- Advertisement -
சமையல் குறிப்புகள்

உடலுக்கு குளிர்ச்சி தரக்கூடிய, வெயில் காலத்திற்கு ஏற்ற புடலங்காய் பொரியலை இவ்வளவு சிம்பிளாக செய்ய முடியுமா? என்று ஆச்சரியப்படும் அளவிற்கு சுவையான புடலங்காய் பொரியல்

- Advertisement -

தினமும் மதிய உணவுடன் சேர்த்து சாப்பிட ஏதாவது ஒரு பொரியல் இருந்தால் மட்டுமே சாதத்தை முழுவதுமாக சாப்பிட்டு முடிக்க முடியும். வெறும் குழம்பு சாதத்தை செய்து வைத்தால் அவர்கள் சாப்பிடும் அளவு மிகவும் குறைவாக தான் இருக்கும். எனவே இவ்வாறு தினமும் ஒரு பொரியலை செய்யும் பொழுது அது காய்கறி பொரியலாக இருந்தால் உடலுக்கு மிகவும் நன்மை தரக்கூடியதாக இருக்கும். அதேநேரத்தில் வெயில் காலத்தில் நீர் சத்துக்கள் அதிகம் நிறைந்த காய்கறிகளை சமைத்து கொடுத்தால் உடல் சூட்டைத் தணித்து, வயிற்று வலி, அஜீரண கோளாறு போன்ற தொல்லைகள் வராமல் தவிர்க்கும். அப்படி வெயிலுக்கு ஏற்ற ஒரு புடலங்காய் பொரியலை எவ்வாறு செய்ய வேண்டும் என்பதை பற்றி தான் இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளப் போகின்றோம்.

தேவையான பொருட்கள்:
புடலங்காய் – அரைக்கிலோ, வெங்காயம் – 1, பச்சை மிளகாய் – ஒன்று, வறமிளகாய் – 2, தேங்காய் – 2 சில்லு, கடுகு – அரை ஸ்பூன், சீரகம் – அரை ஸ்பூன், கடலைப்பருப்பு – ஒரு ஸ்பூன், எண்ணெய் – 2 ஸ்பூன், உப்பு – அரை ஸ்பூன், பூண்டு – 4 பல், கறிவேப்பிலை – ஒரு கொத்து.

- Advertisement -

செய்முறை:
முதலில் புடலங்காயின் மேலுள்ள தோலை சீவி, அதனை சுத்தமாக கழுவிக் கொள்ள வேண்டும். பிறகு அவற்றை இரண்டாக அரிந்து அதில் உள்ள சதைப் பற்றுள்ள பகுதியை அகற்றிவிட வேண்டும். பின்னர் புடலங்காயை பொடியாக நறுக்கிக் கொள்ள வேண்டும். பிறகு வெங்காயத்தையும் சிறு துண்டுகளாக நறுக்கிக் கொள்ள வேண்டும்.

பின்னர் பச்சை மிளகாயை இரண்டாகக் கீறிக் கொள்ள வேண்டும். இரண்டு வர மிளகாயை இரண்டு துண்டுகளாக கிள்ளி வைக்க வேண்டும். பின்னர் 4 பல் பூண்டை சிறிய உரலில் வைத்து தட்டி வைக்க வேண்டும். பின்னர் அடுப்பை பற்ற வைத்து, அதன் மீது ஒரு கடாயை வைத்து, கடாய் சூடானதும் அதில் இரண்டு ஸ்பூன் எண்ணெய் ஊற்ற வேண்டும்.

- Advertisement -

எண்ணெய் நன்றாக காய்ந்ததும் அதில் அரை ஸ்பூன் கடுகு, அரை ஸ்பூன் சீரகம் மற்றும் கறிவேப்பிலை சேர்த்து தாளித்து, அதன்பின் ஒரு ஸ்பூன் கடலைப் பருப்பு சேர்த்து பொன்னிறமாக வறுக்க வேண்டும். பின்னர் தட்டி வைத்துள்ள பூண்டு மற்றும் வரமிளகாய் சேர்த்து வதக்க வேண்டும். இவை அனைத்தும் நன்றாக சிவந்ததும் நறுக்கி வைத்துள்ள வெங்காயத்தை சேர்த்து பொன்னிறமாக வதக்கிக் கொள்ள வேண்டும்.

பின்னர் வெட்டி வைத்துள்ள புடலங்காயை சேர்த்து, அதனுடன் உப்பு மற்றும் மஞ்சள் தூள் சேர்த்து வதக்கி விட வேண்டும். பின்னர் தட்டு போட்டு மூடி சிறிது நேரம் வேக விடவேண்டும். புடலங்காய் வெந்து கொண்டிருக்கும் நேரத்தில் இரண்டு செல்லு தேங்காயை மிக்ஸி ஜாரில் சேர்த்து பொடியாக துருவிக் கொள்ள வேண்டும். பின்னர் புடலங்காய் நன்றாக வெந்ததும் அதில் துருவிய தேங்காயை சேர்த்து கிளறி விட்டு அடுப்பை அனைத்துவிட வேண்டும்.

- Advertisement -