
திண்டுக்கல் ஸ்டைலில் அசைவ பிரியாணி மட்டும்தான் செய்யமுடியும் என்பது கிடையாது. சில மசாலா பொருட்களை அரைத்து சேர்த்து, வெஜிடேபிள் பிரியாணியை வாசமாக சுவையாக சமைக்க முடியும். உங்களுக்கு மசாலா வாசம் ரொம்ப ரொம்ப பிடிக்குமா? இந்த திண்டுக்கல் பிரியாணி ரெசிபியை ஒரே ஒரு முறை உங்க வீட்ல ட்ரை பண்ணி பாருங்க. நிச்சயம் விடவே மாட்டீங்க. திரும்பத் திரும்ப வாரத்தில் ஒரு முறையாவது இந்த பிரியாணிய செஞ்சு சாப்பிடுவீங்க.
பின் சொல்லக்கூடிய அளவுகள் 2 டம்ளர் அளவு அரிசிக்கு சரியானதாக இருக்கும். உங்கள் வீட்டில் அளப்பதற்கு பயன்படுத்தும் டம்ளரில் இரண்டு டம்ளர் அளவு அரிசியை எடுத்துக் கொள்ள வேண்டும். சாப்பாட்டு அரிசி, சீரக சம்பா அரிசி, பாஸ்மதி அரிசி, எந்த அரிசியை வேண்டுமென்றாலும் இந்த பிரியாணி செய்ய பயன்படுத்திக் கொள்ளலாம். அது நம்முடைய விருப்பம் தான்.
முதலில் அரிசியை நன்றாக கழுவி விட்டு 15 லிருந்து 20 நிமிடங்கள் தண்ணீரில் ஊற வைத்துக் கொள்ள வேண்டும். அடுத்தபடியாக பிரியாணிக்கு பொடியாக நறுக்கிய கேரட், பீன்ஸ், உருளைக்கிழங்கு, பச்சைப் பட்டாணி, காலிஃப்ளவர் என்று உங்கள் விருப்பம் போல காய்கறிகளை தயார் செய்து சுத்தம் செய்து எடுத்து வைத்துக் கொள்ளுங்கள்.
அடுத்து பிரியாணிக்கு தேவையான மசாலா அரவை தயார் செய்ய வேண்டும். ஒரு மிக்ஸி ஜாரை எடுத்துக் கொள்ளுங்கள். அதில் ஏலக்காய் – 4, கிராம்பு – 4, பட்டை – 2, கல்பாசி – மிகச் சிறிய அளவு, ஜாதிபத்திரி – மிக சிறிய அளவு, சோம்பு – 1 ஸ்பூன், சேர்த்து இதை பொடியாக முதலில் அரைத்துக் கொள்ள வேண்டும். அதன் பின்பு இந்த பொடியோடு தோல் உரித்த பூண்டு பல் – 10, இஞ்சி – 1 1/2 இன்ச், தோல் உரித்த சின்ன வெங்காயம் – 20 பல், பச்சை மிளகாய் – 3, இந்த பொருட்களையும் சேர்த்து தண்ணீர் ஊற்றாமல் விழுதாக அரைத்துக் கொள்ளவேண்டும். சின்ன வெங்காயத்தில் தண்ணீர் விடும் அதுவே போதும். இந்த விழுதும் அப்படியே இருக்கட்டும். இப்போது பிரியாணியை குக்கரில் தாளித்து விடவேண்டும்.
அடுப்பில் குக்கரை வைத்து கொள்ளுங்கள். 4 டேபிள்ஸ்பூன் எண்ணெய் ஊற்றிக் கொள்ள வேண்டும். 1 ஸ்பூன் நெய் ஊற்றிக்கொள்ள வேண்டும். அதில் பிரியாணி இலை – 1, அன்னாசிப்பூ – 1, சோம்பு – 1 ஸ்பூன், சேர்த்து தாளித்து மிக்ஸியில் அரைத்து வைத்திருக்கும் விழுதை குக்கரில் இருக்கும் எண்ணெயில் ஊற்றி பச்சை வாடை நீங்கும் வரை வதக்கி விட வேண்டும்.
மசாலா எண்ணெயில் வதக்கி சுருண்டு வந்த பிறகு, 1/2 ஸ்பூன் அளவு மிளகாய்த்தூள், சேர்த்துக் கொள்ளுங்கள். மிளகாய் தூள் காரம் அதிகமாக தேவைப்படாது. பச்சை மிளகாய் சேர்த்து மசாலா அரைத்து வைத்திருக்கிறோம் அல்லவா? அடுத்தபடியாக தயிர் – 1/4 கப், சேர்த்து ஒருமுறை நன்றாக கலந்துவிட்டு, வெட்டி வைத்திருக்கும் காய்கறிகளையும் சேர்த்து, 1 கைப்பிடி அளவு புதினா, கொத்தமல்லி தழையை பொடியாக நறுக்கி போட்டு, 1/2 ஸ்பூன் உப்பு போட்டு காய்கறிகளை 2 நிமிடம் எண்ணெயிலேயே விதக்கி விடுங்கள்.
காய்கறிகள் வதங்கி வெந்தவுடன் அரிசிக்கு தேவையான அளவு தண்ணீரை ஊற்றிக் கொள்ளவேண்டும். 2 கப் சீரக சம்பா அரிசி என்றால் நமக்கு 4 கப் அளவு தண்ணீர் தேவைப்படும். பாசுமதி அரிசி என்றால் 2 கப் பாசுமதி அரிசிக்கு, 3 கப் அளவு தண்ணீர் ஊற்றினால் போதும். உங்கள் வீட்டில் அரிசி எப்படி வேகமோ அந்த அளவிற்கு தண்ணீரை ஊற்றி, நன்றாக கொதிக்கவிடுங்கள். தண்ணீர் நன்றாக கொதி வந்ததும் உப்பு காரம் சரிபார்த்துக் கொண்டு ஊற வைத்திருக்கும் அரிசியை தண்ணீரில் போட்டு, பாதி எலுமிச்சைபழ சாறை அதில் பிழிந்துவிட்டு, மீண்டும் இந்த பிரியாணி நன்றாக கொதித்து வர வேண்டும்.
அரிசி 1/2 பாகம் நன்றாக வெந்து தண்ணீர் பாதி சுண்டியவுடன் அடுப்பை மிதமான தீயில் வைத்து விட்டு, குக்கரை மூடி ஒரு விசில் வைத்தால் போதும். சீரக சம்பா அரிசி சூப்பராக வெந்துவிடும். உங்கள் வீட்டில் அரிசி எந்த எத்தனை விசிலுக்கு வேகமோ அத்தனை விசில் வைத்துக் கொண்டால் சரிதான். அந்த பக்குவம் உங்களுக்கு தான் தெரியும். அப்படியே இந்த விசில் வரும் போதே உங்கள் வீடு முழுவதும் கமகம பிரியாணி வாசம் மணக்கும். பிரஷர் அடங்கியவுடன் சுட சுட வெங்காய பச்சடி, ஒரு பக்கோடா உடன் இதை பரிமாறி பாருங்கள். நாக்கில் எச்சி ஊறுதா? மிஸ் பண்ணாம ஒரு வாட்டி ட்ரை பண்ணி பாருங்க இந்த பிரியாணி ரெசிபியை.