
இந்த பிரிட்ஜ் அப்படிங்கிற ஒரு விஷயம் வந்த பிறகு நமக்கு பிரிட்ஜ் இல்லாம வீட்டில் வேலையே நடக்காது என்று நினைக்கும் அளவுக்கு நம்மை சௌகரியப்படுத்திக் கொண்டோம். ஆனால் இதனால் நன்மைகள் என்று பார்த்தால் ஒரு சில தான் மற்றபடி சில பொருட்களை வாங்கி அப்படியே சமைத்தாலும், சாப்பிட்டாலும் மட்டும் தான் அதில் உள்ள சத்துக்கள் நமக்கு முழுவதுமாக கிடைக்கும். அதை எடுத்து ஃப்ரிட்ஜில் வைத்து ஒரு வாரம் கழித்து எடுத்து உண்பதால் பெயருக்கு இதை சாப்பிட்டேன் என்று சொல்லிக் கொள்ளலாமே தவிர அதிலிருந்து நமக்கு எந்த ஒரு சத்தும் கிடைக்காது. இது பல பேருக்கு தெரிவதில்லை வேலைக்கு செல்லும் சூழ்நிலையில் இது தவிர்க்க முடியாதது தான். ஆனால் முடிந்த அளவிற்கு எல்லாவற்றுக்கும் பிரிட்ஜை தேடாமல் கீரை புதினா இது போன்ற வகைகளை பிரிட்ஜில் வைக்காமல் வாங்கிய உடனே சமைத்து சாப்பிட்டால் நல்லது. பிரிட்ஜில் வைக்காமல் வெளியே வைத்து ஒன்று இரண்டு நாட்களுக்குள் ஆவது சமைத்து விடுங்கள். இப்போது ஃப்ரிட்ஜில் வைக்காமலே இந்த கீரைகளை எப்படி பாதுகாக்கலாம் என்பதை தெரிந்து கொள்வோம்.
முதலில் கீரையை வாங்கியவுடன் அதை எப்போது சமைக்கப் போகிறோம் என்று முடிவு செய்து கொள்ளுங்கள். இன்றே சமைத்தால் எதுவும் செய்யத் தேவையில்லை. நீங்கள் எப்போதும் போல் செய்து விடலாம். ஆனால் அடுத்த நாள் சமைப்பதாக இருந்தால் அதை ஒரு ஜல்லி அதாவது சாதம் காய்கறி அலசிய பிறகு வடிகட்ட பயன் படுத்துவோம் அல்லவா அது தான். அந்த ஜல்லியில் கீரை கட்டை பிரித்து அதில் நன்றாக பரப்பி விட்டு மேலே தண்ணீர் தெளித்து அதற்கு மேல் ஒரு ஈரத்துணியை போட்டு மூடி வைத்து விடுங்கள் போதும். இதில் தெளிக்கும் தண்ணீர் ஜல்லியில் உள்ள ஓட்டை வழியே கீழே இறங்கிவிடும். கீரை வாடாமல் இருக்க மேலே உள்ள அந்த காட்டன் துணியை மட்டும் அவ்வப்போது தண்ணீர் தெளித்து விட்டு கொள்ளுங்கள்.
இரண்டாவது கீரையை நீங்கள் இரண்டு மூன்று நாட்கள் கழித்து தான் செய்யப் போகிறீர்கள் என்றால், முதலில் அந்த கீரையின் வேர் பகுதியை நறுக்கி எடுத்து விடுங்கள். பிறகு இந்த கட்டை பிரித்து அதில் இருக்கும் புல் தேவையற்ற சில தழைகள் அவையெல்லாம் எடுத்து விட்டு, ஒரு நல்ல காட்டன் துணி எடுத்துக் கொள்ளுங்கள். காட்டன் துணியை ஈரப்படுத்தி இந்த கீரையை அதில் பரப்பி சுருட்டி வைத்து விடுங்கள். அவ்வப்போது இதை ஈரப்படுத்திக் கொண்டே இருக்க வேண்டும். அதிக வெப்பம் நிறைந்த இடத்தில் வைக்கக்கூடாது. அதே போல் மின்விசிறிக்கு கீழேயும் வைக்கக்கூடாது. இந்த இரண்டு விஷயத்தை மட்டும் கவனத்தில் கொண்டு இதை பார்த்துக் கொள்ளுங்கள்.
இதில் இன்னொரு முறையும் இருக்கிறது இப்படி நீங்கள் அந்த வேர் பகுதிகளைநறுக்கி எடுத்த பிறகு, ஒரு அகலமான சில்வர் டப்பா இருந்தால் அதில் பூங்கொத்து வைப்பது போல் இந்த கீரைகளை வைத்து அடியில் கொஞ்சம் தண்ணீர் ஊற்றி விடுங்கள் (கீரையின் தண்டு நனைய கூடாது வெறும் ஈரப்பதற்காக மட்டும் அந்த தண்ணீர்). அதற்கு மேல் இந்த கீரை கட்டை வைத்து விட்டு மேலே தண்ணீர் தெளித்து வைத்தாலும் ஒன்று இரண்டு நாள் வாடாமல் இருக்கும் இல்லை இதற்கு மேலும் நீங்கள் ஈர துணியை போட்டு வைக்கலாம்.
அடுத்து இது எல்லாவற்றையும் விட பழைய முறை தான் கீரை விற்பவர்கள் செய்வது. சாக்கு பை நன்றாக நனைத்து பிழிந்து விட்டு இதில் நீங்கள் வாங்கிய கீரையை அப்படியே சுற்றி வைத்தால் ஒரு வாரம் வரை கீரை அழுகாமல் இருக்கும். ஆனால் சாக்குப்பை காயாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.
இதையும் படிக்கலாமே: தேங்காய் பால் எடுக்காமல் தேங்காய் சாதம் சுவையாக எளிதாக எப்படி வீட்டிலேயே தயாரிப்பது? ஈஸி மெதர்ட் தேங்காய் சாதம்!
புதினா, கருவேப்பிலை, கொத்தமல்லி போன்றவைகளை இந்த முறைகளிலே நீங்கள் ஓரளவிற்கு ஒரு வாரம் வரை பிரிட்ஜில் வைக்காமலே வாடாமல் பார்த்துக் கொள்ளலாம். இந்த முறைகளில் உங்களுக்கு எது வசதியோ அதை பயன் படுத்தி கொள்ளுங்கள்.