
சிறு குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை பலருக்கும் இருக்கக்கூடிய மிக முக்கியமான பிரச்சனை என்றால் அது தலை முடி தொடர்பான பிரச்சனைதான். இன்றைய காலத்தில் இருக்கக்கூடிய சிறிய குழந்தைகளுக்கு கூட அதிக அளவில் முடி உதிர்தலும் இளநரையும் ஏற்படுகிறது. இதற்கு வாழ்வியல் மாற்றங்களே காரணமாக திகழ்கின்றன. இந்த வாழ்வியல் மாற்றங்களை மாற்றுவதோடு மட்டுமல்லாமல் நம்முடைய தலைமுடியை நாம் சரியாக பராமரித்தோம் என்றால் நமக்கு தலைமுடி தொடர்பாக எந்த பிரச்சனையுமே ஏற்படாது. அந்த வகையில் முடி உதிர்வை நீக்கி கருமையான அடர்த்தியான கூந்தலை பெறுவதற்கு தயாரிக்கக்கூடிய ஒரு எண்ணையைப் பற்றி தான் இந்த அழகு குறிப்பு குறித்த பகுதியில் நாம் பார்க்க போகிறோம்.
தலை முடி பராமரிப்பது என்பது அவ்வளவு சாதாரண விஷயம் கிடையாது. எதற்காக முடி உதிர்கிறது எதனால் இளநரை ஏற்படுகிறது என்பதை உணர்ந்து அதற்கேற்ற வழிமுறையை பின்பற்றினால் தான் அந்த பிரச்சினையில் இருந்து நம்மால் வெளியில் வர முடியும். அதை தவிர்த்து விட்டு அனைவரும் ஒரே மாதிரி ஹேர் பேக் போடுவது எண்ணெய் தடவுவது போன்றவற்றை செய்வதன் மூலம் அனைவருக்கும் நல்ல பலன் கிடைக்காது என்றே கூறலாம். இருப்பினும் ஒரு சில பொதுவான பொருட்களை பயன்படுத்தும் பொழுது அது நம்முடைய தலைமுடி வளர்ச்சியை அதிகரிக்கும். அப்படிப்பட்ட பொருட்களை வைத்து தான் எண்ணெய் தயார் செய்யப் போகிறோம்.
பலரும் தங்களுடைய தலைமுடிக்காக வீட்டிலேயே எண்ணெய் தயாரிக்கும் பழக்கத்தை வைத்திருப்பார்கள். எவ்வளவு எண்ணெய்க்கு எவ்வளவு பொருட்களை சேர்க்க வேண்டும் என்ற விகிதாச்சாரம் இருக்கிறது. அதை சரியாக பயன்படுத்தினோம் என்றால் தான் அந்த எண்ணையால் நமக்கு நல்ல பலன் கிடைக்கும். அந்த வகையில் 200 எம்எல் தேங்காய் எண்ணெயை எடுத்து ஒரு இரும்பு கடாயில் ஊற்றி அடுப்பில் வைத்து விடுங்கள். அடுத்ததாக இரண்டு டேபிள்ஸ்பூன் அளவிற்கு கருஞ்சீரகத்தை எடுத்து மிக்ஸி ஜாரில் போட்டு பொடி செய்து அதையும் வைத்துக் கொள்ளுங்கள்.
ஒரு கைப்பிடி அளவு மருதாணி இலையை எடுத்து மிக்ஸி ஜாரில் போட்டு ஒரு ஸ்பூன் அல்லது இரண்டு ஸ்பூன் அளவு மட்டும் தண்ணீர் ஊற்றி அதையும் கொரகொரப்பாக அரைத்து எடுத்து வைத்துக் கொள்ளுங்கள். அடுத்ததாக கரிசலாங்கண்ணி இது இலையாக கிடைக்கும் பட்சத்தில் மருதாணி இலையுடன் சேர்த்து அரைத்து வைத்துக் கொள்ளலாம். இலை கிடைக்கவில்லை பொடி தான் இருக்கிறது என்பவர்கள் 1/2 ஸ்பூன் அளவிற்கு பொடியை மட்டும் எடுத்து வைத்துக் கொள்ளுங்கள்.
இப்பொழுது அடுப்பில் ஊற்றி வைத்திருந்த எண்ணெய் சூடாகி இருக்கும். சூடானதும் குறைந்த தீயில் வைத்து முதலில் கருஞ்சீரகத்தை அந்த எண்ணெயில் போட வேண்டும். கருஞ்சீரகம் நன்றாக பொரிய வேண்டும். அது பொரிந்ததும் அரைத்து வைத்திருக்கும் மருதாணி இலை விழுதை எண்ணெயில் சேர்த்து நன்றாக கலந்து விட வேண்டும். இதில் ஈரப்பதம் இருக்கிறது என்பதால் எண்ணெயில் போடும்போது சடசடவென்று வெடிக்க ஆரம்பிக்கும் மேலும் எண்ணெய் நுரையுடன் பொங்கும். இந்த நுரை முற்றிலும் நீங்கி ஈரப்பதம் அடங்கும் வரை அடுப்பிலேயே வைத்து கிண்டி விடுங்கள்.
சலசலப்பு அடங்கியதும் இதில் கரிசலாங்கண்ணி பொடியை போட்டு ஒருமுறை நன்றாக கலந்து விட்டு அடுப்பிலிருந்து எண்ணெயை இறக்கி விட வேண்டும். எண்ணெய் ஆறியதும் ஒரு வடிகட்டியை பயன்படுத்தி எண்ணெயை வடிகட்டி எடுத்துக் கொள்ளலாம். அவ்வளவுதான் மிகவும் அருமையான எண்ணெய் தயாராகி விட்டது. இந்த எண்ணையை தினமும் நம்முடைய தலைக்கு தடவலாம் அல்லது தலைக்கு குளிப்பதற்கு அரை மணி நேரத்திற்கு முன்பாக வெதுவெதுவென்று சூடாக்கி தலைக்கு தேய்த்து மசாஜ் செய்துவிட்டு அரை மணி நேரம் கழித்து ஷாம்பூ போட்டும் தலைக்கு குளிக்கலாம்.
இதையும் படிக்கலாமே: இயற்கை ஷாம்பு தயாரித்தல்
இப்படி எளிமையான முறையில் தலைக்கு தேய்க்கக்கூடிய எண்ணையை தயாரித்து பயன்படுத்துவதன் மூலம் முடி உதிர்தல் படிப்படியாக நின்றுவிடும். முடி அடர்த்தியாகவும் அதேசமயம் இளநரை இல்லாத கருமையான கூந்தலாகவும் வளர ஆரம்பிக்கும் என்ற தகவலை கூறி இந்த பதிவினை நிறைவு செய்து கொள்கிறோம்.