
ஒருவருடைய வாழ்க்கையில் இருக்கக்கூடிய கஷ்டங்கள் பல இருந்தாலும் அதில் மிகவும் குறிப்பிடத்தக்கதாக திகழ்வது எதிரிகளின் தொல்லை, உடல்நல ஆரோக்கியம், கடன் பிரச்சினை போன்றவை தான். இவை அனைத்தையும் தீர்ப்பதற்கு தெய்வ வழிபாடு மிகவும் சிறந்ததாக கருதப்படுகிறது. அதிலும் குறிப்பாக ஆஞ்சநேயரின் வழிபாடு என்பது சிறப்புக்குரியதாக திகழ்கிறது. மேலும் ஆஞ்சநேயரை வழிபாடு செய்யும்பொழுது நமக்கு காரிய சித்தி உண்டாகும். தடைகள் அனைத்தும் நீங்கும் என்றும் கூறப்படுகிறது. அப்படிப்பட்ட ஆஞ்சநேயரை நாம் எந்த முறையில் வழிபட்டால் மகிழ்ச்சியான வாழ்க்கையை பெறலாம் என்று தான் இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் நாம் பார்க்க போகிறோம்.
என்றும் சிரஞ்சீவியாக திகழக்கூடியவராக இருப்பவர் தான் ஆஞ்சநேயர். ராமபிரானின் தீவிர பக்தனான ஆஞ்சநேயரை ராமா என்று கூப்பிட்டாலே ஓடி வந்து விடுவார் என்று தான் கூறப்படுகிறது. சிவபெருமானின் அம்சத்தில் பிறந்த குழந்தையாகவும் ஆஞ்சநேயர் திகழ்கிறார். அப்படிப்பட்ட ஆஞ்சநேயருக்கு பிடித்த மாதிரி நாம் வழிபட்டோம் என்றால் விரைவிலேயே அவர் நமக்கு அனைத்து பலன்களையும் தருவார் என்று கூறப்படுகிறது. அவருக்கு பிடித்தமான அந்த வழிமுறைகளை பற்றி தெரிந்து கொள்வோம்.
ஆஞ்சநேயருக்கு வெற்றிலை என்பது மிகவும் பிடிக்கும். மேலும் செந்தூரம் என்பதும் மிகவும் பிடிக்கும். காரணம் சீதாதேவி ஸ்ரீ ராமபிரான் நீண்ட நாட்கள் வாழ வேண்டும் என்பதற்காக தன்னுடைய உச்சி வகுட்டில் செந்தூரத்தை தான் வைத்தார்களாம். இதைக் கேள்விப்பட்டதும் ராமபிரான் என்றென்றும் ஆரோக்கியமாக இருக்க வேண்டும் என்பதற்காக எண்ணெயில் செந்தூரத்தை கலந்து தன் உடல் முழுவதும் தடவிக் கொண்டாராம் ஆஞ்சநேயர். அதனால் ஆஞ்சநேயருக்கு செந்தூரக் காப்பு செய்வது என்பது மிகவும் விசேஷம்.
ஒன்பது கிழியாத நல்ல வெற்றிலைகளை எடுத்து அதில் செந்தூரத்தால் ஸ்ரீ ராம ஜெயம் என்று எழுதி மாலையாக கட்டிய ஆஞ்சநேயருக்கு சாற்றி வழிபாடு செய்வதன் மூலம் ஆஞ்சநேயரின் அருள் பரிபூரணமாக கிடைக்கும். இந்த வழிபாட்டை செவ்வாய் மற்றும் சனிக்கிழமையில் செய்ய வேண்டும். தொடர்ச்சியாக ஒன்பது வாரங்கள் செய்ய வேண்டும். செவ்வாய்க்கிழமை செய்வதாக இருந்தால் 9 செவ்வாய்க்கிழமையும், சனிக்கிழமை செய்வதாக இருந்தால் 9 சனிக்கிழமையும் இந்த வழிபாட்டை மேற்கொள்ள வேண்டும்.
மேலும் ஆஞ்சநேயருக்கு பிரதக்ஷணம் செய்வது என்பது மிகவும் பிடித்தமான ஒன்று என்பதால் தொடர்ந்து 48 நாட்கள் 108 முறை ஆஞ்சநேயரை சுற்றி வருவது என்பது மிகவும் சிறப்பு. எந்த வேண்டுதலை வைத்து நாம் இந்த வழிபாட்டை செய்கிறோமோ அந்த வேண்டுதல் நிறைவேறும் என்றும் கூறப்படுகிறது. இதோடு மட்டுமல்லாமல் தொடர்ந்து 48 நாட்களும் 108 மிளகாய் கையில் வைத்துக்கொண்டு வலம் வந்து 49 வது நாள் அந்த மிளகை நுணுக்கி ஆஞ்சநேயருக்கு பானகம் தயார் செய்யும் பொழுது அதில் போட்டு நெய்வேத்தியமாக வைத்து அங்கு வரும் பக்தர்களுக்கு தருவதன் மூலம் நம்மை கஷ்டப்படுத்திக் கொண்டு இருக்கும் எதுவாக இருந்தாலும் அவை அனைத்தும் நீங்கும் என்று கூறப்படுகிறது.
மேலும் திருமண தடை இருப்பவர்கள் விரலி மஞ்சளை 108 என்ற எண்ணிக்கையில் வைத்துக்கொண்டு ஆஞ்சநேயரை வலம் வர வேண்டும். இப்படி 48 நாட்கள் செய்து முடித்த பிறகு இந்த மஞ்சளை பத்திரமாக வைத்துக் கொண்டு அவர்களுக்கு திருமணம் நடக்கும் பொழுது அட்சதை தயார் செய்வார்கள் அல்லவா அப்பொழுது இந்த மஞ்சளை அரைத்து தயார் செய்ய வேண்டும் என்றும் கூறப்படுகிறது.
இதையும் படிக்கலாமே: ருண விமோசன பரிகாரம்
மிகவும் எளிமையான இந்த ஆஞ்சநேயரின் வழிபாட்டை முழு நம்பிக்கையுடன் செய்பவர்களுக்கு அவர்கள் நினைத்துப் பார்க்க முடியாத அளவிற்கு மகிழ்ச்சியான வாழ்க்கை அமையும் என்ற தகவலை கூறி இந்த பதிவினை நிறைவு செய்து கொள்கிறோம்.