
அரோக்யமான உணவுகள் என்றால் அவை காய்கறி மற்றும் கீரை வகைகள் தான். இவற்றில் கணக்கிலடங்கா சத்துக்கள் நிறைந்துள்ளன. அதிலும் வளரும் குழந்தைகளுக்கு இது போன்ற உணவு வகைகளை சமைத்துக் கொடுப்பது மிகவும் அபரிமிதமாகும். உடல்நிலை சரியில்லை என்று மருத்துவமனைக்கு சென்றால் முதலில் மருத்துவர் கூறுவது குழந்தைக்கு நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக இருக்கிறது. கீரை மற்றும் காய்கறிகளை கட்டாயமாக உணவுடன் சேர்த்துக்கொள்ளுங்கள் என்று தான். இப்படி இயற்கையாகவே நமது உடம்பிற்க்கு ஆரோக்கியத்தை அளிக்க கூடிய உணவு வகைகளை தவறாமல் சாப்பிட வேண்டும். ஆனால் இவற்றை குழந்தைகள் விருப்பமாக சாப்பிடுவதில்லை. எனவே இந்த காய்கறி மற்றும் கீரை வகைகளை குழந்தைகளுக்கு பிடித்தது போன்ற ஸ்நாக்ஸ் வகைகளாக செய்து கொடுத்தால் தட்டாமல் சாப்பிடுவார்கள். அப்படி கீரையை வைத்து செய்யக்கூடிய ஒரு போண்டா ரெசிபியை எவ்வாறு செய்ய வேண்டும் என்பதை பற்றி தான் இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளப் போகின்றோம்.
தேவையான பொருட்கள்:
கோதுமை மாவு – ஒரு கப், கடலை மாவு – அரை கப், அரிசி மாவு – 3 ஸ்பூன், வெங்காயம் – 1, பச்சை மிளகாய் – 2, கொத்தமல்லி – ஒரு ஒரு கொத்து, பூண்டு – 5 பல், கீரை – அரை கட்டு, உப்பு – ஒரு ஸ்பூன், தனி மிளகாய் தூள் – கால் ஸ்பூன், கருவேப்பிலை – ஒரு கொத்து, பெருங்காயத் தூள் – கால் ஸ்பூன், எண்ணெய் – கால் லிட்டர்.
செய்முறை:
முதலில் ஒரு கிண்ணத்தில் ஒரு கப் கோதுமை மாவு மற்றும் அரை கப் கடலை மாவு சேர்த்து கலந்து விட வேண்டும். பிறகு இவற்றுடன் 3 ஸ்பூன் அரிசி மாவு மற்றும் உப்பு சேர்த்து அனைத்தையும் ஒன்றாக கலந்து கொள்ள வேண்டும். பின்னர் வெங்காயம், பச்சை மிளகாய் இவற்றை பொடியாக நறுக்கி வைக்க வேண்டும்.
பிறகு ஐந்து பல் பூண்டை தோலுரித்து அதனையும் சிறு துண்டுகளாக நறுக்கிக் கொள்ள வேண்டும். பின்னர் கொத்தமல்லித் தழையையும் பொடியாக நறுக்கி வைக்க வேண்டும். அதன் பின் கீரையை அதில் உள்ள இலைகளை மட்டும் துள்ளிக் கொண்டு, அவற்றை தண்ணீரில் சுத்தமாக அலசிக் கொண்டு பொடியாக நறுக்கி வைக்க வேண்டும்.
பின்னர் நறுக்கி வைத்துள்ள வெங்காயம், பச்சைமிளகாய், பூண்டு, கொத்தமல்லி தழை மற்றும் கீரை இவை அனைத்தையும் சேர்த்து மாவுடன் கலந்து கொள்ள வேண்டும். பின்னர் இவற்றுடன் உப்பு, மிளகாய்த்தூள், பெருங்காயத் தூள் மற்றும் கறிவேப்பிலை சேர்த்து கலந்து விட வேண்டும்.
பிறகு இவற்றுடன் கொஞ்சம் கொஞ்சமாக தண்ணீர் சேர்த்து போண்டா போடும் பதத்திற்கு பிசைந்து கொள்ள வேண்டும். பிறகு அடுப்பை பற்ற வைத்து, அதன் மீது ஒரு கடாயை வைத்து, கால் லிட்டர் எண்ணெய் ஊற்ற வேண்டும். எண்ணெய் நன்றாக காய்ந்ததும் பிசைந்து வைத்துள்ள மாவை கொஞ்சம் கொஞ்சமாக எடுத்து எண்ணெயில் போட வேண்டும். இவை சிறிது நேரத்தில் சிவந்து நன்றாக வறுபட்டதும் இதனை வெளியே எடுத்து சுட சுட பரிமாறிக் கொடுக்கலாம்.