
பொதுவாக சிக்கன் பிரியர்கள் அதிகமாகவே இருக்கிறார்கள். சிக்கன் என்றாலே அதில் சுவையான பலவகையான உணவுகளை சமைக்க முடியும். அதிலும் பெரும்பாலான உணவுகள் மிகவும் காரசாரமான சுவையில் தான் இருக்கும். அதன் சிவப்பு நிறத்தை பார்த்தாலே தெரியும் மிகவும் காரமாகவும், சுவையாகவும் இருக்கும் என்று. ஆனால் ஒருமுறை இவ்வாறான வெள்ளை சிக்கன் குருமாவை சமைத்து பாருங்கள். இதன் சுவை எப்போதும் நீங்கள் செய்யும் சிக்கன் மசாலாவின் சுவையை விட சற்று அதிகமாகவே இருக்கும். வாருங்கள் இதனை எப்படி செய்வது என்பதை தெரிந்து கொள்வோம்.
தேவையான பொருட்கள்:
சிக்கன் – அரை கிலோ, தயிர் – 3 ஸ்பூன், மிளகு தூள் – ஒரு ஸ்பூன், எண்ணெய் – 3 ஸ்பூன், பெரிய வெங்காயம் – 2, பச்சை மிளகாய் – 5, முந்திரி – 10, பிரிஞ்சி இலை – 3, ஏலக்காய் – 3, பட்டை – சிறிய துண்டு, சீரகம் – அரை ஸ்பூன், கொத்தமல்லி தழை – ஒரு கொத்து, உப்பு – ஒரு ஸ்பூன்.
செய்முறை:
முதலில் சிக்கனை நன்றாக சுத்தம் செய்து, அதனுடன் மூன்று ஸ்பூன் தயிர் மற்றும் ஒரு ஸ்பூன் மிளகுத் தூள் சேர்த்து நன்றாக கலந்து, அரைமணி நேரம் அப்படியே ஊற வைத்துக் கொள்ள வேண்டும்.
பின்னர் ஒரு மிக்ஸி ஜாரில் வெங்காயத்தை சிரிய துண்டுகளாக நறுக்கி சேர்த்து பேஸ்ட் பதத்திற்கு அரைத்துக் கொள்ள வேண்டும். அதன் பின் அதே மிக்ஸி ஜாரில் பச்சை மிளகாய் மற்றும் முந்திரி சேர்த்து அவற்றுடன் லேசாக தண்ணீர் சேர்த்து அதனையும் பேஸ்ட் பதத்திற்கு அரைத்துக் கொள்ள வேண்டும்.
பின்னர் ஒரு கடாயை அடுப்பில் வைத்து அதில் எண்ணெய் சேர்த்து எண்ணெய் நன்றாக காய்ந்ததும் பிரிஞ்சி இலை, பட்டை, சீரகம், ஏலக்காய் மற்றும் மிளகு இவை அனைத்தையும் சேர்த்து நன்றாக வதக்கிக் கொள்ள வேண்டும் பின்னர் அரைத்து வைத்துள்ள வெங்காயத்தை சேர்த்து பச்சை வாசனை போகும் வரை நன்றாக வதக்கிக் கொள்ள வேண்டும்.
சிறிது நேரத்திற்குப் பிறகு ஒரு ஸ்பூன் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து, நன்றாக வதக்கிக் கொண்டு, பிறகு அவற்றுடன் ஊற வைத்துள்ள சிக்கனை சேர்த்து கிளறி விட்டு, பத்திலிருந்து பதினைந்து நிமிடங்கள் நன்றாக வேகவைக்க வேண்டும்.
சிக்கன் நன்றாக வெந்ததும் அதனுடன் உப்பு சேர்த்து, அரைத்து வைத்துள்ள பச்சை மிளகாய் முந்திரி பேஸ்ட்டையும் சேர்த்து நன்றாகக் கொதிக்க விட வேண்டும். இவை அனைத்தும் சேர்ந்து சிறிது நேரம் நன்றாக கொதிக்கும் வரை அடுப்பினை சிறிய தீயில் வைத்துக் கொள்ள வேண்டும். பிறகு இறுதியாக கொத்தமல்லி இலைகளை தூவி அடுப்பை அனைத்து சிக்கன் குருமாவை இறக்கி விட வேண்டும்.
பூரி அல்லது சப்பாத்தியுடன் இந்த சிக்கன் குருமாவை சேர்த்து சாப்பிடும்போது பெரிய ரெஸ்டாரண்டில் சாப்பிடும் சுவையில் இருக்கும். எப்பொழுதும் செய்யும் சிக்கன் கிரேவியை விட இதன் சுவை சற்று வித்தியாசமாகத்தான் இருக்கும். இதனை சாதத்துடனும் சேர்த்து சாப்பிட அருமையான சுவையில் இருக்கும். நீங்களும் ஒருமுறை ட்ரை செய்து பாருங்கள்.