
முன்பெல்லாம் வீட்டில் விசேஷம் என்றால் சாம்பார், வடை, பாயாசம், கூட்டு, பொரியல், ரசம் என சமையல் இப்படித்தான் போகும். இப்போதெல்லாம் அப்படி வகை வகையான சமையல் கிடையாது. அசைவம் சாப்பிடுபவர்களாக இருந்தால் பிரியாணி அசைவம் சாப்பிடாதவர்கள் வெஜிடேபிள் பிரியாணி, புலாவ், இப்படியான உணவுகளை தான் பெரும்பாலும் அனைவரும் விரும்பி சாப்பிடுகிறார்கள். அதில் இந்த வெஜிடபிள் பிரியாணி ஆகட்டும் இல்லை மற்ற பிரியாணி ஆகட்டும், என்ன தான் நாம் வீட்டில் சமைத்தாலும் கூட ஹோட்டலில் சாப்பிடும் ருசி கிடைப்பதில்லை என்று கடைசியாக ஒரே வார்த்தையில் சொல்லி விடுவார்கள். நாம் கஷ்டப்பட்டு செய்த அனைத்தும் வீணாகி போய்விடும். அந்த ஹோட்டல் சீக்ரெட் என்னவென்று தான் இப்போது இந்த பதிவில் நாம் பார்க்கப் போகிறோம்.
தேவையான பொருட்கள்: பாஸ்மதி அரிசி -1 கப், நெய்- 2 டேபிள் ஸ்பூன், ஏலக்காய் – 2, பட்டை- 1, கிராம்பு – 2, முந்திரி – 10, வெங்காயம் – 3, தக்காளி – 2, கேரட் சிறிதாக நறுக்கியது -1/4 கப், பீன்ஸ்- சிறிதாக நறுக்கியது -1/4 கப், உருளை கிழங்கு -1/4 கப், பச்சை பட்டாணி – 1/4 கப், இஞ்சி பூண்டு விழுது -1 டேபிள் ஸ்பூன், மஞ்சள் தூள் – 1/2 டீஸ்பூன், உப்பு – 1டீஸ்பூன், கரம் மசாலா -1/2 டீஸ்பூன், மிளகாய்த்தூள் – 1/2டீஸ்பூன், தயிர் – 1/4 கப், புதினா – 1 கைப்பிடி, கொத்தமல்லி – 1 கைப்பிடி, கருவேப்பிலை – ஒரு கொத்து.
முதலில் அரிசியை பத்து நிமிடம் தண்ணீரில் ஊற வைக்க வேண்டும். பிறகு அடுப்பை பற்ற வைத்து அதில் குக்கரை வைத்து நெய் ஊற்றிக் கொள்ளுங்கள். அதன் பிறகு அதில் முந்திரி போட்டு பொன்னிறமாக வறுத்து தனியாக எடுத்து வைத்துக் கொள்ளுங்கள். மீதமிருக்கும் அதே நெய்யில் பட்டை, ஏலக்காய்,கிராம்பு, மசாலா பொருட்களை சேர்த்தவுடன் வெங்காயம் சேர்த்து நன்றாக பொன்னிறமாக வதக்க வேண்டும். இது வதங்கும் போதே கொஞ்சம் கருவேப்பிலையும் சேர்த்துக் கொள்ளுங்கள். வெங்காயம் வதங்கிய பிறகு இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து அதுவும் பச்சை வாடை போன பிறகு புதினா இலைகளை கொஞ்சம் சேர்த்துக் கொள்ளுங்கள்.
அதன் பிறகு நறுக்கி வைத்த காய்கறிகளையும், பட்டாணியும் சேர்த்து இரண்டு நிமிடம் அப்படியே இந்த வெங்காயம் இஞ்சி பூண்டு பேஸ்ட்வுடன் வேக விடுங்கள். அதன் பிறகு தக்காளி சேர்த்துக் கொள்ளுங்கள். இப்போது தக்காளி சேர்த்து பிறகு ஒரு கிளறு கிளறி விடுங்கள்.
இப்போது தான் அந்த சீக்ரெட் இன்கிரிடியன்ஸ் சேர்க்க வேண்டும். எப்பொழுதும் பிரியாணி வெஜிடபிள் ரைஸ் போன்றவற்றிற்கு தயிர் சேர்ப்போம் அல்லவா இப்போது அந்த தயிரிலே மஞ்சள் தூள், மிளகாய்த்தூள், கரம் மசாலா, அனைத்தையும் சேர்த்து நன்றாக மிக்ஸ் பண்ணி வைத்து விடுங்கள். இன்னொரு பக்கம் வறுத்து வைத்த முந்திரியை சற்று கொரகொரப்பாக மிக்ஸி ஜாரில் சேர்த்து அரைத்து எடுத்துக் கொள்ளுங்கள். அரைத்து எடுத்து இந்த முந்திரி பருப்பை வெந்து கொண்டிருக்கும் காய்களில் சேர்த்து ஒரு கிளறி விடுங்கள். அதன் பிறகு தயிர், மிளகாய் தூள், கரம் மசாலா சேர்த்து கலவையை இதில் சேர்த்து விடுங்கள்.
இதையெல்லாம் சேர்த்த பிறகு உப்பையும் சேர்த்து நன்றாக கிளறி, ஒரு கப் அரிசிக்கு ஒன்றரை டம்ளர் தண்ணீர் ஊற்றி ஐந்து நிமிடம் குக்கரின் மேல் மூடியை மட்டும் வைத்து கொதிக்க விடுங்கள் குக்கர் விசில் போட வேண்டாம். தண்ணீர் நன்றாக கொதித்த பிறகு அரிசி போடுங்கள். அரிசி போட்டு பின் ஒரு கொதி வந்த பிறகு கொத்து மல்லி இலையை மேலே தூவி குக்கர் விசில் வைத்து விடுங்கள். குக்கர் இரண்டு விசில் வந்தவுடன் அடுப்பை அணைத்து விட்டு விசில் இறங்கியதும், ஒரு முறை லேசாக கலந்து விடுங்கள்.
இது பைவ் ஸ்டார் ஹோட்டல் வெஜ் பிரியாணி போலவே டேஸ்ட் அட்டகாசமாக இருக்கும். இனி எப்போது வெஜ் பிரியாணி செய்தாலும் இதே முறையில் செய்து பாருங்கள். இனி நீங்களே ஹோட்டலுக்கு போய் சாப்பிடலாம் என்று சொன்னாலும் உங்கள் வீட்டில் உங்களை தான் செய்து தர சொல்லி அடம் பிடிப்பார்கள் அவ்வளவு சுவையாக இருக்கும்.
இதையும் படிக்கலாமே: இனி கஷ்டப்பட்டு மாவு பிசைஞ்சு தான் மிக்சர் செய்யணும்னு அவசியமே இல்ல. வெறும் 10 நிமிடத்தில் இதோ இன்ஸ்டன்ட் மிக்சர் தயார். இந்த தீபாவளிக்கு ட்ரை பண்ணி பாருங்க.
பிரியாணியும் இதே முறையில் செய்யலாம் காய்கறிக்கு பதில் அதில் கறியை சேர்த்துக் கொள்ள வேண்டியது தான் காய்கறிகளும் உங்கள் விருப்பம் இதைத் தவிர காலிஃப்ளவர், உருளைக்கிழங்கு, பட்டாணி போன்ற எந்த காய்கறிகளையும் சேர்த்துக் கொள்ளலாம்.