
இன்றைய காலத்தில் குழந்தைகளுக்கு துரித உணவுகள் என்பது மிகவும் பிடித்தமான ஒன்றாக திகழ்கிறது. இதை முடிந்த அளவிற்கு வீட்டில் செய்து தர சொல்லி வற்புறுத்துவார்கள். நாம் செய்து தர மாட்டோம் என்று கூறினால் உடனே கடைக்கு சென்று அவர்கள் விருப்பம் போல் சாப்பிடும் வழக்கமும் பலரிடம் இருக்கிறது. இந்த துரித உணவுகளில் மிகவும் குறிப்பிடத்தக்க ஒன்றாக திகழ்வதுதான் நூடுல்ஸ். நூடுல்ஸ் மைதா மாவால் செய்யப்படுவது. மேலும் அதில் இருக்கக்கூடிய மசாலா பொருட்களால் நம் உடலுக்கு கேடு விளைவிக்கும் தன்மை இருக்கிறது என்பது நமக்குத் தெரிந்தாலும் குழந்தைகளின் விருப்பத்திற்கு ஏற்றவாறு பல தாய்மார்கள் நூடுல்ஸ் செய்து தருகிறார்கள்.
இப்படி குழந்தைகளின் விருப்பத்திற்கு ஏற்றவாறு ஆரோக்கியமற்ற பொருட்களை செய்து தருவதற்கு பதிலாக அதே நூடுல்ஸை வீட்டில் சிறிது சிரமம் பார்க்காமல் ஆரோக்கியமான வகையில் செய்து கொடுப்பதன் மூலம் குழந்தைகளின் விருப்பத்தையும் நம்மால் பூர்த்தி செய்ய முடியும். அதேசமயம் ஆரோக்கியமான உணவையும் தர முடியும். இந்த சமையல் குறிப்பு குறித்த பகுதியில் கோதுமை மாவை வைத்து எப்படி வீட்டிலேயே நூடுல்ஸ் செய்வது என்று தான் பார்க்கப் போகிறோம்.
முதலில் கோதுமை மாவை ஒரு அகலமான பாத்திரத்தில் சேர்த்து அதில் மஞ்சள் தூள், கால் ஸ்பூன் உப்பு சேர்த்து அரை கப் அளவிற்கு சுடு தண்ணீரை சேர்த்து நன்றாக பிணைந்து கொள்ள வேண்டும். சப்பாத்தி மாவு பதத்தை விட கடினமாக இருக்குமாறு பார்த்துக் கொள்ள வேண்டும். மாவை பிணைந்த பிறகு முறுக்கு பிழியும் அச்சில் ஓட்டை பெரிதாக இருக்கும் அச்சை சேர்த்து அதில் பிணைந்து வைத்திருக்கும் மாவை போட்டுக்கொள்ள வேண்டும்.
இப்பொழுது அடுப்பில் ஒரு அகலமான பாத்திரத்தை வைத்து அதில் நான்கு கப் அளவு தண்ணீர் ஊற்றி அதனுடன் ஒரு ஸ்பூன் அளவிற்கு உப்பு மற்றும் இரண்டு ஸ்பூன் அளவிற்கு எண்ணெயை சேர்த்து கொதிக்க விட வேண்டும். தண்ணீர் கொதிக்க ஆரம்பித்ததும் முறுக்கு அச்சில் போட்டிருக்கும் மாவை அந்த தண்ணீரில் பிழிந்து விட வேண்டும். பத்து நிமிடம் இது வேகட்டும். பத்து நிமிடத்தில் கோதுமை மாவு நூடுல்ஸ் வெந்துவிடும்.
இதை கரண்டியை பயன்படுத்தி எடுத்து சாதாரண தண்ணீரில் போட்டு வைத்து விட வேண்டும். இப்படி பிணைந்து வைத்திருக்கும் மாவு அனைத்தையும் நூடுல்ஸ் ஆக வேகவைத்து குளிர்ந்த நீரில் போட்டு வைத்துக் கொள்ள வேண்டும். இப்பொழுது ஒரு கடாயை அடுப்பில் வைத்து அதில் இரண்டு ஸ்பூன் எண்ணெய் ஊற்றி எண்ணெய் காய்ந்ததும் அதில் பொடியாக நறுக்கிய இஞ்சி, பூண்டு, பச்சை மிளகாய் மூன்றையும் சேர்த்து வதக்க வேண்டும்.
பிறகு நீளவாக்கில் நறுக்கிய வெங்காயத்தையும் அதில் சேர்த்து வதக்க வேண்டும். வெங்காயம் வதங்கிய பிறகு அதில் நீளவாக்கில் நறுக்கிய குடைமிளகாய் மற்றும் கேரட்டை சேர்த்து தேவையான அளவு உப்பையும் சேர்த்து நன்றாக வதக்க வேண்டும். பிறகு இதில் டொமேட்டோ சாஸ், வினிகர், சோயா சாஸ், சில்லி சாஸ் இவை அனைத்தையும் சேர்த்து நன்றாக வதக்க வேண்டும்.
காய்கறிகள் நன்றாக வெந்த பிறகு வேகவைத்து எடுத்து வைத்திருக்கும் கோதுமை மாவு நூடுல்ஸை அதில் சேர்த்து மிளகு சீரகப் பொடியையும் சேர்த்து நன்றாக கலந்து விட வேண்டும். சுவையான கோதுமை மாவு நூடு தயாராகிவிட்டது. இந்த நூடுல்ஸில் நாம் முட்டை, சிக்கன் என்று நம்முடைய விருப்பத்திற்கு ஏற்றவாறு சேர்த்தும் செய்யலாம்.
இதையும் படிக்கலாமே: சம்பா ரவை தோசை செய்முறை
சிறிது சிரமப்பட்டாலும் பரவாயில்லை குழந்தைகளுக்கும் வீட்டில் இருப்பவர்களுக்கும் ஆரோக்கியமான உணவை தர வேண்டும் என்று விரும்புபவர்கள் இந்த கோதுமை மாவு நூடுல்ஸ் செய்து தரலாம்.