
பெரும்பாலும் காலிபிளவர் பிடிக்காத குழந்தைகள் இல்லை என்றே சொல்லலாம். இன்று சிக்கனுக்கு அடுத்த படியாக இந்த காலிபிளவரை தான் குழந்தைகள் அதிக அளவு விரும்பி உண்கிறார்கள். இது சிக்கன் டேஸ்ட்டுடன் இருக்கிறது என்பது தான் இதில் முக்கியமான காரணம். சிக்கனை கொண்டு நாம் என்னென்ன வெரைட்டிகள் செய்யலாமோ அத்தனையும் இந்த காலிஃப்ளவரரில் செய்யலாம். அது மட்டும் இல்லாமல் இது உடலுக்கும் நல்லது.
இந்த காலிபிளவர் புற்று நோய்களை எதிர்க்கும், இதயம் தொடர்பான நோய்களுக்கும் நல்ல மருந்து. அது மட்டுமின்றி குழந்தைகளின் மூளை வளர்ச்சிக்கும் இந்த காலிபிளவர் பெரிதும் உதவி செய்கிறது. இதை சிக்கன் சுவையில் சமைத்து கொடுப்பதால் குழந்தைகள் விரும்பி சாப்பிடுவார்கள். இப்போ காலிஃப்ளவர் பெப்பர் வறுவல் எப்படி செய்றதுன்னு பாக்கலாமா?
தேவையான பொருட்கள்: காலிபிளவர் – 1, பச்சைமிளகாய் – 5, மஞ்சள் தூள் -1 டேபிள் ஸ்பூன், பட்டை -1,கிராம்பு – 2, ஏலக்காய் -1, வெங்காயம் – 2, தக்காளி – 1, இஞ்சி பூண்டு விழுது -1 டீஸ்பூன், தனியாத்தூள் – 1 டீஸ்பூன், முந்திரி – 5, சோம்பு -1/2 டீஸ்பூன், மிளகு தூள் – 3 டீஸ்பூன், காய்ந்த மிளகாய் – 4, கருவேப்பிலை -1 கொத்து, இடிச்ச பூண்டு – 10 பல், உப்பு – 1 டேபிள் ஸ்பூன், எண்ணெய் – 2 டேபிள் ஸ்பூன், கொத்து மல்லி -சிறிதளவு.
முதலில் காலிஃப்ளவரை சுத்தம் செய்து சிறு சிறு துண்டுகளாக நறுக்கி சுடு தண்ணீர்ல் போட்டு எடுத்து வைத்துக் கொள்ளுங்கள். அதன் பிறகு அடுப்பை பற்ற வைத்து ஒரு பாத்திரத்தை வைத்து அதில் ஒரு கப் அளவிற்கு தண்ணீரை ஊற்றி கொள்ளுங்கள். பிறகு அதில் இலவங்கம், ஏலக்காய், பட்டை அனைத்தையும் சேர்த்து மூன்று பச்சை மிளகாய் நீளவாக்கில் நறுக்கி தண்ணீரில் போட்ட பிறகு, அலசி வைத்த காலிஃபிளவரையும் அதில் சேர்த்து சிறிதளவு மஞ்சள் தூள், சிறிதளவு உப்பு, சேர்த்து இதை ஒரு பாதி அளவுக்கு வெந்த பிறகு அடுப்பை அணைத்து விட்டு காலிஃபிளவரை தண்ணீர் இல்லாமல் வடித்து எடுத்து வைத்துக் கொள்ளுங்கள்.
அடுத்ததாக அடுப்பில் இன்னொரு கடாய் வைத்து அதில் எண்ணெய் ஊற்றிய பிறகு சோம்பும், இடித்த பூண்டையும் சேர்த்த பிறகு காய்ந்த மிளகாய், கருவேப்பிலை போட்டுக் கொள்ளுங்கள். அதன் பிறகு வெங்காயத்தை பொடியாக நறுக்கி அதில் சேர்த்து வெங்காயம் ஒரு பாதி அளவுக்கு வதங்கிய பிறகு இஞ்சி பூண்டு பேஸ்ட்டையும் சேர்த்து, அதுவும் நன்றாக வதங்கிய பிறகு முந்திரி, தனியா தூள், மஞ்சள் தூள், மிளகு தூள் ஒரு ஸ்பூன், உப்பு சேர்த்து நன்றாக வதக்கி கொஞ்சம் தண்ணீர் விட்டு இந்த மசாலாவை வேக வைத்து விடுங்கள். அதன் பிறகு வேக வைத்த காலிஃப்ளவர், பச்சை மிளகாய், தக்காளியை (தக்காளி முழுவதுமாக வதங்க தேவை இல்லை) சேர்த்து ஒரு ஸ்பூன் மிளகையும் சேர்த்து கொஞ்சம் எண்ணெய்யை மேலே ஊற்றி இரண்டு நிமிடம் அப்படியே பிரட்டி விடுங்கள். இவை அனைத்தும் நன்றாக வெந்த பிறகு கடைசியாக மீதமுள்ள மிளகு தூள், கொத்து மல்லி தழைகள் மேலே தூவி ஒரு தட்டு போட்டு முடி அடுப்பை அணைத்து விடுங்கள். ஒரு ஐந்து நிமிடம் வரை அப்படியே இருக்கட்டும். பிறகு எடுத்து பரிமாறலாம்.
இதையும் படிக்கலாமே: 10 நிமிடத்தில் முட்டைகோஸ் கூட்டு இவ்வளவு சுவையாக ஹோட்டல் ஸ்டைலில் நம் வீட்டிலேயே செய்யலாமா? இது தெரிஞ்சா இனி முட்டைக்கோஸ் அடிக்கடி வாங்குவீங்க!
சூப்பரான சுவையில் பெப்பர் காலிஃப்ளவர் வறுவல் தயாராகிவிட்டது. இது சாதம் சப்பாத்தி போன்றவைகளுக்கு ஒரு நல்ல சைடிஷ். நீங்கள் உங்க வீட்டில் இதை செய்து பாருங்கள், அப்புறம் நீங்க சிக்கன் பக்கம் போகவே மாட்டிங்க.