
பொதுவாகவே பீன்சை தனியாக பொரியல் செய்தால் யாரும் அவ்வளவு விருப்பமாக சாப்பிடமாட்டார்கள். பீன்ஸ் கேரட் பொரியல் அல்லது வெஜிடபிள் பிரியாணி உடன், வெஜிடபிள் குருமா உடன்தான் பீன்ஸை உணவில் நாம் சேர்த்துக் கொள்வோம். ஆனால் நார்ச்சத்து நிறைந்த இந்த பீன்சை ஒருவாட்டி இப்படி பொரியல் செஞ்சி கொடுத்து பாருங்கள். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை இன்னும் வேனும் வேனும் என்று கேட்கும் அளவிற்கு சுவை, இந்த பொரியலில் கிடைக்கும். அந்த அளவிற்கு சூப்பரான ரெசிபி உங்களுக்காக.
முதலில் கால் கிலோ அளவு பீன்ஸில் நார் எடுத்து மிக மிகப் பொடியாக நறுக்கி சுத்தம் செய்து வைத்துக் கொள்ளுங்கள். இது அப்படியே இருக்கட்டும்.
அடுத்தபடியாக ஒரு மிக்ஸி ஜாரை எடுத்துக்கொள்ளுங்கள். அதில் பூண்டு – 3 பல், சீரகம் – 2 ஸ்பூன், தேங்காய் பத்தை – 2, வர மிளகாய் – 2, பொட்டுக்கடலை – 1 ஸ்பூன், வேர்க்கடலை – 1 ஸ்பூன், இந்த பொருட்களை எல்லாம் சேர்த்து கொரகொரப்பாக அரைத்து வைத்துக் கொள்ள வேண்டும் இதுதான் பீன்ஸ் பொரியலுக்கு தேவையான மசாலா பொடி. இதுவும் அப்படியே இருக்கட்டும்.
இப்போது அடுப்பில் கடாயை வைத்து கொள்ளுங்கள். எண்ணெய் 2 ஸ்பூன் ஊற்றி எண்ணெய் நன்றாக காய்ந்ததும், அதில் கடுகு – 1 ஸ்பூன், உளுந்து – 1 ஸ்பூன், கடலைப்பருப்பு – 1 ஸ்பூன், கருவேப்பிலை – 1 கொத்து, சேர்த்து தாளித்து பருப்பு சிவந்ததும் சின்ன சைஸ் பெரிய வெங்காயம் – 1 பொடியாக நறுக்கி, எண்ணெயில் சேர்த்து 2 நிமிடம் போல வதக்கிக் கொள்ள வேண்டும்.
வெங்காயம் லேசாக வதங்கியவுடன் பொடியாக நறுக்கி வைத்திருக்கும் பீன்ஸை கடாயில் போட்டு எண்ணெயில் 2 நிமிடம் வதக்கி, லேசாக தண்ணீர் தெளித்து, தேவையான உப்புத் தூளைத் தூவி ஒரு மூடி போட்டு மிதமான தீயில் இந்த பீன்சை ஐந்திலிருந்து ஏழு நிமிடங்கள் வரை வேக வைத்து வைத்துக்கொள்ளுங்கள். இடையிடையே மூடியைத் திறந்து கிளறி விட்டுக் கொண்டே இருங்கள்.
பீன்ஸ் நன்றாக வெந்து கடாயில் இருக்கும் தண்ணீர் அனைத்தும் சுண்டியவுடன் ஏற்கனவே அரைத்து வைத்திருக்கும் மசாலா பொடியை கடையில் இருக்கும் பீன்ஸ் பொரியலில் சேர்த்து நன்றாக கலந்து விட்டு, மசாலா பொடியின் பச்சை வாடை போகும் வரை, இரண்டு நிமிடங்கள் வரை சூடு செய்து அடுப்பை அணைத்துவிட்டு இந்த பீன்ஸ் பொரியலை சுடச்சுட பரிமாறுங்கள். யாருமே வேணாம்னு சொல்ல மாட்டாங்க இதன் சுவை வித்தியாசமாகவும் இருக்கும். இதேபோல அவரக்காய் பொரியலை கூட ட்ரை பண்ணி பார்க்கலாம்.