
பொதுவாகவே இரும்பு சத்து உள்ள காய்கறிகள், நோய் எதிர்ப்பு சத்து உள்ள காய்கறிகளில் எல்லாம் சுவை குறைவாகத்தான் இருக்கும். பெரும்பாலும் சத்து நிறைந்த உணவுப் பொருட்களில் சுவை குறைவுதான். அதை குழந்தைகளும் சரி, பெரியவர்களும் சரி விரும்பி சாப்பிடுவது இல்லை. அந்த வரிசையில் இந்த முருங்கைக் கீரைக்கு முதலிடம் உண்டு. இதில் இரும்பு சத்தும் அதிகம். நோய் எதிர்ப்பு சக்தியும் அதிகம். சில பேர் வேலை பளுவுக்கு பயந்து இதை வாங்க மாட்டாங்க. சில பேர் வீட்டில் யாரும் இதை சாப்பிட மாட்டார்கள் என்பதற்காக இதை வாங்கவே மாட்டாங்க. இந்த முருங்கைக் கீரையை வைத்து நாவிற்கு சுவை தரக்கூடிய சூப்பரான தோசை செய்வது எப்படி என்பதை பற்றித்தான் இந்த பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ள போகின்றோம்.
அடுப்பில் ஒரு கடாயை வைத்து நெய் – 1 டேபிள் ஸ்பூன் ஊற்றிக்கொள்ள வேண்டும். நெய் நன்றாக காய்ந்து வந்ததும் சீரகம் – 1/2 ஸ்பூன், மிளகு – 1/2 ஸ்பூன், சின்ன வெங்காயம் – 10, பூண்டு பல் – 8, பச்சை மிளகாய் – 2, பெருங்காயத்தூள் – 1/4 ஸ்பூன், போட்டு இதை எல்லாவற்றையும் பச்சை வாடை போக நன்றாக வதக்கி விட வேண்டும்.
அதன் பின்பு ஒரு கைப்பிடி அளவு சுத்தம் செய்த முருங்கைக் கீரையை கடாயில் சேர்த்து நன்றாக வதக்கி விடுங்கள். முருங்கைக் கீரையின் பச்சை வாடை போன பின்பு இறுதியாக இந்த முருங்கைக் கீரைக்கு மட்டும் தேவையான அளவு உப்பு சேர்த்து, கலந்து இதை நன்றாக ஆற வைத்து, ஒரு மிக்ஸி ஜாரில் போட்டு விழுது போல அரைத்துக் கொள்ள வேண்டும். தேவைப்பட்டால் கொஞ்சம் தண்ணீர் ஊற்றி அரைத்துக் கொள்ளலாம்.
இந்த விழுதை தோசை மாவில் ஊற்றி நன்றாக கரைத்து கொள்ளுங்கள். தோசை மாவில் உப்பு இருக்கும். அப்படி தோசை மாவில் உப்பு இல்லை என்றால் தோசை மாவுக்கு தேவையான உப்பை போட்டு இந்த முருங்கைக் கீரை விழுதை அதில் ஊற்றி, நன்றாக கலந்து விட்டால். பச்சை நிற இரும்புச்சத்து நிறைந்த தோசை மாவு தயார். (மாவு ரொம்பவும் கட்டியாக இருந்தால் கொஞ்சம் தண்ணீர் ஊற்றி தோசை மாவு பதத்திற்கு லேசாக கரைத்துக் கொள்ள வேண்டும்.)
அடுப்பில் தோசை கல்லை வைத்து நன்றாக சூடு செய்து கொள்ளுங்கள். அடுப்பை முழுமையாக சிம்மில் வைத்து விட்டு தயாராக இருக்கும் இந்த மாவை கடாயில் ஊற்றி மெல்லிசாக தீட்டி நல்லெண்ணெய் ஊற்றி பொன்னிறமாக சிவக்க விட்டு திருப்பி போட்டு மீண்டும் வேக வைத்து எடுத்து சுடச்சுட பரிமாறினால் அருமையான ஆரோக்கியம் தரும் தோசை தயார். அடுப்பை சிம்மில் வைத்துவிட்டு தோசையை பொறுமையாக சிவக்க விட்டு எடுக்க வேண்டும்.
வாரத்தில் ஒரு நாளாவது குழந்தைகளுக்கும் பெரியவர்களுக்கும் இந்த தோசை சுட்டு கொடுங்க. இதை வேண்டாம் என்று நிச்சயம் சொல்ல மாட்டாங்க. மணக்க மணக்க வாசம் நிறைந்த தோசையாக இது இருக்கும். நீங்க வேணும்னா ஒரு முறை ட்ரை பண்ணி பாருங்க.