
தீபாவளி அன்று பலவித பலகாரங்கள் செய்து உறவினர்களுக்கும், அக்கம் பக்கத்து வீட்டினருக்கும் கொடுப்பது தமிழ் மரபாகும். அவ்வாறு இனிப்பு பலகாரங்கள், கார பலகாரங்கள் என பலவித உணவுப்பொருட்கள் சமைக்கப்படுகின்றன. அவ்வாறு கடையில் சென்று வாங்காமல் வீட்டிலேயே செய்யக்கூடிய ஒரு உணவுப் பொருள் தான் காரசாரமான மொறுமொறு மிக்ஸர். இதனை மிகவும் சுலபமாக செய்ய இங்கு கூறப்பட்டுள்ள வழிமுறைகளை சரியாக பின்பற்றி செய்து பாருங்கள். வாருங்கள் இதனை எவ்வாறு சமைப்பது என்பதே இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்வோம்.
தேவையான பொருட்கள்:
கடலை மாவு – 500 கிராம், எண்ணெய் – 500 கிராம், உப்பு – 3 ஸ்பூன், பெருங்காயத்தூள் – 2 ஸ்பூன், மஞ்சள் தூள் – ஒரு ஸ்பூன், கார மிளகாய் தூள் – 3 ஸ்பூன், சோடா உப்பு – அரை ஸ்பூன், பொட்டுக்கடலை – 150 கிராம், வேர்க்கடலை – 100 கிராம், வெள்ளை அவல் – 200 கிராம், பூண்டு – 15 பல், கறிவேப்பிலை – இரண்டு கைப்பிடி.
செய்முறை:
முதலில் 300 கிராம் கடலை மாவை ஒரு கிண்ணத்தில் எடுத்துக் கொண்டு, அதனுடன் ஒரு ஸ்பூன் மிளகாய்த்தூள், அரை ஸ்பூன் உப்பு, அரை ஸ்பூன் பெருங்காயத்தூள், அரை ஸ்பூன் மஞ்சள் தூள், ஓமம் ஊறவைத்த தண்ணீர் 3 ஸ்பூன் மற்றும் தண்ணீர் சேர்த்து இவற்றை முறுக்கு மாவு பிசைவது போல பிசைந்து கொள்ள வேண்டும்.
அதன் பின் அடுப்பை பற்ற வைத்து எண்ணணெய் ஊற்றி எண்ணெய் நன்றாக காய்ந்ததும் முறுக்குக் குழாயில் ஓமப்பொடி பிழிவதற்கான சல்லடையை சேர்த்து அதனுள் பிசைந்து வைத்துள்ள மாவை சேர்த்து, எண்ணெயில் முறுக்கு போல் பிழிந்து விடவேண்டும். பின்னர் முறுக்கு நன்றாக சிவந்ததும் வெளியே எடுக்க வேண்டும். இவ்வாறு மாவு அனைத்தையும் எண்ணெயில் பிழிந்து பொரித்து எடுக்க வேண்டும். பின்னர் அதனை ஒரு பாத்திரத்தில் வைத்துக்கொள்ள வேண்டும்.
அதன் பின் 200 கிராம் கடலை மாவுடன் ஒரு ஸ்பூன் மிளகாய்த் தூள், அரை ஸ்பூன் மஞ்சள்தூள், அரை ஸ்பூன் பெருங்காயத்தூள், அரை ஸ்பூன் சோடா உப்பு மற்றும் தண்ணீர் சேர்த்து தோசை மாவு பதத்திற்கு கரைத்துக் கொள்ள வேண்டும். அதன் பின் அதே கடாயில் மீது ஜார்னி கரண்டியைப் பயன்படுத்தி மாவை அள்ளி அந்தக் கரண்டியின் மீது ஊற்றி விட்டோம் என்றால் கண்டியிலிருந்து சொட்டு சொட்டாக மாவு எண்ணெயில் பூந்தி போல் விழ ஆரம்பிக்கும். இவை சிவந்து நன்றாக பொரிந்தும் அவற்றைத் தனியாக எடுக்க வேண்டும். இவ்வாறு மாவு அனைத்தையும் பூந்தியாக பொறித்துக் கொள்ள வேண்டும்.
அதன்பின் ஒரு சில்வர் வடிகட்டியை எண்ணையின் மீது வைத்து 150 கிராம் பொட்டுக் கடலையை அதில் சேர்த்து பொறித்துக் கொள்ள வேண்டும். அதன் பிறகு 100 கிராம் வேர்க்கடலையைப் அவ்வாறு பொரித்துக்கொள்ள வேண்டும். பின்னர் 200 கிராம் வெள்ளை அவலையும் இவ்வாறு பொரிக்க வேண்டும். அதன்பின் 15 பூண்டை நன்றாக இடித்து எண்ணெயில் சிவந்து வருமாறு பொரித்து எடுக்கவேண்டும். இறுதியாக இரண்டு கைப்பிடி கறிவேப்பிலையை எண்ணெயில் மொறு மொறுவென பொரித்து கொள்ள வேண்டும்.
இவ்வாறு பொரித்து வைத்துள்ள அனைத்து பொருட்களையும் ஒன்றாக ஒரு பாத்திரத்தில் சேர்த்து ஓமப்பொடியையும் உடைத்து கொண்டு, இவற்றுடன் ஒரு ஸ்பூன் மிளகாய்தூள், ஒரு ஸ்பூன் உப்பு சேர்த்து நன்றாக கிளறி விட வேண்டும். அவ்வளவுதான் சுவையான மிக்ஸர் கடையில் இருக்கும் அதே சுவையில் தயாராகிவிட்டது.