- Advertisement -
சமையல் குறிப்புகள்

ரோட்டுக்கடை ஸ்டைலில் மணக்க மணக்க முட்டை பொடிமாஸ் செய்வது எப்படி?

- Advertisement -

பெரும்பாலும் அசைவ பிரியர்களுக்கு முட்டை என்றால் மிக மிக பிடிக்கும். சில ரோட்டு கடைகளில் முட்டை பொடிமாஸ் அருமையான சுவையில் செய்வார்கள். ஆனால், ரோட்டுக் கடையில் செய்வது போல நம்முடைய வீட்டில் செய்தால், கடையில் கிடைக்கக்கூடிய வாசமும் சுவையும் கிடைக்கவே கிடைக்காது. ரோட்டுக் கடையில் செய்யக்கூடிய அதே பக்குவத்தில் நம்முடைய வீட்டில், நம் கையாலேயே முட்டை பொடிமாஸ் எப்படி செய்வது? தெரிந்து கொள்வோமா.

முதலில் அடுப்பில் ஒரு கடாயை வைத்துக்கொள்ளுங்கள். அதில் 2 டேபிள் ஸ்பூன் எண்ணெய் ஊற்ற வேண்டும். எண்ணெய் காய்ந்ததும் மிகப் பொடியாக துருவிய பூண்டு – 4 பல், சேர்த்து முதலில் அதை ஒரு நிமிடம் எண்ணெயில் வதக்கி விட வேண்டும். அதன் பின்பு மிகப் பொடியாக நறுக்கிய பெரிய வெங்காயம் – 2 சேர்த்து, ஒரு சிட்டிகை உப்பு சேர்த்து இந்த வெங்காயத்தை பொன் நிறம் வரும் வரை நன்றாக வதக்கி விடுங்கள்.

- Advertisement -

நீங்கள் நிறைய வெங்காயம் சேர்த்து இருந்தாலும், அந்த வெங்காயம் வதங்கியவுடன் சுருங்கி மிகக்குறைவான அளவு வந்துவிடும். வெங்காயம் வதங்கிய பின்பு தான் பொடியாக நறுக்கிய – 2 பச்சை மிளகாய்களை சேர்த்துக் கொள்ள வேண்டும். அடுத்து தக்காளியில் இருந்து பாதி தக்காளியை மட்டும் எடுத்துக்கொள்ளுங்கள். அந்த தக்காளியை மிகப் பொடியாக நறுக்கி வெங்காயத்துடன் சேர்த்து நன்றாக வதக்குங்கள். தக்காளியின் பச்சை வாடை நீங்கிய பின்பு, தேவையான அளவு உப்பு, மிளகாய் தூள் – 1 ஸ்பூன், மஞ்சள் தூள் – 1/2 ஸ்பூன், சேர்த்து மசாலாவின் பச்சை வாடை நீங்கும் வரை இரண்டு நிமிடம் போல வதக்கி விட்டு விடுங்கள். அதன் பின்பு இந்த வெங்காயம் தக்காளிக்கு 3 லிருந்து 4 முட்டைகள் வரை சேர்க்கலாம்.

முட்டைகளை உடைத்து கடாயில் இருக்கும் மசாலாவில் ஊற்றி விடுங்கள். முட்டையை ஊற்றி, உடனே கரண்டியை வைத்து கலக்கி விடக்கூடாது. முட்டையை உடைத்து ஊற்றும்போது ஒரு முட்டையின் மேல் இன்னொரு முட்டையை ஊற்ற வேண்டாம். கடாயில் பரவலாக முட்டைகளை ஊற்றிக் கொள்ளுங்கள். முட்டையை ஊற்றிய பிறகு இரண்டு நிமிடம் கழித்து ஒரு கரண்டியை வைத்து லேசாக கிளறி விடுங்கள். மீண்டும் ஒரு நிமிடம் கழித்து முட்டை 1/2 பாகம் வெந்தவுடன் கரண்டியால் நன்றாக கலந்துவிட்டால் முட்டை பொடிமாஸ் உதிரி உதிரியாக நமக்கு கிடைக்கும்.

- Advertisement -

முட்டை, முக்கால் பாகம் வெந்து வந்தவுடன், 1/2 ஸ்பூன் சிக்கன் மசாலாவை இந்த முட்டை பொடிமாசில் மேலே தூவி, முட்டையை நன்றாக பிரட்டி விட்டு உடனடியாக அடுப்பை அணைத்துவிடுங்கள். இதன் மேலே பொடியாக நறுக்கிய கறிவேப்பிலை கொத்தமல்லி தழை தூவி, அப்படியே சுடச்சுட பரிமாறுங்கள். கடையில் வாங்கும் முட்டை பொடிமாசின் டேஸ்ட் அப்படியே நமக்குக் கிடைக்கும்.

நீங்க முட்டை பிரியர்கள் ஆக இருந்தால், உங்களுக்கு முட்டை பொடிமாஸ் மிகவும் பிடிக்குமென்றால், நாளைக்கு இந்த முட்டை பொடிமாஸ் உங்க வீட்டில் ட்ரை பண்ணி பாருங்க. நிச்சயம் எல்லோரும் விரும்பி சாப்பிடுவாங்க.

- Advertisement -