
ஒவ்வொருவரும் இப்பொழுது உணவு முறையில் கட்டுப்பாடு இல்லாமல் தனக்கு தோன்றிய அனைத்தையும் விரும்பி சாப்பிடுகிறார்கள். ஆனால் இதனை உண்பதால் நம் உடலுக்கு ஆரோக்கியம் கிடைக்கும், இதனை சாப்பிட்டால் உடல் நலம் சீர் கெடும் என்பதை பற்றியெல்லாம் யோசிப்பதில்லை. காலை அவசர அவசரமாக வேலைக்கு சென்று மதியம் எதையாவது சாப்பிட்டபின், மறுபடியும் வீட்டிற்கு வந்து இரண்டு தோசை சாப்பிட்டு உறங்கும் வழக்கத்தைக் கொண்டிருக்கிறார்கள். இடைப்பட்ட நேரத்தில் ஆங்காங்கே இருக்கும் கடைகளுக்கு சென்று ஜங்க் ஃபுட் சாப்பிடுவது பலரது வழக்கமாகும். இவற்றின் மூலம் காலம் செல்ல செல்ல நமது உடலில் தேவையில்லாத பாதிப்புகள் ஏற்படுகிறது. ஆனால் முடிந்தவரை வீட்டில் ஆரோக்கியமான உணவுகளை சாப்பிட்டு பழகுங்கள். அவ்வாறு இட்லி தோசைக்கு எப்போதும் செய்யும் சட்னியை தவிர்த்து இந்தப் பெரண்டை சட்னியை சாப்பிட்டுப் பழகுங்கள். வாருங்கள் இதனை எவ்வாறு செய்ய வேண்டும் என்பதை பற்றி இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்வோம்.
தேவையான பொருட்கள்:
பெரிய வெங்காயம் – 2, பிரண்டை – 200 கிராம், தனியா – ஒரு ஸ்பூன், சீரகம் – ஒரு ஸ்பூன், வர மிளகாய் – 6, புளி – சிறிய நெல்லிக்காய் அளவு, தேங்காய் – 2 சில்லு, எண்ணெய் – 3 ஸ்பூன், உப்பு – ஒரு ஸ்பூன், கடுகு – அரை ஸ்பூன், உளுத்தம் பருப்பு – அரை ஸ்பூன், கடலைப்பருப்பு – அரை ஸ்பூன், கருவேப்பிலை – ஒரு கொத்து.
செய்முறை:
முதலில் பிரண்டையின் மேல் உள்ள தடிமனான தோலை மட்டும் சீவி, அவற்றை பொடியாக நறுக்கி தண்ணீரில் அலசிக் கொள்ள வேண்டும். பின்னர் இரண்டு வெங்காயத்தை சிறு துண்டுகளாக நறுக்கி கொள்ள வேண்டும். அதன் பிறகு அடுப்பை பற்ற வைத்து, அதன் மீது ஒரு கடாயை வைத்து, ஒரு ஸ்பூன் எண்ணெய் சேர்க்க வேண்டும்.
எண்ணெய் நன்றாக காய்ந்ததும் அதில் வெங்காயம், தனியா, சீரகம், 4 வரமிளகாய் மற்றும் இரண்டு சில்லு தேங்காயைத் துருவி சேர்த்து அனைத்தையும் நன்றாக வறுத்துக் கொள்ள வேண்டும். பின்னர் இறுதியாக நெல்லிக்காய் அளவு புளியையும் சேர்த்து கொள்ள வேண்டும். பின்னர் இவற்றை ஒரு தட்டிற்கு மாற்றிக்கொள்ள வேண்டும்.
பின்னர் அதே கடாயில் மறுபடியும் ஒரு ஸ்பூன் எண்ணெய் சேர்த்து, வெட்டி வைத்துள்ள பிரண்டைத் துண்டுகளை சேர்த்து நன்றாக வதக்கிக் கொண்டு, அதனையும் தட்டிற்கு மாற்றி, ஆறவைத்து, இவை அனைத்தையும் மிக்ஸியில் சேர்த்து, அதனுடன் ஒரு ஸ்பூன் உப்பு சேர்த்து அனைத்தையும் விழுதாக அரைத்துக் கொள்ள வேண்டும்.
பின்னர் ஒரு தாளிப்பு இரண்டில் அடுப்பின் மீது வைத்து, ஒரு ஸ்பூன் எண்ணெய் சேர்த்து, எண்ணெய் நன்றாக காய்ந்ததும் கடுகு, உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பு, 2 வரமிளகாய் மற்றும் கறிவேப்பிலை சேர்த்து தாளிக்க வேண்டும். பின்னர் இந்த தாளிப்பை அரைத்து வைத்துள்ள சட்னியுடன் சேர்த்து கலந்து விட்டால் சுவையான பிரண்டை சட்னி தயாராகிவிடும்.