
நாளைய தினம் 11-10-2024 ஆயுதபூஜையானது கொண்டாடப்படவிருக்கிறது. இதை ஆயுத பூஜை என்றும் சொல்லலாம். சரஸ்வதி பூஜை என்றும் சொல்லலாம். நாம் அன்றாடம் பயன்படுத்தும் ஆயுதங்களுக்கு நன்றி செலுத்தும் வகையில், ஆயுத பூஜையாக இந்த நாளை கொண்டாடுகிறோம். கடைசி மூன்று நாட்கள் சரஸ்வதிக்கு சொந்தமானது. ஆகவே இதை சரஸ்வதி பூஜை என்றும் சொல்லலாம்.
கல்வி செல்வம் வீரம் இந்த மூன்றும் ஒரு சேர கிடைக்க வேண்டும் என்றால் இந்த நவராத்திரி நிறைப்படைய கூடிய ஒன்பதாவது நாளில் வீட்டில் பூஜை புனஸ்காரங்கள் நிறைவாக செய்து இறைவழிபாட்டை மேற்கொள்ள வேண்டும். இந்த நன்னாளில் நம்முடைய வியாபாரம் பல மடங்கு பெருக வேண்டும் என்றும் நம்முடைய அறிவாற்றல் சிறந்து விளங்க வேண்டும் என்றும், பிள்ளைகள் படிப்பில் சிறந்து விளங்க வேண்டும் என்றும், மன பயம் நீங்கி தைரியம் பிறக்க வேண்டும் என்றும் வழிபாட்டை மேற்கொள்வோம்.
அந்த வகையில் நாளைய தினம் நீங்கள் வழிபாடு செய்யும்போது கட்டாயம் பூஜையறையில் வைக்க வேண்டிய ஒரு பொருளைப் பற்றித்தான் இன்று நாம் தெரிந்து கொள்ளப் போகின்றோம். அது ஒன்றும் பெரிய அளவில் யாருக்கும் தெரியாத பொருள் அல்ல. எல்லோருக்கும் தெரியும். பத்து ரூபாய் கொடுத்தால் கூட கடைகளில் இருந்து வாங்கலாம்.
நாவல் பழம், நாவல் பழம் வைத்து ஆயுத பூஜையை கொண்டாட வேண்டும். அதோடு மட்டுமல்லாமல் வாங்கி வந்த நாவல் பழத்திலிருந்து 3 பழங்களை மட்டும் தனியாக எடுத்துக் கொள்ளுங்கள். அதன் மேலே இருக்கும் சதைகளை பிரித்துவிட்டு, கொஞ்சமாக தண்ணீரில் அந்த கொட்டைகளை கழுவி விடலாம். நாவல் பழத்திற்கு உள்ளே இருக்கும் விதை மட்டும் மூன்று நமக்கு தேவை.
எச்சில் படாமல் கொட்டைகளை தனியாக எடுத்து விடுங்கள். இந்த கொட்டைகளை ஒரு சின்ன கிண்ணத்தில் போட்டு சரஸ்வதி தேவிக்கும் முன்பாக வைத்து விடுங்கள். நெய்வேதியம் செய்யும்போது இந்த நாவல் பழக்கொட்டையையும் சரஸ்வதி தேவிக்கு நெய்வேதியம் செய்து விடுங்கள். நீங்கள் நாளைய தினம் செய்ய வேண்டிய ஆயுத பூஜையில் கட்டாயம் இந்த நாவல் கொட்டை இருக்கும்படி பார்த்துக் கொள்ளுங்கள்.
பூஜையை முடித்துவிட்டு நாளைய தினம் முழுவதும் இந்த கொட்டையானது பூஜை அறையில் இருக்கட்டும். நாளை இரவு 9:00 மணிக்கு மேலாக அந்த கொட்டையை எடுத்து ஒரு மஞ்சள் நிற துணியில் வைத்து முடிச்சு போட்டு உங்கள் பணம் வைக்கும் பெட்டியில் வைக்கலாம் அல்லது தொழில் செய்யும் இடத்தில் வைக்கலாம், ஆயுத பூஜையில் வழிபாட்டில் வைத்த இந்த நாவல் பழ கொட்டை எந்த இடத்தில் இருக்கிறதோ அந்த இடத்தில் கல்வி செல்வம் அறிவு திறமை வீரம் எல்லாம் நிறைந்திருக்கும் அதில் எந்த சந்தேகமும் கிடையாது.
பிள்ளைகள் படிக்கக்கூடிய புத்தகங்களை வைத்திருக்கும் அலமாரியில் கூட இந்த கொட்டையை வைக்கலாம் தவறு கிடையாது. அந்த முப்பெரும் தேவியரின் ஆசிர்வாதமும் இந்த நாவல் பழக்கொட்டையின் மூலம் உங்களுக்கு கிடைக்கும். இந்த கொட்டை அவ்வளவு எளிதில் கெட்டுப்போகாது. ஒரு வருடம் வரை அப்படியே வைத்த இடத்தில் இருக்கும்.
இதையும் படிக்கலாமே: புரட்டாசி மாத அஷ்டமி வழிபாடு
அடுத்த சரஸ்வதி பூஜை வரும்போது இதை எடுத்து கால் படாத இடத்தில் போட்டு விட்டு மீண்டும் புதிய கொட்டைகளை நம் பூஜையில் வைத்து பரிகாரத்திற்காக பயன்படுத்திக் கொள்ளலாம். மிக மிக எளிமையான இந்த பரிகாரம் உங்கள் வாழ்க்கையில் மிகப்பெரிய நல்ல மாற்றங்களை கொண்டு வரும் நம்பிக்கையோடு செய்து பாருங்கள். நாளைய தினம் அனைவருக்கும் ஆயுத பூஜை நல்வாழ்த்துக்கள் தெரிவித்து இந்த ஆன்மீகம் சார்ந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.