
வெள்ளை சாதத்தோடு பிசைந்து சாப்பிட, ரசம் சாப்பாடு, தயிர் சாதம், சாம்பார் சாதத்திற்கு தொட்டுக்கொள்ள சூப்பரான ஒரு எள்ளுத் துவையல் எப்படி அரைப்பது என்பதை பற்றிதான் இந்த பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ளப் போகின்றோம். நம் வீட்டில் இருக்கும் பொருட்களை வைத்தே எள்ளை சேர்த்து இந்த துவையலை மிக மிக சுலபமாக 10 நிமிடத்தில் செய்து முடித்துவிடலாம். இந்த சூப்பர் ரெசிபியை இப்பவே தெரிஞ்சுக்கலாம் வாங்க.
முதலில் அடுப்பில் ஒரு கடாயை வைத்து 2 டேபிள் ஸ்பூன் அளவு எள் போட்டு பொரியும் அளவிற்கு வறுத்து எடுத்துக்கொள்ள வேண்டும். எள்ளு கருதிவிடக்கூடாது. கருப்பு எள், வெள்ளையில் இரண்டில் எதை வேண்டுமென்றாலும் பயன்படுத்திக்கொள்ளலாம். வருத்த இந்த எள்ளை உடனடியாக ஒரு தட்டில் மாற்றி நன்றாக ஆற வைத்துக் கொள்ளுங்கள்.
ஒரு மிக்ஸி ஜாரை எடுத்துக்கொள்ளுங்கள். அதில் வரமிளகாய் – 8, தோல் உரித்த பூண்டு பல் – 1, சிறிய நெல்லிக்காய் அளவு புளி, ஏற்கனவே வறுத்து ஆற வைத்திருக்கும் எள், இந்த பொருட்களை போட்டு முதலில் தண்ணீர் ஊற்றாமல் கொரகொரப்பாக மிக்சி ஜாரில் ஒரு ஓட்டு ஓட்டி எடுத்துக்கொள்ளுங்கள்.
அடுத்தபடியாக மிக்ஸி ஜாரில் அறைபட்ட இந்த பொடியில் தேவையான அளவு உப்பு, 1 கைப்பிடி அளவு தேங்காய் துருவல் சேர்த்து, கொஞ்சமாகத் தண்ணீர் தெளித்து, இதை துவையல் போல கெட்டியாக கொஞ்சம் கொரகொரப்பாக அரைத்து எடுத்துக்கொள்ள வேண்டும். அவ்வளவு தான். சூப்பரான எள்ளு துவையல் தயார்.
இந்தத் துவையலை மிக்ஸி ஜாரில் இருந்து வழித்து ஒரு சிறிய கிண்ணத்தில் வைத்துக் கொள்ளுங்கள். இதில் தேவைப்பட்டால் மேலே கொஞ்சம் நல்லெண்ணெய் ஊற்றி கலந்து விட்டு, இட்லி தோசைக்கு பரிமாறலாம். அப்படி இல்லை என்றால் இந்த துவையலை அப்படியே சாதத்தில் போட்டு ஒரு ஸ்பூன் நல்லெண்ணெய் விட்டு பிசைந்து சாப்பிடலாம். இந்த துவையலுக்கு காரம் கொஞ்சம் தூக்கலாக தான் இருக்க வேண்டும். அப்போது தான் இதன் சுவை நன்றாக இருக்கும்.
உடலுக்கு ஆரோக்கியம் தரும் இந்த துவையல் ரெசிபியை மிஸ் பண்ணாம உங்க வீட்ல ட்ரை பண்ணி பாருங்க.