
பித்ரு தோஷம் என்பது நம் முன்னோர்களுக்கு நாம் செய்ய வேண்டிய கடமைகளை சரிவர செய்யாததாலோ அல்லது அவர்களுக்கு மனவருத்தம் ஏற்பட்டதாலோ வரக்கூடிய ஒரு தோஷமாகும். இந்த தோஷம் நீங்க அமாவாசை தினத்தில், சில வழிபாடுகளை மேற்கொள்வது சிறந்தது. நாளை அமாவாசையில் பித்ரு தோஷம் நீங்க, செய்ய வேண்டிய பூஜை முறைகள் குறித்து இந்த ஆன்மீகம் சார்ந்த பதிவில் இனி விரிவாகப் பார்க்கலாம்.
அமாவாசை பூஜை செய்யும் முறை:
அமாவாசை அன்று அதிகாலையில் எழுந்து குளித்து சுத்தமாகி, விரதத்தை தொடங்க வேண்டும். முதலில் உங்கள் முன்னோர்களை மனதில் நினைத்து மனமுருகி வணங்க வேண்டும். அவர்களின் ஆசிர்வாதத்தை வேண்டி பிரார்த்திக்கவும். முடிந்தால், வீட்டில் ஒரு புரோகிதரை அழைத்து முன்னோர்களுக்கான சிரார்த்தம் (திதி கொடுப்பது) செய்யலாம். இதில் முன்னோர்களுக்குப் பிடித்த உணவுகளைப் படையலிட்டு, அவர்களுக்குப் படைக்க வேண்டிய பிண்டங்களை (அரிசி மாவால் செய்யப்படும் உருண்டை) அளிப்பார்கள்.
சிரார்த்தம் செய்ய முடியாதவர்கள், கையில் சிறிதளவு கருப்பு எள் எடுத்துக் கொண்டு, முன்னோர்களை நினைத்து, உள்ளங்கையில் எள் வைத்து நீர் விட்டு பிரார்த்தனை செய்யலாம். இந்த எள் அவர்களுக்கு உணவாகவும், நீர் குடிநீராகவும் செல்லும் என்பது நம் ஐதீகம். இவை வீட்டிலேயே செய்யப்படுபவை. புனிதமான நதிக்கரைகளில் அல்லது நீர்நிலைகளில் தர்ப்பணம் செய்வது இன்னும் நல்லது. ராமேஸ்வரம், கயா, திருப்புல்லாணி போன்ற தலங்கள் பித்ரு தோஷ நிவர்த்திக்கு மிகவும் பிரசித்தி பெற்றவை.
அமாவாசை அன்று பசுமாட்டிற்கு அகத்திக்கீரை வழங்குவது, காகங்களுக்கு சாதம் வைப்பது மற்றும் ஆதரவற்றவர்களுக்கு உணவு அளிப்பது மிகச் சிறந்த பரிகாரமாகும். இது முன்னோர்களின் ஆத்மா சாந்தி அடைய உதவும். குறிப்பாக, உங்கள் வீட்டின் அருகில் உள்ள பழமையான சிவாலயங்களுக்குச் சென்று, 9 ஏழைகளுக்கு அன்னதானம் செய்வது பித்ரு தோஷத்தைப் போக்கும். இதை 12 அமாவாசைகளுக்குத் தொடர்ந்து செய்வது மிகுந்த பலன் தரும்.
குலதெய்வத்தை தொடர்ந்து வழிபடுவது பித்ரு தோஷத்தின் தீவிரத்தைக் குறைக்கும். முக்கிய விசேஷ நாட்களில் குலதெய்வத்திற்குப் படையலிடும் போது, முன்னோர்களுக்கும் படைத்து அவர்களை மறக்காமல் வழிபட வேண்டும். ஆலமரத்திற்கு தண்ணீர் ஊற்றி, பித்ரு தோஷத்தால் ஏற்படும் தீமைகள் குறைய தினமும் சிவபெருமானை வழிபடுவது நல்லது.
ஜாதகத்தில் பித்ரு தோஷம் இருப்பவர்கள் ராமேஸ்வரம், திருப்புல்லாணி மற்றும் கயா அக்ஷயவடம் போன்ற இடங்களில் தில ஹோமம் செய்வது மற்றும் பிண்ட ஸ்ரார்தம் செய்வது பித்ரு தோஷத்தைப் போக்கும். புரட்டாசி மாதம் மகாளய பட்சத்தில் வரும் பரணி நட்சத்திரம் மிகவும் விசேஷமானது. அன்றைய தினம் பித்ருக்களுக்கு படையலிட்டு வழிபாடுகள் செய்தால், எவ்வளவு பெரிய பித்ரு தோஷமாக இருந்தாலும் நீங்கும்.
அட்சய திருதியை என்பது தங்கம் வாங்க மட்டுமல்ல, அன்றும் புரோகிதர்களை வீட்டுக்கு அழைத்து பித்ரு பூஜை செய்தால் தோஷங்கள் விலகி, பித்ருக்களின் கருணைப்பார்வை குடும்பத்தினர் மீது கிடைக்கும். பித்ரு தோஷம் நீங்க ஒருமுறை பரிகாரம் செய்தால் மட்டும் போதாது. தொடர்ச்சியாக அனைத்து அமாவாசை, முன்னோர் இறந்த திதி, மகாளயம் மற்றும் பித்ரு தினமான மக நட்சத்திரம் போன்ற தினங்களில் தர்ப்பணம், சிரார்த்தம் செய்து வருவது அவசியம்.
இதையும் படிக்கலாமே:
மச்சமுனி சித்தரின் தியான சக்தி
பித்ரு பூஜை செய்யும் போது உங்கள் மனம் உருகும் பிரார்த்தனையும், முழுமையான ஈடுபாடும் முக்கியம். நம் முன்னோர்கள் மற்றும் குலதெய்வம் தான் நமக்கு ஒரு பிரச்சனை என்றால் முதலில் கலங்குவார்கள். பித்ரு பூஜை செய்ய முடியாதவர்கள், அமாவாசை தினத்தில் அருகில் உள்ள சிவாலயம் சென்று ஈசனிடமும் முன்னோர்களுக்காக மனமுருகி வேண்டிக் கொள்ளலாம். இந்த வழிமுறைகளைப் பின்பற்றுவதன் மூலம் பித்ரு தோஷத்திலிருந்து விடுபட்டு, முன்னோர்களின் ஆசீர்வாதத்தைப் பெற்று வளமான வாழ்வைப் பெறலாம்.