
பொதுவாக அசைவம் சமைக்கும் நாட்களில் வீட்டில் இருக்கும் அனைவரும் அதன் சுவையில் ஆழ்ந்து தங்களை மறந்து அதிகமாக சாப்பிடுவார்கள். ஆனால் சைவம் செய்யும் நாட்களில் அந்த அளவுக்கு சாப்பிட மாட்டார்கள். இதற்காக நாம் தினமும் அசைவம் சமைக்க முடியாது அல்லவா? ஆனால் அசைவ சுவையில் மிகவும் அருமையான சைவ குழம்பு செய்ய முடியும். அப்படி செய்யும் குழம்பில் ஒன்றுதான் காலிபிளவர் குழம்பு. இந்த சமையல் குறிப்பு குறித்த பகுதியில் சைவ சிக்கன் குழம்பான காலிஃப்ளவர் குழம்பு எப்படி செய்வது என்று பார்ப்போம்.
காலிஃப்ளவரில் விட்டமின் சி, பி, இ, கால்சியம், மெக்னீசியம், பாஸ்பரஸ், பொட்டாசியம், புரதச்சத்து, நார்ச்சத்து போன்றவை நிறைந்திருக்கிறது. காலிஃப்ளவரை நாம் உணவில் சேர்த்துக் கொண்டால் இதய நோய் வராமல் தடுக்கும். மேலும் எலும்புகள் வலுப்படுகின்றது. முடி வளர்ச்சிக்கு உதவி புரிகிறது. மன அழுத்தத்தை குறைக்கிறது. மூளை வளர்ச்சிக்கு நல்லது என்றும் கூறப்படுகிறது.
முதலில் ஒரு காலிபிளவர் பூவை எடுத்து அதை நறுக்கிக் கொள்ள வேண்டும். பிறகு கொதிக்கின்ற தண்ணீரில் நறுக்கிய பூக்களை போட்டு சிறிது மஞ்சள் தூளும், சிறிதளவு உப்பு போட்டு அரைவேக்காடு இருக்கும் அளவிற்கு வேகவைத்து எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும். நீரை சுத்தமாக வடித்து விட்டு, அரைவேக்காட்டில் இருக்கும் காலிஃப்ளவரில் ஒரு ஸ்பூன் மிளகாய்த்தூளும், சிறிதளவு உப்பும் சேர்த்து நன்றாக பிசைந்து அரை மணி நேரம் ஊற வைக்க வேண்டும்.
இப்பொழுது இந்த குழம்புக்கு தேவையான மசாலாவை வறுக்க ஆரம்பித்து விடுவோம். ஒரு கடாயை அடுப்பில் வைத்து அரை ஸ்பூன் அளவிற்கு எண்ணெய் ஊற்ற வேண்டும். எண்ணெய் காய்ந்ததும் அதில் மிளகு 1/2 ஸ்பூன், சீரகம் 1/2 ஸ்பூன், சோம்பு 1/2 ஸ்பூன், கசகசா 1/4 ஸ்பூன் இவை அனைத்தையும் போட்டு வறுக்க வேண்டும். சோம்பு சிவந்ததும் அதில் 5 பல் பூண்டு, 1/2 இன்ச் இஞ்சி, 2 பட்டை சேர்த்து வதக்க வேண்டும்.
பூண்டு லேசாக வதங்க ஆரம்பித்ததும் அதில் ஒரு ஸ்பூன் தனியா, 3 வர மிளகாய், 7 சின்ன வெங்காயம் மற்றும் 1/4 மூடி பொடியாக நறுக்கிய தேங்காய், 2 கொத்து கருவேப்பிலையும் சேர்த்து நன்றாக வதக்க வேண்டும். வெங்காயமும், தேங்காயும் நன்றாக வதங்கிய பிறகு அடுப்பை அணைத்துவிட்டு அதை ஆற வைக்க வேண்டும். ஆற வைத்த இந்த பொருட்களை சிறிது நீரூற்றி மிக்ஸியில் விழுதாக அரைத்துக் கொள்ள வேண்டும்.
இப்பொழுது அடுப்பில் ஒரு கடாயை வைத்து அதில் 4 ஸ்பூன் எண்ணெய் ஊற்றி, சிறிது சிறிதாக காலிஃப்ளவரை போட்டு எண்ணெயில் பொரித்து எடுக்க வேண்டும். காலிபிளவரின் நிறம் லேசாக மாறியதும் எடுத்து விடலாம். இவ்வாறு அனைத்து காலிஃப்ளவர்களையும் எண்ணெயில் பொரித்தெடுத்த பிறகு அந்த எண்ணையில் 1/2 ஸ்பூன் அளவிற்கு சோம்பு போட வேண்டும்.
சோம்பு சிவந்ததும் பொடியாக நறுக்கி வைத்திருக்கும் பெரிய வெங்காயம் ஒன்றை சேர்த்து நன்றாக வதக்க வேண்டும். வெங்காயம் நன்றாக வதங்கிய பிறகு அதில் பொடியாக நறுக்கி வைத்திருக்கும் 2 தக்காளியை சேர்த்து வதக்க வேண்டும். தேவையான அளவு உப்பையும் அதில் சேர்த்து 1/2 ஸ்பூன் கரம் மசாலாவையும் சேர்த்து நன்றாக வதக்க வேண்டும்.
தக்காளி நன்றாக வதங்கிய பிறகு அதில் நாம் ஏற்கனவே அறைத்து வைத்திருக்கும் மசாலாவையும் சேர்த்து நன்றாக வதக்க வேண்டும். மசாலாவில் இருந்து எண்ணெய் பிரிந்த பிறகு அதில் பொரித்து வைத்திருக்கும் காலிஃப்ளவரை போட்டு நன்றாக வதக்கி மூடி வைக்க வேண்டும்.
காலிபிளவர் மசாலாவுடன் நன்றாக சேர்ந்து எண்ணெய் பிரிந்த பிறகு அதில் தேவையான அளவு தண்ணீரை ஊற்றி கொதிக்க வைக்க வேண்டும். குழம்பு நன்றாக கொதிக்கும் பொழுது அதில் பொடியாக நறுக்கிய கருவேப்பிலை, கொத்தமல்லி, சிறிதளவு புதினா இவற்றை சேர்த்து ஒரு கொதி வந்ததும் இறக்கி விடலாம். சுவையான அருமையான சைவ சிக்கன் குழம்பு தயாராகி விட்டது.
இதையும் படிக்கலாமே: வீட்டிலேயே தேன்குழல் முறுக்கு சுடுவது இவ்வளவு ஈஸியா? கிருஷ்ண ஜெயந்திக்கு இந்த ரெசிபி மட்டும் தெரிந்தால் போதும் வீட்டிலேயே மொறு மொறு முறுக்கு சுட்டு அசத்தலாம்.
அசைவ சுவையில் சத்து மிகுந்த காலிஃப்ளவரை வைத்து சுவையான சைவ குழம்பு செய்து வீட்டில் இருக்கும் அனைவரையும் அசத்தி விடலாம்.