- Advertisement -
சமையல் குறிப்புகள்

முட்டைகோஸ் மஞ்சூரியன் செய்முறை

இலை காய்கறிகளை நம்முடைய உணவில் நாம் அதிகமாக சேர்த்துக் கொள்வதன் மூலம் நமக்கு பல நன்மைகள் ஏற்படும். அப்படிப்பட்ட இலை காய்கறிகளில் ஒன்றாக திகழ்வதுதான் முட்டைகோஸ். முட்டை கோஸ் கூட்டாகவோ பொரியலாகுவோ செய்து தரும்போது பலரும் அதைச் சாப்பிட மாட்டார்கள். அப்படிப்பட்டவர்களுக்கு ரெஸ்டாரன்ட் ஸ்டைலில் முட்டைகோஸ் மஞ்சூரியனை செய்து தருவது எப்படி என்று இந்த சமையல் குறிப்பு குறித்த பகுதியில் பார்க்கப் போகிறோம்.

முட்டைகோசை நம்முடைய உணவில் நாம் சேர்த்துக் கொள்வதன் மூலம் புற்றுநோய் வளர்வதை தடுக்கிறது. அல்சரால் பாதிக்கப்பட்டவர்களுக்கு முட்டைகோஸ் ஜூஸ் சாப்பிடுவதால் நல்ல பலன் ஏற்படும். இதில் விட்டமின் சி அதிகம் இருப்பதால் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும். மேலும் இதில் பீட்டா கரோட்டின் இருப்பதால் கண்புரை வருவதை தடுக்கிறது. மேலும் இதை நாம் தினமும் சாப்பிடுவதன் மூலம் எடை குறைப்பு ஏற்படுகிறது. மலச்சிக்கலை போக்க உதவுகிறது. பொலிவான சருமத்தை பெறவும் உதவுகிறது.

- Advertisement -

தேவையான பொருட்கள்

  • துருவிய முட்டைகோஸ் – 2 கப்
  • இஞ்சி பூண்டு பேஸ்ட் – ஒரு டீஸ்பூன்
  • மிளகாய்த்தூள் – 1 1/2 டீஸ்பூன்
  • அரிசி மாவு – 1/4 கப்
  • சோள மாவு – 2 டேபிள் ஸ்பூன்
  • உப்பு – தேவையான அளவு
  • எண்ணெய் – ஒரு டேபிள் ஸ்பூன்
  • இஞ்சி – 1/2 இன்ச்
  • பூண்டு – 4 பல்
  • பச்சை மிளகாய் – 1
  • வெங்காயம் – 1
  • தக்காளி – 2
  • லவங்கம் – 1
  • சர்க்கரை – ஒரு டீஸ்பூன்

செய்முறை

முதலில் கோஸை துருவி கொள்ளுங்கள். அதை ஒரு மிக்சிங் பவுலில் சேர்த்துக் கொள்ளுங்கள். அடுத்ததாக இதில் இஞ்சி பூண்டு பேஸ்ட், மிளகாய்த்தூள், அரிசி மாவு, சோள மாவு, தேவையான அளவு உப்பு இவற்றை சேர்த்து தண்ணீர் ஊற்றாமல் ஐந்து நிமிடம் நன்றாக கலக்க வேண்டும். முட்டை கோஸில் நீர்ச்சத்து இருக்கும் என்பதால் ஐந்து நிமிடம் கலந்த பிறகு தேவையான அளவிற்கு சிறிது சிறிதாக தண்ணீரை தெளித்து மாவு பதத்திற்கு பிணைந்து கொள்ள வேண்டும்.

பிறகு இதை சிறு சிறு உருண்டைகளாக உருட்டி எடுத்து வைத்துக் கொள்ளுங்கள். ஒரு கடாயை அடுப்பில் வைத்து இந்த மஞ்சூரியனை பொறிப்பதற்கு தேவையான அளவு எண்ணெயை ஊற்றி ஒவ்வொரு உருண்டையாக போட்டு குறைந்த தீயில் வைத்து வேக வைத்து எடுக்க வேண்டும். இதை அப்படியே ஸ்னாக்ஸ் ஆகவும் குழந்தைகளுக்கு தரலாம். இப்பொழுது இந்த மஞ்சூரியனை தாளிப்பது பற்றி பார்ப்போம்.

- Advertisement -

அடுப்பில் ஒரு கடாயை வைத்து கடாய் சூடானதும் அதில் எண்ணெய் ஊற்ற வேண்டும். எண்ணெய் காய்ந்ததும் பொடியாக நறுக்கிய இஞ்சி, பொடியாக நறுக்கிய பூண்டு, பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய் இவற்றை சேர்த்து நன்றாக வதக்க வேண்டும். இவை அனைத்தும் நன்றாக வதங்கிய பிறகு பொடியாக நறுக்கிய வெங்காயத்தை சேர்த்து கண்ணாடி பதம் வரும் வரை வதக்க வேண்டும்.

பிறகு ஒரு மிக்ஸி ஜாரை எடுத்து அதில் இரண்டு தக்காளி, ஒரு லவங்கம், ஒரு டீஸ்பூன் சர்க்கரை சேர்த்து நன்றாக அரைத்து இதில் ஊற்ற வேண்டும். பிறகு இதற்கு தேவையான அளவு உப்பை சேர்த்து கொதிக்க விட வேண்டும். இது கொதிக்க ஆரம்பித்ததும் நாம் பொரித்து வைத்திருக்கும் முட்டைகோஸ் மஞ்சூரியனை இதில் சேர்த்து நன்றாக கலந்து விட வேண்டும். கிரேவியாக வேண்டும் என்று நினைப்பவர்கள் சோளமாவை தண்ணீரில் கலந்து இதில் ஊற்றி கொதிக்க வைத்து இறக்கலாம்.

இதையும் படிக்கலாமே:கருப்பு கவுனி அரிசி அல்வா செய்முறை

முட்டைகோஸின் சத்துக்கள் முழுமையாக கிடைக்க வேண்டும் என்றால் அதை பச்சையாக தான் சாப்பிட வேண்டும். அப்படி யாரும் சாப்பிட மாட்டார்கள் என்னும் பட்சத்தில் இந்த முறையில் செய்து கொடுத்து சிறிதளவாவது அதன் பயனை பெறுவோம்.

- Advertisement -