- Advertisement -
ஆன்மிக தகவல்கள் | Aanmeega Thagaval

சோட்டாணிக்கரை பகவதி அம்மன் கோவில் பற்றி இதெல்லாம் தெரியுமா ?

வடக்கில் காஷ்மீர் முதல் தெற்கே கன்னியா குமரி வரை, கிழக்கே குஜராத் முதல் மேற்கே அருணாச்சல பிரதேசம் வரை நம் நாடு முழுக்க பல்லாயிரக்கணக்கான கோவில்கள் உள்ளன. ஒவ்வொரு மாநில கலாச்சாரம், வாழ்க்கை முறைக்கேற்றவாறு அந்த கோவிலின் பூஜைகள் மற்றும் சடங்குகள் பின்பற்றப்படுகின்றன. அந்த வகையில் தீய சக்திகளால் பாதிப்படைந்தவர்கள் அதிலிருந்து மீள வழிபடுவதற்கு நாடெங்கிலும் சில கோவில்கள் உள்ளன. அந்த வகையைச் சார்ந்த ஒரு புகழ் பெற்ற கோவில் தான் “சோட்டாணிக்கரை பகவதி அம்மன்” கோவில்.

மலையாள மக்களுக்கு நன்கு பரிட்சயமான இந்த “சோட்டாணிக்கரை பகவதி அம்மன் கோவில்” கேரள மாநிலம், எர்ணாகுளம் மாவட்டத்தில் அமைந்துள்ளது. இக்கோவிலின் புராணங்களின் படி இந்த கேரள பூமியில் தோன்றி ஆதி பாரத நாடு முழுவதும் “அத்வைத” தத்துவத்தை பரப்பிய “ஸ்ரீ ஆதி சங்கரர்” தன் சொந்த நாடான கேரளத்தில் சரஸ்வதி தேவிக்கு ஒரு கோவில் இல்லையே என்று எண்ணி அந்த சரஸ்வதி தேவியை இங்கு கோவில் கொள்ள செய்வதற்கு கடும் தவமிருந்தார். அவரின் தவத்திற்கு இணங்கிய சரஸ்வதி தேவி இங்கு வந்து கோவில் கொண்டதாக கூறப்படுகிறது.

- Advertisement -

இக்கோவிலின் சிறப்பம்சம் என்னவென்றால் இக்கோவிலின் முக்கிய தெய்வமான இந்த “பகவதி அம்மன்” காலையில் சரஸ்வதியாகவும், மதியத்தில் லட்சுமியாகவும், மாலையில் துர்கையம்மனாகவும் அலங்காரம் செய்யப்பட்டு வழிபடப்படுகிறாள்.

இக்கோவிலின் விசேஷமே “தீய ஆவிகள், ஏவல், செய்வினை” போன்ற தீய சக்திகளால் பாதிக்கப்பட்டவர்கள், இக்கோவிலின் பகவதி அம்மன் துர்கையாக அலங்கரிக்கப்பட்டிருக்கும் போது தரிசித்து பின்பு இக்கோவிலின் வளாகத்திலுள்ள ஒரு மிகப் பெரிய அரச மரத்தில் பாதிக்கப்பட்டவர்களின் முன்தலையில் இருக்கும் முடியை பிடுங்கி, ஒரு இரும்பு ஆணியில் சுற்றி அந்த மரத்தில் அடித்து விடுவதால், தீய சக்திகளால் பாதிக்கப்பட்டவர்கள் அதிலிருந்து விடுபடுவதாக இங்கு வந்து பலனடைந்தவர்கள் கூறுகிறார்கள். புகழ் பெற்ற இந்த கோவிலுக்கு மற்ற மாநில மக்களும் அதிகளவு வந்து வழிபடுகின்றனர்.

- Advertisement -