- Advertisement -
சுவாரஸ்ய தகவல்கள்

மிகப்பெரிய ஒரு அழிவை பற்றி முன்பே கூறிய ஞானியை பற்றி தெரியுமா ?

“ஞானிகள் எக்குலத்தில் பிறந்திருந்தாலும் அவர்களுக்கு சேவைகள் செய்து ஞானத்திற்கான வழியை அறிந்து கொள்” என்பது நான்கு வேதங்களை இயற்றிய நம் நாட்டின் பண்டைய ரிஷிகளின் வாக்காகும். அப்படி தன் குரு தேவர் “ஸ்ரீ ராமகிருஷ்ண பரமஹம்சருக்கு” பல வகையான சேவைகள் செய்து, அவரின் அருளால் இறைதரிசனம் பெற்றவர் “சுவாமி விவேகானந்தர்”. “சிகாகோ சர்வ மத மாநாட்டில்” நம் பாரதம் மற்றும் அதன் மதமான “ஹிந்து” மதத்தின் பெருமைகளை பற்றி எடுத்துரைத்து, அன்று ஒரே நாளில் உலகம் “இந்தியாவை” மரியாதையுடன் பார்க்கச் செய்ததை இந்தியர்களாக பிறந்த எவராலும் மறக்க முடியாது. அப்படியான அந்த வீரத்துறவியின் வாழ்வில் நடந்த ஒரு ஆச்சர்ய நிகழ்வை பற்றி இங்கு பார்க்கலாம்.

ஒரு சமயம் பேலூர் மடத்தில் உறங்கிக்கொண்டிருந்த சுவாமி விவேகாந்தர், நள்ளிரவில் தூக்கத்திலிருந்து எழுந்து மடத்தின் வராண்டாவில் உலவிக்கொண்டிருந்தார். அப்போது அவ்வரண்டாவில் தூங்கிக்கொண்டிருந்த விவேகானந்தரின் துறவி சீடர்கள் எழுந்து, விவேகானந்தர் உறங்காமல் ஏன் இவ்வாறு நள்ளிரவில் இங்கும் அங்கும் நடப்பதற்கான காரணத்தைக் கேட்டனர். அப்போது விவேகானந்தர் தான் உறங்கும் போது தன் தூக்கத்தில் “உலகில் எங்கோ ஓரிடத்தில் ஒரு அசம்பாவிதம் நடந்து, அதன் காரணமாக பல மக்கள் இறந்து, மேலும் பலர் உயிரைக் காக்க போராடும் காட்சிகளை” தான் கண்டதாக கூறினார்.

- Advertisement -

மேலும் இதனால், தான் மிகுந்த கவலை கொண்டதாகவும், அதன் பின் தனக்கு தூக்கம் வராததால் இவ்வாறு முற்றத்தில் உலவியதாக தன் சீடர்களிடம் கூறினார். அதற்கு அசீடர்கள், ஸ்வாமிகள் மக்களின் ஆன்மிக முன்னேற்றத்துக்காக கடுமையாக உழைப்பதால் ஏற்பட்ட உடல் மற்றும் மன உளைச்சலால் இது போன்ற கனவுகள் வந்திருக்க கூடும் என்று கூறி விவேகானந்தரை மீண்டும் சென்று உறங்குமாறு வேண்டினர். விவேகானந்தரும் உறங்கச் செல்ல, அச் சீடர்களும் உறங்கச் சென்றனர்.

இந்நிகழ்ச்சி நடந்து ஒன்றிரண்டு நாட்களுக்குப் பின் விவேகானந்தரின் சீடர்கள் கடைவீதிக்கு சென்ற போது, ஒரு நாளிதழை வாங்கிப்படித்துக்கொண்டிருந்தனர். அதில் “பிஜி தீவு” கூட்டங்களில் உள்ள ஒரு தீவில் இரண்டு நாட்களுக்கு முன்பு ஒரு மிகப்பெரிய எரிமலை வெடிப்பு ஏற்பட்டதாகவும், அதில் நூற்றுக்கணக்கான மக்கள் இறந்து போனதாகவும், பல பேர் இன்னும் அங்கு உயிருடன் சிக்கிக்கொண்டிருப்பதாகவும் செய்தி வந்திருந்தது.

சுவாமி விவேகானந்தர் இரண்டு நாட்களுக்கு முன்பாக தன் கனவில் கண்டதாக கூறிய அதே தினத்தில், அந்த நேரத்திற்கு சற்று முன்பாக இந்த அசம்பாவிதம் நடந்திருப்பதைப் படித்து ஆச்சர்யம் அடைந்த அச்சீடர்கள், அப்பத்திரிகையை நேரே தங்கள் குருவான விவேகானந்தரிடம் சென்று காட்டினர். அதற்கு விவேகானந்தர் “நான் எனது உள்ளுணர்வால் இத்தகைய சம்பவத்தை பற்றிக் மேலோட்டமாக கூறியும், நீங்கள் என்னை நம்பாதது என்னுடைய தவறு அல்ல” என்று கூறினார். இறைவனின் தூதரே மனித உருவில் தங்களுக்கு குருவாக வாய் த்திருந்தும், அவரை குறைத்து எடைபோட்டதற்காக அச்சீடர்கள் வருந்தினர்.

- Advertisement -