
குழந்தைகள் பள்ளி முடிந்து வீட்டிற்கு வந்ததும் ஏதாவது சாப்பிட வேண்டும் என்று கேட்பார்கள். அப்படி குறும்பு பிள்ளைகள் விருப்பமாக சாப்பிட சாண்ட்விச், பர்கர் போன்ற பல விதமான பாஸ் ஃபுட் உணவுகள் இருந்தாலும் நமது பாரம்பரிய உணவான போண்டா, பஜ்ஜி, வடை இவற்றிற்க்கு ஈடாகுமா? குழந்தைகள் ஆரோக்கியமாக சாப்பிடவும் இந்த உணவுகள் பெரிதும் துணைபுரிகின்றன. அவ்வாறு பஜ்ஜி, போண்டா செய்வதற்க்கு கடலை பருப்பு அத்தியாவசியமான ஒன்றாக இருக்கிறது. கடலை மாவில் குழந்தைகளின் உடல் வளர்ச்சிக்கு தேவையான புரதச்சத்து அதிகமாக இருக்கிறது. அதிலும் இந்த பஜ்ஜி மாவுடன் வெஜிடபிள் சேர்த்து, வெஜிடபிள் போண்டா செய்து கொடுத்தால் இன்னும் ஹெல்தியான உணவாக மாறி விடுகிறது. வாருங்கள் இந்த வெஜிடபிள் போண்டாவை எவ்வாறு செய்ய வேண்டும் என்பதைப் பற்றி இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்வோம்.
தேவையான பொருட்கள்:
கடலை மாவு – ஒரு கப், உப்பு – ஒரு ஸ்பூன், ஆப்ப சோடா மாவு – ஒரு சிட்டிகை, கேரட் – ஒன்று, பீன்ஸ் – ஐந்து, உருளைக்கிழங்கு – ஒன்று, பச்சைப்பட்டாணி – ஒரு கைப்பிடி, மிளகாய் தூள் – ஒரு ஸ்பூன், எண்ணெய் – கால் லிட்டர், பச்சை மிளகாய் – ஒன்று, எலுமிச்சை சாறு ஒ– ரு ஸ்பூன், சீரகம் – அரை ஸ்பூன், பெரிய வெங்காயம் – ஒன்று, கரம் மசாலாத்தூள் – அரை ஸ்பூன், கலர் பவுடர் – இரண்டு சிட்டிகை, கொத்தமல்லி தழை – ஒரு கொத்து, கருவேப்பிலை – ஒரு கொத்து.
செய்முறை:
முதலில் கேரட், பீன்ஸ், உருளைக்கிழங்கு, இவற்றைப் பொடியாக நறுக்கிக் கொள்ளவேண்டும் பிறகு வெங்காயம் மற்றும் பச்சை மிளகாய் சிறு துண்டுகளாக நறுக்கி வைக்க வேண்டும் அதன் பின்னர் அடுப்பை பற்ற வைத்து அதன் மீது ஒரு கடாயை வைக்க வேண்டும் பிறகு கடாய் நன்றாக சூடானதும் அதில் இரண்டு ஸ்பூன் எண்ணெய் சேர்க்க வேண்டும்.
என்னை நன்றாக காய்ந்ததும் அதில் அரை ஸ்பூன் சீரகம் சேர்த்து தாளிக்க வேண்டும். பின்னர் நறுக்கி வைத்துள்ள வெங்காயம், பச்சை மிளகாய் சேர்த்து வதக்க வேண்டும். அதன் பிறகு காய்கறிகளையும் சேர்த்து நன்றாக வதக்கி விட்டு, இவற்றுடன் தேவையான அளவு உப்பு சேர்த்து கலந்து விட வேண்டும்.
பிறகு இவற்றுடன் ஒரு ஸ்பூன் மிளகாய்த் தூள் சேர்த்து நன்றாக கலந்து விடவேண்டும். மிளகாய் தூள் வாசனை சென்றதும் இவற்றுடன் எலுமிச்சை பழச் சாறையும் சேர்த்து நன்றாக கலந்து விட்டு, காய்கறிகள் சுருண்டு வந்ததும் அடுப்பை அனைத்துவிட்டு இவற்றை நன்றாக ஆற வைக்க வேண்டும்.
பிறகு ஒரு கப் கடலை மாவுடன் கலர் பவுடர், உப்பு மற்றும் தண்ணீர் சேர்த்து தோசை மாவு பதத்திற்கு கலந்து கொள்ள வேண்டும். பின்னர் காய்கறிகளை சிறு சிறு உருண்டைகளாக உருட்டி வைக்க வேண்டும். அதன் பிறகு அடுப்பின் மீது கடாயை வைத்து எண்ணெய் ஊற்ற வேண்டும். எண்ணெய் நன்றாக காய்ந்ததும் காய்கறி உருண்டைகளை கடலை மாவில் நனைத்து எண்ணெயில் போட்டு பொரித்து எடுக்க வேண்டும்.