
இப்பொழுது இருக்கின்ற காலகட்டத்தில் ஏதாவது சாப்பிட தோன்றினால் வீட்டைவிட்டு வெளியே செல்வது என்பது சிரமமாக இருக்கிறது. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை விரும்பி சாப்பிடும் ஒரு ஸ்வீட்டை வீட்டிலேயே செய்து கொடுத்தால் போதும். இதன் சுவை அனைவருக்கும் மிகவும் பிடித்தமானதாக இருக்கும். இந்த ஸ்வீட்டுடன் சேர்க்கப்படும் பொருட்கள் உடலுக்கு மிகுந்த ஆரோக்கியம்னது என்பதால் தாராளமாக அனைவரும் சாப்பிடலாம். இந்த எளிமையான ஸ்வீட்டை ஆசைப்பட்ட உடனே செய்து சாப்பிட முடியும். அந்த அளவிற்கு இதனை செய்வதற்கு மிகவும் குறைந்த நேரம் தான் செலவாகும். வாருங்கள் இந்த ஸ்வீட்டை எப்படி செய்ய வேண்டும் என்று இந்தப் பதிவின் மூலம் தெரிந்து கொள்வோம்.
தேவையான பொருட்கள்:
ரவை – அரை கப், காய்ச்சிய பால் – கால் கப், சர்க்கரை – அரை கப், வாழைப்பழம் – 2, முந்திரி பருப்பு – 10, உப்பு – கால் ஸ்பூன், தேங்காய் – அரை மூடி, நெய் – 2 ஸ்பூன்.
செய்முறை:
முதலில் ஒரு பாத்திரத்தில் அரை கப் ரவை மற்றும் கால் கப் பால் சேர்த்து நன்றாக கலந்து விட்டு 15 நிமிடம் ஊற வைக்க வேண்டும். பிறகு இரண்டு வாழைப்பழங்களை பொடியாக நறுக்கிக் கொள்ள வேண்டும். பின்னர் அரை மூடி தேங்காயை தேங்காய் துருவலை பயன்படுத்தி நன்றாகத் துருவி வைத்துக்கொள்ள வேண்டும்.
பிறகு ஊற வைத்துள்ள ரவையுடன் அரை கப் சர்க்கரை, கால் ஸ்பூன் உப்பு சேர்த்து நன்றாக கலந்து விட வேண்டும். பிறகு இதனுடன் அரை கப் சர்க்கரை சேர்த்து கலந்து விட அவை சற்று இளக ஆரம்பிக்கும். பின்னர் பொடியாக நறுக்கிய வாழைப்பழங்கள் மற்றும் துருவி வைத்துள்ள தேங்காயயில் பாதியை இவற்றுடன் சேர்த்து ஒரு கரண்டியைப் பயன்படுத்தி அனைத்தையும் கலந்து விட வேண்டும். பிறகு 10 முந்திரியை பொடியாக உடைத்துக் கொண்டு இவற்றுடன் சேர்த்து கலந்து வைக்க வேண்டும்.
பின்னர் இவற்றை சிறிய உருண்டைகளாக பிடித்துக் கொண்டு தேங்காய் துருவலில் உருட்டி எடுக்க வேண்டும். இவ்வாறு அனைத்து மாவிலையும் உருண்டைகளாக பிடித்து தேங்காய் துருவலில் புரட்டி எடுத்து, ஒரு தட்டில் வைத்துக் கொள்ள வேண்டும். பிறகு அடுப்பின் மீது இட்லி பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி வைத்து, இட்லி தட்டின் குழிகளில் நெய் தடவிக் கொள்ள வேண்டும்.
பிறகு உருட்டி வைத்துள்ள உருண்டைகளை இட்லி தட்டில் வைத்து, இட்லி பாத்திரத்தை மூடி போட்டு மூடி, அடுப்பை வேகமான தீயில் வைத்து பத்திலிருந்து பதினைந்து நிமிடம் வேக வைக்க வேண்டும். ரவை உருண்டை வெந்ததும் அவற்றை ஒரு தட்டில் மாற்றி வைத்து, அதன் மீது சிறிதளவு தேங்காய் துருவல் மற்றும் சர்க்கரை தூவி சாப்பிட கொடுத்தால் போதும். வீட்டில் உள்ள அனைவரும் இதனை விருப்பமாக சாப்பிட்டு மகிழ்வார்கள் அந்த அளவிற்கு இதன் சுவை அவ்வளவு சூப்பராக இருக்கும்.