- Advertisement -
- Advertisement -

வீட்டை சுத்தம் செய்ய பயன்படும் துடைப்பம், மகாலட்சுமிக்கு இணையாக கருதப்படுகிறது. துடைப்பத்தை மிதிக்காதே.., துடைப்பத்தை யார் மீதும் படும்படி பெருக்காதே.. என்று நம் முன்னோர்கள் சொல்ல கேட்டிருப்போம். இந்தத் துடைப்பத்தை கையாளக்கூடிய முறைகளை பற்றிய ஆன்மீகம் சார்ந்த தகவல்களை தான் தொடர்ந்து காண இருக்கிறோம்.

துடைப்பத்தை எப்பொழுதும் நேராக நிமிர்த்தி வைக்க வேண்டும். கண்ட இடங்களில் கண்டபடி போட்டு வைக்கக் கூடாது. கீழே படுக்க வைக்க கூடாது. துடைப்பம் மகாலட்சுமி என்பதால் அதை தாண்டி செல்லக்கூடாது. நாம் நடக்கும் பாதையில் துடைப்பம் இருந்தால் அதை எடுத்து ஓரமாக வைத்துவிட்டு, பின்னர் கடந்து செல்ல வேண்டும், அப்படியே அதை தாண்டிச் செல்லக்கூடாது.

- Advertisement -

அந்தி சாய்ந்த பிறகு துடைப்பத்தை கையில் எடுக்கக்கூடாது. வீடு கூட்டி சுத்தம் செய்த பின்பு அந்த குப்பையை கூட்டி அப்படியே மூலையில் வைக்கக்கூடாது. குப்பையை மூலையில் வைத்தால் வீட்டில் சுபகாரியத் தடைகள் ஏற்படும். பெண்கள் இந்த காரியத்தை செய்தால் சுபகாரியங்களில் ஈடுபட முடியாமல் தடைகளை ஏற்படுத்தும் என்பார்கள். இரவு நேரங்களில் குப்பைகளை வெளியில் கொட்ட கூடாது என்பார்கள். கண்ணுக்குத் தெரியாத சிறு சிறு விலை உயர்ந்த பொருட்கள் தங்கம், வெள்ளி போன்றவை வீட்டில் தொலைந்து போயிருந்தால், பகலில் தான் அதை மீட்டு எடுக்க முடியும், அதனால் அந்தி சாய்ந்த பிறகு துடைப்பத்தை கையில் எடுக்காதே என்பார்கள்.

காலையில் அனைவரும் படுக்கையை விட்டு எழுந்த பிறகு துடைப்பத்தை வைத்து வீட்டை பெருக்க வேண்டும். வீட்டில் இருக்கும் யாரேனும் ஒருவர் தூங்கிக் கொண்டிருக்கும் சமயத்தில், வீட்டை பெருக்கக் கூடாது. குடும்பத்தில் இருப்பவர்கள் வீட்டை விட்டு வெளியே கிளம்பியதும் உடனே வீட்டை கூட்டிப் பெருக்கி சுத்தம் செய்யக்கூடாது. சிறிது நேரம் கழித்து சுத்தம் செய்யலாம்.

- Advertisement -

சிலர் துடைப்பத்தை கையில் வைத்துக் கொண்டு அக்கம் பக்கத்தினரிடம் கதை பேசிக் கொண்டிருப்பார்கள். துடைப்பத்தை கையில் வைத்துக் கொண்டு யாரிடமும் பேசக்கூடாது. புரணி பேசுவது, அடுத்தவர்களின் கதை பேசுவது போன்றவற்றை கையில் துடைப்பம் இருக்கும் பொழுது செய்யாதீர்கள். இது உங்களிடம் இருக்கும் லட்சுமியை வெளியேற்றி விடும்.

துடைப்பத்தை எப்பொழுதும் நம் உயரத்தை விட உயர்ந்த இடத்தில் வைக்க கூடாது. சிலர் சுவற்றில் ஆணி அடித்து அதில் மாட்டி வைப்பார்கள். சுவற்றில் ஆணி அடித்து மாட்டுவது தவறில்லை! ஆனால் அது நம் உயரத்தை விட உயரமான இடத்தில் அமைந்திருக்கக் கூடாது. துடைப்பம் நம்மை விட ஒரு இன்ச் குறைவான உயரத்தில் வைக்க வேண்டும். நிலைவாசல் கதவிற்கு பின்னால் துடைப்பத்தை வைக்கக்கூடாது. மற்ற கதவுகளுக்கு பின்னால் வைக்கலாம் தவறில்லை.

- Advertisement -

துடைப்பத்துடன் செருப்பை சேர்த்து வைக்கக் கூடாது, இது மகா பாவமாகும். செருப்பு வைக்கும் இடத்தில் தான் பலரும் துடைப்பத்தையும் வைக்கிறார்கள். செருப்பு மற்றும் துடைப்பத்தை ஒரே இடத்தில் வைக்காமல் தனித்தனியாக வையுங்கள். துடைப்பத்தை பீரோவின் பின்னால் வைக்கக்கூடாது. பணம் சேர்க்கும் பீரோவிற்கு அருகில் துடைப்பத்தை வைத்தால், இது உங்களிடம் இருக்கும் செல்வ வளத்தை குறைத்து விடும்.

இதையும் படிக்கலாமே:
சம்பளம் வாங்கியதும் செய்ய வேண்டியது

நீங்கள் வீடு கூட்டி பெருக்கும் பொழுது மற்றவர்கள் அமர்ந்திருந்தால் அவர்களை வேறு ரூமுக்கு மாற்றிவிட்டு சுத்தம் செய்வது நல்லது. பழைய உடைந்த துடைப்பத்தை பயன்படுத்தக் கூடாது. புது வீடு மாறும் பொழுது துடைப்பத்தை அங்கேயே விட்டு செல்லக்கூடாது. நல்ல நிலையில் இல்லாத துடைப்பத்தை குப்பையில் போடாமல் அதை எரித்து விடுங்கள். துடைப்பத்தை யாருக்கும் தானம் கொடுக்கக் கூடாது.

- Advertisement -