
தினமும் ஒரே மாதிரியான டிபன் வகைகளை சாப்பிட்டு அலுத்துப் போன நமக்கு பாஸ்தா ஒரு சிறந்த மாற்று தேர்வாக இருக்கும். பாஸ்தா முழு கோதுமையால் செய்யப்பட்ட வகைகளும் விற்பனைக்கு உள்ளன. எனவே ஆரோக்கியத்திற்கு எந்த ஒரு பாதிப்பும் ஏற்படாது. பாஸ்தா, மக்ரோனி என்று கூறப்படும் இந்த வகை உணவுகளை விறுவிறு உணவுப் பட்டியலில் சேர்த்துக் கொள்ளலாம். அந்த அளவிற்கு மிக சுலபமாக சட்டென செய்து விடக்கூடிய இந்த பாஸ்தா இப்படி செட்டிநாடு முறையில் செய்தால் இன்னும் சுவையாக இருக்கும். அதை எப்படி செய்யலாம்? என்பதை தெரிந்து கொள்ள தொடர்ந்து இந்த பதிவை நோக்கி பயணிப்போம்.
‘செட்டிநாடு பாஸ்தா’ செய்ய தேவையான பொருட்கள்:
மக்ரோனி/பாஸ்தா – ஒரு கப், தண்ணீர் – 3 கப், வெங்காயம் – 2, தக்காளி – 2, சமையல் எண்ணெய் – 3 டேபிள் ஸ்பூன், பூண்டு – 5 பல், கறிவேப்பிலை – ஒரு கொத்து, பச்சை மிளகாய் – 1, இஞ்சி பூண்டு பேஸ்ட் – அரை டீஸ்பூன், கேரட் – அரை கப், பட்டாணி – அரை கப், மஞ்சள் தூள் – கால் டீஸ்பூன், கரம் மசாலா – அரை டீஸ்பூன், மல்லி தூள் – அரை டீஸ்பூன், மிளகாய் தூள் – ஒரு டீஸ்பூன், கொத்தமல்லி – ஒரு கைப்பிடி அளவிற்கு, தக்காளி சாஸ் – ஒரு டீஸ்பூன், உப்பு – தேவையான அளவிற்கு.
‘செட்டிநாடு பாஸ்தா’ செய்முறை விளக்கம்:
முதலில் பாஸ்தா செய்ய ஒரு கப் அளவிற்கு பாஸ்தாவை மூன்று கப் அளவிற்கு தண்ணீர் ஊற்றி வேக வைத்துக் கொள்ள வேண்டும். மிதமான தீயில் 7 நிமிடங்கள் வரை வேக வைத்தால் சரியாக இருக்கும். அதன் பிறகு வடிகட்டி பச்சைத் தண்ணீரை அதன் மீது ஊற்றி பின்னர் தட்டில் உலர வைத்தால் உதிரி உதிரியாக வரும். இந்த அளவின்படி 3 பேர் வரை சாப்பிடலாம்.
பின்பு அடுப்பை பற்ற வைத்து அதில் அடி கனமான வாணலி ஒன்றை வையுங்கள். அதில் தேவையான அளவிற்கு எண்ணெய் ஊற்றி காய விடுங்கள். எண்ணெய் காய்ந்ததும் அதில் பொடிப் பொடியாக நறுக்கி வைத்துள்ள பச்சை மிளகாய் மற்றும் பூண்டு துண்டுகளைப் போட்டு வதக்குங்கள். அதனுடன் ஒரு இணுக்கு கறிவேப்பிலையை உருவி கழுவி போடுங்கள். பாஸ்தாவில் கறிவேப்பிலையா? என்று யோசிக்க வேண்டாம். செட்டிநாடு ஸ்டைலில் செய்யும் பொழுது இப்படி செய்தால் தான் ருசியாக இருக்கும்.
பின்னர் பொடிப்பொடியாக நறுக்கி வைத்துள்ள வெங்காயத்தை சேர்த்து நன்கு வதக்க வேண்டும். வெங்காயம் கண்ணாடி பதத்திற்கு வதங்கி வந்ததும், அதில் தேவையான அளவிற்கு உப்பு சேர்த்து தக்காளி பழங்களையும் போட்டு வதக்க வேண்டும். தக்காளி நன்கு மசிய வதங்கி வந்ததும் அதில் மஞ்சள் தூள், மல்லி தூள், மிளகாய் தூள் மற்றும் கரம் மசாலா தூள் ஆகியவற்றை சேர்த்து நன்கு பச்சை வாசம் போக வதக்க வேண்டும்.
மசாலா வாசம் போனதும் பட்டாணி, கேரட் மற்றும் உங்களுக்கு பிடித்தமான காய்கறி வகைகளையும் நறுக்கி சேர்க்கலாம். பின் லேசாக தண்ணீர் ஊற்றி கொதிக்க விடுங்கள். எண்ணெய் தெளிந்து வரும் சமயத்தில் தக்காளி சாஸ் மற்றும் கைப்பிடி அளவிற்கு கொத்தமல்லி தழையை நறுக்கி சேர்த்து அதனுடன் உலர வைத்துள்ள மக்ரோனி துண்டுகளையும் சேர்த்து இரண்டு நிமிடத்திற்கு நன்கு பிரட்ட வேண்டும். பின்னர் ரெண்டு நிமிடம் மூடி வைத்து திறந்து பார்த்தால் சுவையான செட்டிநாடு மக்ரோனி தயாராகிவிடும். இதனை மக்ரோனி, பாஸ்தா, நூடுல்ஸ் என்று எந்த வகைகளையும் சேர்த்து செய்து ருசிக்கலாம்.