திருப்பதி வந்தால் திருப்பம் உண்டு என்கிற அவர்களுடைய நம்பிக்கையும் அந்த நிமிடம் பன்மடங்கு பெருகி இருக்கும். அப்பாடா.. இறைவனை நேரில் கண்டுவிட்டோம் என்பது போன்ற திருப்தியுடன் முதலில் அடி எடுத்து வைப்பது இந்த லட்டுவை நோக்கி தான்.