
வைகாசி மாதத்தில் மிகவும் சிறப்பு மிகுந்த நாளாக திகழ்வது வைகாசி விசாகம். அப்படிப்பட்ட வைகாசி விசாக நாளில் நம்மில் பலரும் முருகப்பெருமானை வழிபாடு செய்வோம். முருகப்பெருமானுக்காக விரதம் இருந்து முருகப்பெருமானை நினைத்து ஏதாவது ஒரு வேண்டுதலை முன்வைத்து செய்யக்கூடிய வழிபாடு என்பது மிகவும் சிறப்பு வாய்ந்ததாக கருதப்படுகிறது. அப்படிப்பட்ட நாளில் முருகப்பெருமானை நினைத்து எந்த முறையில் தீபம் ஏற்றினால் அஷ்ட ஐஸ்வர்யமும் உண்டாகும் என்றுதான் இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் நாம் பார்க்க போகிறோம்.
முருகப்பெருமான் அவதரித்த நாளாக கருதப்படுவது தான் வைகாசி மாதத்தில் வரக்கூடிய விசாக நட்சத்திரம். அன்றைய நாளில் முருகப்பெருமானை பல விதங்களில் பலரும் வழிபாடு செய்வார்கள். நம்முடைய வீட்டிலேயே மிகவும் எளிமையான முறையில் அதே சமயம் சக்தி வாய்ந்த ஒரு முருக வழிபாடாக தான் தீப வழிபாடு திகழ்கிறது. ஏனென்றால் முருக பெருமான் தோன்றியது தீபச்சுடர் ஒளியின் வடிவத்தில் தான் என்பதால் அன்றைய தினம் நாம் மறவாமல் தீப வழிபாட்டை மேற்கொள்ள வேண்டும்.
அப்படி நாம் செய்யக்கூடிய தீப வழிபாடு நம்முடைய வாழ்க்கையில் அனைத்து விதமான செல்வ செழிப்பையும் உண்டாக்கும் என்று கூறலாம். இந்த தீப வழிபாட்டை ஜூன் மாதம் ஒன்பதாம் தேதி வைகாசி விசாக நாளில் ஆரம்பித்து தொடர்ச்சியாக மூன்று நாட்கள் செய்ய வேண்டும். வைகாசி விசாக நாள் அன்று காலையிலேயே பிரம்ம முகூர்த்தத்தில் எழுந்து சுத்தமாக குளித்து முடித்துவிட்டு வீடு பூஜை அறையையும் சுத்தம் செய்து முருகப்பெருமானின் படத்திற்கு செவ்வரளி மலர்களை சாற்றி செவ்வாழையை நெய்வேத்தியமாக வைத்து அவருக்கு முன்பாக ஆறு நெய் தீபங்களை ஏற்றி வைக்க வேண்டும்.
பிறகு அந்த தீபங்களை பார்த்தவாறு “ஓம் சௌம் சரவணபவ” என்னும் மந்திரத்தை 108 முறை கூற வேண்டும். இப்படி கூறி முடித்த பிறகு கற்பூர தீப தூப ஆராதனை காட்டி வழிபாட்டை நிறைவு செய்து விட வேண்டும். அன்றைய தினம் மட்டுமல்லாமல் அடுத்து வரக்கூடிய ஜூன் 10ஆம் தேதியும், 11ஆம் தேதியும் பிரம்ம முகூர்த்தத்தில் எழுந்து சுத்தமாக தலைக்கு குளித்து முடித்துவிட்டு இந்த முறையில் முருகப்பெருமானுக்கு நெய்வேத்தியத்தை வைத்து முருகப்பெருமானுக்கு முன்பாக ஆறு நெய் தீபங்களை ஏற்றி வைத்து மந்திரத்தை கூறி வழிபாடு செய்ய வேண்டும்.
இந்த மூன்று நாட்களும் அசைவத்தை தவிர்த்து விட்டு சுத்தமான முறையில் முருகப் பெருமானை வழிபாடு செய்பவர்களுக்கு முருகப்பெருமானின் அருளால் அனைத்து விதமான செல்வங்களும் கிடைக்கப்பெறும் அஷ்ட ஐஸ்வர்யத்துடன் சிறப்பான வாழ்க்கையை வாழ்வார்கள்.
இதையும் படிக்கலாமே:சகல பிரச்சினைகளையும் தீர்க்கும் ஞாயிறு பிரதோஷம்
முருகப்பெருமானுக்கு மிகவும் விசேஷமான ஒரு நாளாக கருதப்படக் கூடிய வைகாசி விசாக நாளோடு சேர்த்து அதை தொடர்ந்து வரக்கூடிய இரண்டு நாட்களும் இந்த முறையில் வழிபாடு செய்பவர்களுக்கு முருகப்பெருமானின் அருளால் அஷ்ட ஐஸ்வர்யமும் உண்டாகும் என்ற தகவலை கூறி இந்த பதிவினை நிறைவு செய்து கொள்கிறோம்.