
உலகின் தற்போது வரை பேசப்படும் மிக பழமையான மொழிகளில் ஒன்றாக தமிழ் மொழி விளங்குகிறது. இந்த தமிழ் மொழியில் தற்கால சமுதாயத்திற்கும் பொருந்தும் வகையிலான நற்கருத்துக்கள் பொருந்திய நூல்கள் பல பழங்காலத்திலேயே இயற்றப்பட்டுள்ளன. அத்தகைய சிறந்த நூல்களில் ஒன்று தான் “திருக்குறள்”. இந்த திருக்குறள் நூலில் உள்ள 20 எளிமையான திருக்குறள் (20 easy thirukkural in Tamil) மற்றும் அந்த திருக்குறள் பொருள் குறித்த விவரங்களை இந்த பதிவில் பார்ப்போம்
1. அன்பிற்கும் உண்டோ அடைக்கும்தாழ்? ஆர்வலர்
புன்கண்ணீர் பூசல் தரும்
விளக்கம்: நம்மிடம் தோன்றும் அன்பை அடைத்து வைக்க பூட்டு என்று எதுவுமில்லை. சக மனிதரின் துன்பம் கண்டபொழுது, நம் கண்களில் கண்ணீர் பெருகுவதே நாம் உள்ளத்தில் கொண்டிருக்கும் அன்பை பறைசாற்றும் சிறந்த ஆதாரமாக இருக்கிறது.
2. சிற்றின்பம் வெஃகி அறன்அல்ல செய்யாரே
மற்றுஇன்பம் வேண்டு பவர்
விளக்கம்: தாம் செய்யும் அறத்தினால் கிடைக்கக்கூடிய நிலையானதாகிய பேரின்பத்தை விரும்புபவர்கள், எந்த சூழ்நிலையிலும் நிலையற்ற சுகபோகங்களை தரும் சிற்றின்பத்தை விரும்பி தவறான செயல்களில் ஈடுபட மாட்டார்கள்.
3. அறங்கூறான் அல்ல செயினும் ஒருவன்
புறங்கூறான் என்றல் இனிது
விளக்கம்: ஒரு மனிதன் ஒருபோதும் புண்ணியத்தைக் கொடுக்கும் அறச் செயல்களை பற்றி பேசவே மாட்டான். அதற்கு மாறாக பாவத்தைக் கொண்டு வரும் செயல்களை செய்பாவனாக இருக்கக்கூடும். எனினும், அவன் உலகத்தாரிடம் புறம் பேசும் பழக்கம் இல்லாதவன் என்கிற பெயரை பெறுவது சிறப்பு.
4. பல்லார் முனியப் பயனில சொல்லுவான்
எல்லாரும் எள்ளப் படும்
விளக்கம்:கேட்கும் அனைவரும் வெறுக்கத்தக்க படியான பயன்தராத சொற்களை தொடர்ந்து பேசுபவன், அறிவிற் சிறந்த மக்களால் மட்டுமல்லாமல் எல்லோராலும் இகழப்பட்டு, வெறுக்கப்படுவான்.
5. தீவினையார் அஞ்சார் விழுமியார் அஞ்சுவர்
தீவினை என்னும் செருக்கு
விளக்கம்: தீய வினைகளை ஏற்படுத்தக்கூடிய அறத்திற்கு புறம்பான செயல்களை செய்ய, எப்போதும் தீய எண்ணங்கள் செயல்பாடு கொண்ட மனிதர்கள் அஞ்சவே மாட்டார்கள். ஆனால் அறச்செயல் புரிந்து அதன்படி வாழும் மேலோர் தீய செயல்களைச் செய்ய மிகவும் அஞ்சுவர்.
6. வறியார்க்குஒன்று ஈவதே ஈகைமற்று எல்லாம்
குறியெதிர்ப்பை நீரது உடைத்து
விளக்கம்: வறுமை நிலையை அடைந்த மக்களுக்கு எவ்வித பிரதிபலனும் கருதாமல் அவர்களுக்கு ஒன்றை கொடுப்பதே சிறந்த கொடை எனப்படும். பிற எல்லா வகை கொடை செயல்களும் தமக்கென்று ஒரு பிரதிபலனை எதிர்பார்த்து செய்யப்பட்டதாகவே கருதப்படும்.
7. ஈதல் இசைபட வாழ்தல் அதுஅல்லது
ஊதியம் இல்லை உயிர்க்கு
விளக்கம்: இந்த உலகில் நீங்களும் வாழும் காலம் வரை கொடை எனப்படும் தானம் செய்யுங்கள். அப்படி தானம் செய்வதால் புகழ் பெற்று வாழுங்கள். பிறருக்கு தானம் செய்வதால் ஏற்படும் புகழ் மட்டுமே ஒரு உயிருக்கு இந்த பூமியில் கிடைக்கக் கூடிய சிறந்த ஊதியமாக இருக்குமே தவிர, மற்ற எதுவும் இல்லை.
8. அருட்செல்வம் செல்வத்துள் செல்வம் பொருட்செல்வம்
பூரியார் கண்ணும் உள
விளக்கம்: இந்த உலகில் கிடைக்க கூடிய செல்வங்களுள் அறிய செல்வமானது உயர்ந்த மனிதர்கள் தங்களின் மனதை எப்போதும் ஆளும் “அருள்’ எனப்படும் செல்வமே ஆகும். மற்றபடி அழிந்து போகும் நிலையற்ற பொருட் செல்வங்கள் இந்த உலகில் இழிவான மனிதர்களிடம் கூட இருக்கின்றன.
9. தன்ஊன் பெருக்கற்குத் தான்பிறிது ஊன்உண்பான்
எங்கனம் ஆளும் அருள்?
விளக்கம்: தன்னுடைய உடலை வளர்த்துக் கொள்ள பிற உயிர்களை கொன்று அவற்றின் ஊனை சாப்பிடுபவர்களுக்கு எவ்வாறு இறை அருள் கிடைக்கும்? மாறாக பிற உயிர்களை கொன்ற பாவம் மட்டுமே அவர்களைச் சேரும்.
10. உற்றநோய் நோன்றல் உயிர்க்குஉறுகண் செய்யாமை
அற்றே தவத்திற்கு உரு
விளக்கம்: பிறரால் தனக்கு ஏற்படக்கூடிய எத்தகைய துன்பங்களையும் பொறுத்துக் கொண்டு வாழ்தலும் அதே நேரம் தன்னால் பிற உயிர்களுக்கு எத்தகைய துன்பமும் நேராமல் வாழ்தல் ஆகிய இவை இரண்டு மட்டுமே தவம் செய்தலின் இலக்கணம் ஆகும்.
11. வஞ்ச மனத்தான் படிற்றொழுக்கம் பூதங்கள்
ஐந்தும் அகத்தே நகும்
விளக்கம்: ஒரு மனிதன் வெளியே துறவு வேடம் போட்டுக்கொண்டு இருந்தாலும், உள்ளே தனியாத காம எண்ணங்கள் அவனை வருத்திக் கொண்டு இருக்கும் போது, அவனது ஐம்பொறிகளும் அவனின் அந்த நிலையை அறிந்து தமக்குள்ளே கேலி செய்து எள்ளி நகையாடும்.
12. எல்லாமே வேண்டுவான் என்பான் எனைத்துஒன்றும்
கள்ளாமை காக்கதன் நெஞ்சு
விளக்கம்: நம்மை ஒருவரும் எந்த வகையிலும் இகழாமல் இருக்க வேண்டும் என நாம் விரும்பினால், நாம் பிறருக்கு உரிமையான எந்த ஒரு பொருளையும் திருடிக் கொள்ளும் எண்ணம் இல்லாமல் நம் மனதை காக்க வேண்டும்.
13. வாய்மை எனப்படுவது யாதுஎனின் யாதுஒன்றும்
தீமை இலாத சொலல்
விளக்கம்: அனைவராலும் உயர்ந்ததாக சிறப்பித்து கூறப்படும் வாய்மை என்பது யாதெனில், பிற எந்த உயிருக்கும் சிறிதும் தீங்கு தராத வகையிலான சொற்களை சொல்லுவதே ஆகும். அப்படி பிற உயிர்களுக்கு தீங்கு தரும் சொல்லாக இருக்குமேயானால் சொல்லப்படுகின்ற வாய்மையும், பொய்யாகவே கருதப்படும்.
14. செல்இடத்துக்கு காப்பான் சினங்காப்பான் அல்இடத்துக்கு
காக்கின்என்? காவாக்கால் என்?
விளக்கம்: தன் நிலைக்கு குறைந்த நிலையில் இருக்கும் நபர்கள் மீது சினம் வராமல் தடுத்தாட்கொள்பவனே சினம் காப்பவன் என கருதப்படுவான். அதே நேரம் தன்னுடைய சினம் செல்லுபடியாகாத தன்னை விட வலியவர்களிடம் தன்னுடைய சினத்தை வெளிப்படுத்தினாலும் அல்லது வெளிப்படுத்தாமல் மறைத்துக் கொண்டாலும் எந்தவித பயனும் கிடையாது.
15. சிறப்புஈனும் செல்வம் பெறினும் பிறர்க்குஇன்னா
செய்யாமை மாசுஅற்றார் கோள்
விளக்கம்: தீமையான செயல் செய்வதால் வாழ்க்கைக்கு பல சிறப்புகளை தருகின்ற மிகப் பெரும் செல்வம் கிடைப்பதாக இருந்தாலும், பிறருக்கு தீமை செய்யாமல் வாழ்வது என்கிற உயரிய கொள்கையை கொண்டு வாழ்வார்கள் மேல் மக்கள்.
16. அறவினை யாதெனின் கொல்லாமை கோறல்
பிறவினை எல்லாம் தரும்
விளக்கம்: மனிதர்கள் செய்யக்கூடிய அறச்செயல்களுள் மிகச்சிறந்த அறச்செயல் யாதெனின் பூமியில் வாழ்கின்ற எந்த ஒரு உயிரையும் கொலை செய்யாமல் இருப்பதுதான். மாறாக பிற உயிர்களை கொள்ளும் நபர் அனைத்து விதமான தீவினை பயன்களையும், அவரது வாழ்வில் அனுபவிக்க நேரிடும்.
17. நில்லாதவற்றை நிலையின என்றுஉணரும்
புல்லறி வாண்மை கடை
விளக்கம்: உலகின் மனிதர்கள் தாங்கள் பார்க்கின்ற அனைத்தின் பொய் தோற்றத்தையும் கண்டு, மயங்கி நின்று, அதன் ஆழ்ந்த உண்மையை பகுத்தாராய்ந்து உணராமல், நிலையில்லாத அனைத்து வகையானவற்றையும் நிலையானவை என நினைக்கும் மனிதர்களின் அறியாமை மிகவும் இழிவு உடையது.
18. யாதனின் யாதனின் நீங்கியான் நோதல்
அதனின் அதனின் இலன்
விளக்கம்: துறவு எண்ணம் கொண்ட மனிதனானவன் இந்த பூமியில் தனக்கு எது எல்லாம் வேண்டாம் என நினைக்கிறானோ, அதை எல்லாம் விட்டு விலகிச் செல்கிறான். துறவு நிலை கொண்ட மனிதன் எவற்றிடமிருந்தெல்லாம் விலகிச் செல்கின்றானோ, அவற்றால் அவனுக்கு இனி துன்பங்கள் ஏற்படுவதில்லை.
19. பொருளல்ல வற்றைப் பொருள்என்று உணரும்
மருளான்ஆம் மாணாப் பிறப்பு
விளக்கம்: உலகில் மெய்ப்பொருள் இல்லாதவற்றை மெய்யென உணர்ந்து நிற்கும் மயக்க உணர்வு மனிதர்களுக்கு இருக்கும் வரை, அவர்கள் இப்பூமியில் மாட்சிமை எனப்படும் பெருமை இல்லாத பிறவிகள் எடுத்து அல்லல்பட நேரும்.
20. ஆகுஊழால் தோன்றும் அசைவின்மை கைப்பொருள்
போகுஊழால் தோன்றும் மடி
விளக்கம்: ஒரு மனிதனுக்கு ஆக்கம் தருகின்ற தலைவிதி ஏற்படும் பட்சத்தில், அவனுக்கு மிகுந்த பொருள் ஈட்டுவதற்கான முயற்சி செய்யும் எண்ணம் தோன்றும். அதுபோல ஒரு மனிதனுக்கு, அவனுக்குரிய செல்வம் அழிவதற்கு காரணமான விதி ஏற்படுமானால், அவனுக்கு மிகுந்த சோம்பல் குணம் ஏற்படும்.
21. படைகுடி கூழ்அமைச்சு நட்பு அரண் ஆறும்
உடையான் அரசருள் ஏறு
விளக்கம்: சிறந்த ஆற்றல் மிக்க படைபலம், நல்ல குடிமக்கள், சிறந்த பொருள் வளம், அறிவிற் சிறந்த அமைச்சர்கள், உயர்ந்த குணங்கள் கொண்ட நண்பர்கள், நாட்டை காக்கும் அரண் – ஒரு சிறந்த அரசாங்கத்தின் அங்கங்களான இவை ஆறும் சிறப்பாக பெற்ற ஒரு அரசன் உலகில் இருக்கின்ற அரசர்களுக்கெல்லாம் தலைவனாகவும், சிங்கத்தை ஓத்த கம்பீரத்தை கொண்டவனாகவும் கருதப்படுவான்.
22. கற்க கசடறக் கற்பவை கற்றபின்
நிற்க அதற்குத் தக
விளக்கம்: ஒருவன் பெருமுயற்சி செய்து சிறந்த நூல்களை சேகரித்து, அந்த நூல்களில் இருக்கின்ற கருத்துக்கள் தெளிவாக புரியும் வகையில் நன்கு கற்க வேண்டும். நன்கு கற்றறிந்த பின், அந்த நூல்களில் கூறப்பட்டிருக்கும் நல் வழிகளை பின்பற்றி வாழ்வில் நிலைபெற வேண்டும்.
சிறந்த புலமை மிக்க இலக்கிய நூல்களை படைத்த பெருமை கொண்ட இந்திய நாட்டு மொழிகளில் ஒன்றாக தமிழ் மொழி திகழ்கிறது. அந்த தமிழ் மொழியில் எண்ணற்ற புகழ்பெற்ற நூல்கள் இருந்தாலும் 2000 ஆண்டுகளுக்கு முன்பாக வாழ்ந்த “திருவள்ளுவர்” என்னும் தெய்வப் புலவர் இயற்றிய “திருக்குறள்” என்னும் நூலை போன்ற காலங்களை கடந்து நின்று, உலகப் புகழ்பெற்ற நூல் எதுவும் இல்லை என கூறலாம். இந்த திருக்குறள் எனும் அற்புத நூல் உலகில் மதம், இனம், மொழி, பேதங்கள் என அனைத்தையும் கடந்து எல்லா மனிதர்களும் கடைப்பிடிக்கக் வேண்டிய வாழ்க்கை நெறிமுறைகளை தன்னுள்ளே கொண்டுள்ளது. எனவே தான் திருக்குறள் “உலகப் பொதுமறை” எனப் போற்றப்படுகிறது.
திருக்குறள் மிக சிறந்த நூல்களில் ஒன்று என்றாலும் அனைவருமே அந்நூலில் இருக்கின்ற அனைத்து குறல்களையும் படிப்பதற்கு வாய்ப்பில்லாமல் போய்விடுகிறது. அத்தகைய குறையைப் போக்கும் வகையில் திருக்குறள் நூலில் இருக்கின்ற 20 எளிய திருக்குறள் மற்றும் அந்த குறள்களுக்குரிய பொருள் விளக்கத்தை தான் இந்த பதிவில் கொடுத்துள்ளோம்.