
இட்லி தோசை என்றாலே அதனுடன் தொட்டுக்கொண்டு சாப்பிட தேங்காய் சட்னி, பொட்டுக்கடலை சட்னி இவை இரண்டும் தான் பெரிய அளவில் செய்யப்படுகிறது. அதிலும் சற்று வித்தியாசமாக செய்ய நினைத்தால் வெங்காய சட்னி, தக்காளி சட்னி, கார சட்னி, பூண்டு சட்னி, மிளகாய் சட்னி இவற்றை செய்து கொடுக்கின்றனர். ஹோட்டல் மற்றும் ரெஸ்ட்டாரன்ட் சென்றாலும் இதே வகையான சட்னியை தான் இட்லி, தோசையுடன் சேர்த்து சாப்பிடுகின்றோம். ஆனால் உடலுக்கு ஆரோக்கியம் கொடுக்கக்கூடிய வகையில் சச்சு வைத்து இப்படி சுவையான சட்னியை ஒரு முறை செய்தால் போதும். இதன் சுவை அவ்வளவு அட்டகாசமாக இருக்கும். இதில் நார்ச்சத்து, புரதச்சத்து அதிகமாக இருக்கிறது. எனவே உடல் சூட்டை தணிக்கிறது, மலசிக்கள் பிரச்சனையை சரிசெய்கிறது. இவ்வாறு உடலுக்கு ஆரோக்கியம் தரக்கூடிய இந்த சௌசௌ சட்னியை எப்படி செய்ய வேண்டும் என்பதை இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்வோம் வாருங்கள்.
தேவையான பொருட்கள்:
சௌசௌ – 1, வெங்காயம் – 2, தக்காளி – 2, பூண்டு – 5 பல், வரமிளகாய் – 3, உளுத்தம்பருப்பு – ஒரு ஸ்பூன், கடலைப்பருப்பு – ஒரு ஸ்பூன், கடுகு – அரை ஸ்பூன், கறிவேப்பிலை – 2 கொத்து, புளி சிறிய துண்டு – 1,கொத்தமல்லி – ஒரு கொத்து, உப்பு – அரை ஸ்பூன், தேங்காய் – 2 சில்லு, எண்ணெய் – 3 ஸ்பூன்.
செய்முறை:
முதலில் சௌசௌ மீதுள்ள தோலை சீவி விட்டு, அதனை பொடியாக நறுக்கிக் கொள்ள வேண்டும். பிறகு வெங்காயம் மற்றும் தக்காளியை பொடியாக நறுக்கி வைக்க வேண்டும். பின்னர் பூண்டை தோல் நீக்கி வைக்க வேண்டும். இரண்டு சில்லு தேங்காயை பொடியாக நறுக்கி வைக்க வேண்டும்.
பிறகு அடுப்பை பற்ற வைத்து அதன் மீது ஒரு கடாயை வைத்து இரண்டு ஸ்பூன் எண்ணெய் ஊற்ற வேண்டும் என்னை நன்றாக காய்ந்ததும் அதில் ஒரு ஸ்பூன் கடலைப்பருப்பு ஒரு கப் உளுத்தம்பருப்பு சேர்த்து பொன்னிறமாக வறுத்துக் கொள்ள வேண்டும். பிறகு சிறிய துண்டு புளியை சேர்த்து நன்றாக வதக்க வேண்டும்.
அதன்பின் வர மிளகாய் சேர்த்து வதக்கி விட்டு, நறுக்கி வைத்துள்ள வெங்காயத்தை சேர்த்து பொன்னிறமாக வதக்கிக் கொள்ள வேண்டும். பின்னர் பூண்டு மற்றும் தக்காளியையும் சேர்த்து நன்றாக வதக்க வேண்டும். பிறகு நறுக்கி வைத்துள்ள சௌசௌவை சேர்த்து, அதனுடன் உப்பு சேர்த்து நன்றாக கலந்து விட வேண்டும்.
பிறகு இதனுடன் ஒரு கொத்து கறிவேப்பிலை மற்றும் ஒரு கொத்து கொத்தமல்லி தழை சேர்த்து நன்றாக வதக்கி விட்டு, ஒரு தட்டு போட்டு மூடி, 5 லிருந்து 10 நிமிடம் வேக வைக்க வேண்டும். பிறகு அடுப்பை அனைத்துவிட்டு, இவற்றை நன்றாக ஆற வைத்து, மிக்ஸி ஜாரில் சேர்த்து பேஸ்ட்டாக அரைத்துக் கொள்ள வேண்டும். அதன் பின்பு தாளிப்பு கரண்டியில் ஒரு ஸ்பூன் எண்ணெய் ஊற்றி, கடுகு மற்றும் கறிவேப்பிலை சேர்த்து தாளித்து, சட்னியுடன் சேர்த்து கலந்து விட்டால் சுவையான சௌசௌ சட்னி தயாராகிவிடும்.