- Advertisement -
- Advertisement -

திருவோண விரதத்தன்று பெருமாளை இந்த ஒரு பொருளால் அர்ச்சனை செய்வது மிகவும் விசேஷமானதும், எண்ணற்ற புண்ணியங்களைத் தரக்கூடியதுமாகும். திருவோண விரதம் பெருமாளுக்கு மேற்கொள்ளும் பலன்களும், அர்ச்சனை செய்வதால் உண்டாகக்கூடிய மகிமைகளும் பற்றிய ஆன்மிகம் சார்ந்த சுவாரசியமான தகவல்களை இந்த பதிவின் மூலம் பகிர்ந்து கொள்கிறோம்.

திருவோண விரதம் பெருமாளுக்கு உகந்த நாள்! திருவோணம் நட்சத்திரம் மகாவிஷ்ணுவின் திருநட்சத்திரம் ஆகும். தசாவதாரங்களில் ஒன்றான வாமன அவதாரம் திருவோண நட்சத்திரத்தில் தான் நிகழ்ந்தது. எனவே, இந்த நாளில் பெருமாளை வழிபடுவது மிகவும் சிறப்பு. துளசி, பெருமாளுக்கு மிகவும் பிரியமான ஒன்று. பெருமாளுக்கு துளசி மாலை அணிவிப்பதும், துளசியால் அர்ச்சனை செய்வதும், துளசி தீர்த்தம் அருந்துவதும் பெரும் புண்ணியத்தை தரும்.

- Advertisement -

துளசி இலையின் நுனியில் பிரம்மாவும், மத்தியில் திருமாலும், அடியில் சிவனும், மற்றைய பகுதிகளில் பன்னிரண்டு ஆதித்யர்களும், பதினோரு ருத்திரர்களும், எட்டு வசுக்களும், இரு அசுவினி தேவர்களும் எழுந்தருளியிருப்பதாக ஐதீகம். துளசியால் பெருமாளை அர்ச்சனை செய்வதன் மூலமும், துளசி தீர்த்தம் அருந்துவதன் மூலமும் நாம் செய்த பாவங்கள் நீங்குவதாக புராணங்கள் கூறுகிறது.

திருவோண நட்சத்திரம் சந்திரனுக்கு உகந்த நாள். திருவோண விரதமிருந்து பெருமாளை துளசியால் வழிபட்டால், சந்திர தோஷங்கள் நீங்கி, வாழ்வில் அமைதியும், ஆனந்தமும் உண்டாகும். திருவோண விரதத்தை அனுசரித்து, பெருமாளை துளசியால் அர்ச்சித்தால், வீட்டில் தரித்திரம் நீங்கி, ஐஸ்வர்யம் பெருகும். செல்வச்செழிப்பு உண்டாகும். வாழ்வில் உள்ள கஷ்டங்கள், மனக்குறைகள், கவலைகள் அனைத்தும் நீங்கி, சந்தோஷமான வாழ்க்கை அமையும்.

- Advertisement -

சனிக்கிழமை திருவோண விரதம் கடைபிடித்து திருமணம் தாமதமாகும் பெண்கள், பெருமாளை துளசி மாலை அணிவித்து, அவரை தரிசித்து வேண்டிக் கொண்டால், நல்ல வரன் அமையும். நீண்ட காலம் குழந்தை இல்லாதவர்கள், திருவோண விரதமிருந்து பெருமாளை வழிபட்டால், குழந்தை பாக்கியம் கிடைக்கும் என்பது நம்பிக்கை. திருவோண விரதத்தில் ஒரு கைப்பிடி துளசியை சமர்ப்பித்து வேண்டிக் கொண்டால், கேட்டதெல்லாம் தருவார் பெருமாள்; நினைத்ததையெல்லாம் நடத்தி அருளுவார்.

துளசிக்கு பல மருத்துவ குணங்கள் உண்டு. இது நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து, சளி, காய்ச்சல் போன்ற உபாதைகளில் இருந்து நிவாரணம் அளிக்கிறது. துளசி தீர்த்தம் பருகும் போது சகல தோஷங்களையும், நோய்களையும் தீர்க்கும் என்பது ஐதீகம். இத்தகைய சிறப்பு வாய்ந்த திருவோண நாளில் விரதம் மேற்கொள்பவர்கள், எல்லா வளங்களும் பெற்று, பிறப்பில்லா பேற்றுடன் வைகுண்டத்தை அடைவார்கள். ஆகவே, திருவோண விரதத்தன்று பெருமாளை துளசியால் அர்ச்சனை செய்வது உடல், பொருள், ஆவி என அனைத்திலும் நன்மைகளையும், புண்ணியங்களையும் தரக்கூடிய ஒரு சிறந்த வழிபாடாகும்.

இதையும் படிக்கலாமே:
குரு வார பௌர்ணமி நிலை வாசல் பரிகாரம்

27 நட்சத்திரங்களில் ’திரு’என்கிற அடைமொழி கொண்ட திருவோணம் மற்றும் ’திருவாதிரை’ 2 நட்சத்திரங்களும் ரொம்பவும் சிறப்பு வாய்ந்தவையாக கருதப்படுகிறது. திருவோண நட்சத்திரத்திற்கு முந்தைய நாள் இரவே உணவு உண்ணாமல் இருப்பது நல்லது. இயலாதவர்கள் பழங்கள் அல்லது எளிதில் ஜீரணமாகக்கூடிய உணவுகளை எடுத்துக் கொள்ளலாம். அன்றிரவு பெருமாள் மந்திரங்களை உச்சரிப்பதும், விஷ்ணு சகஸ்ரநாமம் பாராயணம் செய்வதும் நல்ல பலன் தரும். திருவோண விரதத்தன்று மனமுருக பெருமாளை வழிபட்டு வந்தால், வாழ்வில் எத்தகைய தோல்விகளையும் நாம் சந்திக்க வேண்டிய அவசியம் இல்லை.

- Advertisement -