
நாளை 22-5-2025 தசமி திதி. புரட்டாசி மாதம் வரும் தசமி திதியை, விஜயதசமியாக கொண்டாடுவோம். தசமி என்றால் அதற்கு இன்னொரு பெயர் வெற்றி. தசமி திதியில் நீங்கள் எந்த ஒரு காரியத்தை செய்தாலும் அது உங்களுக்கு வெற்றியைக் கொடுக்கும் என்பது நம்பிக்கை. புரட்டாசி மாதம் வரும் தசமி திதி மட்டுமல்லாமல், மாதம் வரும் தசமி திதிக்கும் சக்தி உண்டு.
தசமி திதியில் இரண்டு தசமி திதிகள் வரும். ஒன்று தேய்பிறை தசமி திதி, மற்றொன்று வளர்பிறை தசமி திதி. வாழ்க்கையில் வெற்றிகள் குவிய வேண்டும் என்றால் வளர்பிறை தசமி திதியில் வழிபாட்டை மேற்கொள்ள வேண்டும். கஷ்டங்கள் குறைய வேண்டும், கடன் சுமை கரைய வேண்டும், தீராத நோய் நொடிகள் விலக வேண்டும் என்றால், தேய்பிறை தசமி திதியில் அம்பாள் வழிபாடு செய்வது சிறப்பு.
அந்த வகையில் நாளைய தினம் வரவிருக்கும் தசமி திதியில், நாம் செய்ய வேண்டிய ஒரு எளிமையான அம்பாள் வழிபாட்டையும், ஒரு எளிமையான அம்பாள் பரிகாரத்தையும் தான் இன்றைய ஆன்மீகம் சார்ந்த பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ளப் போகின்றோம். நாளைய தினம் அதிகாலை வேலையிலேயே எழுந்து குளித்து விடுங்கள். பராசக்தியை மனதார நினைத்து வழிபாட்டில் எந்த தடையும் வரக்கூடாது என்று வேண்டி குளித்து விட வேண்டும்.
நாளைய தினம் உங்கள் வீட்டு பக்கத்தில் ஏதாவது ஒரு அம்மன் கோவிலுக்கு சென்று 10 மண் அகல் விளக்குகளை எடுத்து, நல்லெண்ணெய் அல்லது நெய் ஊற்றி தீபம் போட்டு அம்பாள் முன்பு அமர்ந்து ஒரு மணி நேரம் வேண்டுதல் வைக்க வேண்டும். அந்த ஒரு மணி நேரமும் உங்களுடைய மனது அம்மனை மட்டும் தான் நினைக்க வேண்டும். யாரிடமும் பேசக்கூடாது.
அந்த ஒரு மணி நேரமும் மனதை ஒருநிலைப்படுத்தி, மவுன விரதம் இருந்து, அம்பாளிடம் நீங்கள் என்ன வரம் கேட்டாலும் நிச்சயம் அது உங்களுக்கு கிடைக்கும். குறிப்பாக உங்கள் வாழ்க்கையில் இருக்கும் கஷ்டம் உங்களை விட்டு விலகி செல்ல இந்த வழிபாட்டை செய்யலாம். கடன் சுமை விலக வேண்டும். தீரா துன்பங்கள் நீங்க வேண்டும். நோய்நொடி விலக வேண்டும். எதிரிகள் விலக வேண்டும். இதுபோல ஏதாவது ஒரு பிரச்சனைக்கு பிரார்த்தனை வையுங்கள்.
இன்றைய காலகட்டத்தில் நாம் எல்லோருக்கும் சுமையாக இருப்பது கடன் சுமை தானே. இந்த கடன் தீர நாளைய தினம் மேல் சொன்னபடி ஒரு மணி நேரம் வழிபாட்டை மேற்கொண்டால், நிச்சயம் பல நாட்களாக உங்களுக்கு ஆட்டம் காட்டிக் கொண்டிருக்கும் கடன் கூட கூடிய சீக்கிரத்தில் அடைவதற்கு உண்டான வழியை அம்பாள் உங்களுக்கு காட்டிக் கொடுப்பாள். அதில் எந்த சந்தேகமும் கிடையாது. சரி நாளை எந்த ஒரு மணி நேரத்தில் இந்த வழிபாட்டை மேற்கொள்வது சிறப்பு.
இதையும் படிக்கலாமே: குரு பகவானை வசியம் செய்ய மந்திரம்
நாளை உங்களுக்கு நேரம் கிடைக்கும்போது, இந்த ஒரு மணி நேரம் வழிபாட்டை செய்யுங்கள். காலை 6 மணியிலிருந்து 7, அல்லது மாலை 6 மணியிலிருந்து 7 இந்த வழிபாட்டை செய்வது சிறப்பு. வாய்ப்பு உள்ளவர்கள் இந்த நேரத்தை பயன்படுத்திக் கொள்ளலாம். உங்கள் வீட்டு பக்கத்தில் எந்த அம்மன் கோவில் இருந்தாலும் சரி அந்த அம்மன் கோவிலுக்கு சென்று இந்த வழிபாட்டை மேற்கொள்ளவும். எளிமையான இந்த ஆன்மீகம் சார்ந்த வழிபாடு அனைவருக்கும் பயனுள்ளபடி அமையும் என்ற நம்பிக்கையில் இன்றைய பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.