
கார்த்திகை தீபத்தன்று இறைவனுக்கு நிவேதனமாக அப்பம் செய்து வைத்து வழிபாடு செய்வது நம்முடைய வழக்கம். இதை கார்த்திகை அப்பம் என்று சொல்லுவார்கள். பெரும்பாலும் இந்த அப்பத்தை பச்சரிசியை ஊற வைத்து, மாவு அரைத்து அதன் பின்பு தான் அப்பம் சுட்டு எடுப்பார்கள். ஆனால் கோதுமை மாவிலும் இன்ஸ்டன்டாக பத்தே நிமிடத்தில் கார்த்திகை அப்பத்தை சுலபமாக செய்து விடலாம். அரிசியை ஊற வைக்காமல் மாவை அரைக்காமல் மிக மிக சுவையாக இன்ஸ்டன்ட் அப்பம் செய்வது எப்படி என்பதைப் பற்றி இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்வோம்.
ஒரு அகலமான பாத்திரத்தை எடுத்துக்கொள்ளுங்கள். அதில் கோதுமை மாவு – 1 கப், பச்சரிசி மாவு – 1/2 கப், தேங்காய் துருவல் – 1/4 கப், உப்பு – 2 சிட்டிகை, ஏலக்காய் பொடி – 1/2 ஸ்பூன், இந்த பொருட்களை போட்டுக் கொள்ள வேண்டும். இந்தப் பொருட்களை எல்லாம் நன்றாக கலந்து அப்படியே தனியாக வைத்துக் கொள்ளுங்கள். (இப்போது இதில் வெல்லக் கரைசலை ஊற்றி கலக்கவேண்டும்.)
அடுத்தபடியாக 3/4 கப் அளவு வெல்லத்தை எடுத்து ஒரு பாத்திரத்தில் போட்டு, 1/2 கப் அளவு தண்ணீரை ஊற்றி இதை அடுப்பில் வைத்து வெல்லத்தை நன்றாக கரைத்துக் கொள்ள வேண்டும். இப்போது தயாராக இருக்கும் வெல்லக் கரைசலை வடிகட்டி, ஏற்கனவே தயாராக பௌலில் வைத்திருக்கும் கோதுமை மாவு, அரிசி மாவு கலவையுடன், வெல்லக் கரைசலை ஊற்றி கட்டி படாமல் முதலில் நன்றாக கரைத்து விட வேண்டும்.
வெல்லக் கரைசலில் இருக்கும் தண்ணீர் மட்டும் நமக்குப் போதாது. மீண்டும் கொஞ்சம் கொஞ்சமாக தண்ணீர் விட்டு இந்த மாவை இட்லி மாவு பதத்திற்கு கரைத்துக் கொள்ளுங்கள். இறுதியாக 2 டேபிள் ஸ்பூன் தண்ணீரில், 2 சிட்டிகை சோடா உப்பு சேர்த்து கரைத்து இந்த அப்ப மாவில் ஊற்றி கலந்து கொள்ள வேண்டும்.
சிலருக்கு சோடா உப்பு சேர்த்துக் கொள்வது பிடிக்காது. சோடா உப்புக்கு பதிலாக நன்றாக பழுத்த பெரிய வாழைப்பழம் ஒன்றை குழைத்து இந்த மாவோடு சேர்த்து கலந்து கொள்ள வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது. இப்போது நமக்கு அப்பம் செய்வதற்கு தேவையான மாவு தயார்.
அடுப்பில் ஒரு கடாயை வைத்து அதில் எண்ணெயை ஊற்றி நன்றாக சூடு செய்து கொள்ள வேண்டும். எண்ணெய் நன்றாக சூடு ஆன பின்பு அடுப்பை மிதமான தீயில் வைத்து விட்டு ஒவ்வொரு அப்பமாக ஊற்றி பக்குவமாக திருப்பிப் போட்டு பொன்னிறமாக வரும் வரை சிவக்க வைத்து எடுத்தால் சூப்பரான கார்த்திகை அப்பம் தயார்.
குழியாக இருக்கும் கடையில் அப்பத்தை சுட்டு எடுத்தால் ஒவ்வொன்றாக தான் சுட்டு எடுக்க வேண்டும். அகலமான பேன் உங்கள் வீட்டில் இருந்தால் அதில் எண்ணெயை ஊற்றி விட்டு நான்கு அல்லது ஐந்து அப்பத்தை கூட பொரித்து எடுத்து விடலாம். இந்த அப்பம் மேலே கொஞ்சம் மொறுமொறு எனவும் உள்ளே பஞ்சு போலவும் இருக்கும். உங்க வீட்ல கார்த்திகை தீபத்திற்கு இந்த அப்பத்தை ஒருமுறை ட்ரை பண்ணி பாருங்க. நிச்சயம் எல்லோருக்கும் பிடிக்கும்.