கருப்பு கவுனி அரிசி அல்வா செய்முறை

kavuni arisi halwa
- Advertisement -

பல அற்புதமான சத்துக்கள் நிறைந்த கவுனி அரிசியை நாம் நம்முடைய உணவில் சேர்த்துக் கொள்வதன் மூலம் நமக்கு பலவிதமான நன்மைகள் கிடைக்கும். ஆனால் இந்த கவுனி அரிசி பலரும் விரும்பி சாப்பிடுவது இல்லை. அப்படிப்பட்டவர்கள் விரும்பி சாப்பிடுவதற்காக செட்டிநாட்டில் மிகவும் பிரபலமாக திகழக்கூடிய கவுனி அரிசி அல்வாவாக செய்து தருவதன் மூலம் அனைவரும் சாப்பிடுவார்கள். இந்த கவுனி அரிசி அல்வாவை எப்படி செய்வது என்று இந்த சமையல் குறிப்பு குறித்த பகுதியில் பார்ப்போம்.

அதிக அளவில் நார்ச்சத்து மற்றும் ஊட்டச்சத்துக்கள் கொண்டதாக திகழ்கிறது. இதில் உள்ள நார்ச்சத்தால் கெட்ட கொழுப்பின் அளவு குறைக்கப்படுகிறது. இதனால் இதயம் ஆரோக்கியமாக திகழ்கிறது. மேலும் இது ரத்தத்தில் உள்ள குளுக்கோஸ் அளவை கட்டுப்படுத்துவதால் நீரிழிவு நோயை கட்டுப்படுத்த உதவுகிறது. மற்ற அரிசிகளுடன் ஒப்பிடும் பொழுது இதில் அதிக அளவு புரதச்சத்து இருப்பதால் உடலின் தசைகளை உருவாக்குவதிலும் உடலின் ஒட்டுமொத்த வளர்ச்சியிலும் முக்கிய பங்கு வகிக்கிறது.

- Advertisement -

தேவையான பொருட்கள்

  • கருப்பு கவுனி அரிசி – 50 கிராம்
  • தண்ணீர் – 150 எம்எல்
  • வெல்லம் – 100 கிராம்
  • தேங்காய் பால் – 50எம்எல்
  • ஏலக்காய் – 1/2 டீஸ்பூன்
  • நெய் – 60எம்எல்
  • முந்திரி – 50 கிராம்

செய்முறை

முதலில் கவுனி அரிசியை சுத்தமான தண்ணீரை ஊற்றி நன்றாக கழுவி முதல் நாள் இரவே ஊற வைத்துக் கொள்ளுங்கள். அதாவது 12 மணி நேரம் இந்த அரிசி ஊறவேண்டும். அரிசி ஊறிய பிறகு இதை மிக்ஸி ஜாரில் சேர்த்து 100 எம்எல் தண்ணீரை ஊற்றிய நன்றாக நைசாக அரைத்துக் கொள்ளுங்கள்.

இப்பொழுது ஒரு அடி கனமான கடாயை அடுப்பில் வைத்து அதில் நாற்பது எம் எல் தண்ணீர் ஊற்றி அதில் பொடித்து வைத்திருக்கும் 100 கிராம் வெல்லத்தை சேர்த்து நன்றாக பாகுபதத்திற்கு வரும் அளவிற்கு கரைய விடுங்கள். நாம் அரைந்து வைத்திருக்கும் கருப்பு கவுனி அரிசியை அதில் ஊற்ற வேண்டும். அடுத்ததாக 50 எம் எல் அளவிற்கு தேங்காய் பாலை எடுத்துக் கொள்ளுங்கள்.

- Advertisement -

அடுப்பில் கவுனி அரிசி மாவை ஊற்றியதும் கைவிடாமல் கிண்டி கொண்டே இருக்க வேண்டும். இல்லை எனில் கட்டி விழுந்து விடும். குறைந்தது 40 நிமிடம் ஆவது நாம் கிண்டி கொண்டே இருந்தால்தான் இது அல்வா பதத்திற்கு நன்றாக வெந்து வரும். இது சிறிது கெட்டியானதும் நாம் எடுத்து வைத்திருக்கும் தேங்காய் பாலை அதில் ஊற்றி மறுபடியும் நன்றாக கிளற வேண்டும். தேங்காய் பாலையும் உறிஞ்சிய பிறகு எடுத்து வைத்திருக்கும் நெய்யிலிருந்து இரண்டு ஸ்பூன், இரண்டு ஸ்பூன் என்ற வீதம் அவ்வப்பொழுது ஊற்றி ஊற்றி இதை நன்றாக கைவிடாமல் அடிபிடிக்காத அளவிற்கு மாற்றி மாற்றி கிண்ட வேண்டும்.

பத்து நிமிடம் கழித்து ஏலக்காய் தூள் முந்திரி பருப்பு போட்டு நன்றாக கிண்ட வேண்டும். இந்த அரிசி நாம் எவ்வளவு நெய்யை ஊற்றினாலும் அதை உறிஞ்சிக் கொள்ளும். அது எப்பொழுது வேகிறதோ அப்பொழுதுதான் சிறிது சிறிதாக நாம் ஊற்றிய நெய் எல்லாம் வெளியே தள்ளும். எப்பொழுது நெய் பிரிந்து வெளியே வருகிறதோ அப்பொழுதுதான் இந்த அரிசி வெந்து விட்டது என்று அர்த்தம். அதுவரைக்கும் நாம் கைவிடாமல் கிண்டி கொண்டே தான் இருக்க வேண்டும். நெய் வெளியே வந்த பிறகு அடுப்பை அணைத்துவிட்டு நாம் தயார் செய்து வைத்திருக்கும் கருப்பு கவுனி அரிசி அல்வாவை அப்படியே ஒரு பவுலில் மாற்றி சாப்பிட கொடுக்கலாம்.

இதையும் படிக்கலாமே: பச்சரிசி பன்னீர் கிரேவி செய்முறை

பல ஆரோக்கிய சத்து மிகுந்த கருப்பு கவுனியை இந்த முறையில் நாம் அல்வாவாக செய்து தருவதன் மூலம் சாப்பிட மாட்டேன் என்று அடம்பிடிப்பவர்களும் விரும்பி சாப்பிடுவார்கள். மீண்டும் வேண்டும் என்று கேட்பார்கள்

- Advertisement -