
மூன்று வேளை உணவு சமைப்பதற்கே வீட்டில் உள்ள பெண்களுக்கு நேரம் சரியாக இருக்கும். இதில் வீட்டில் உள்ளவர்கள் ஆசைப்பட்டு ஏதேனும் ஒரு உணவு வகை செய்ய சொல்லி கேட்டால் அதனை செய்வதற்கு அவர்களுக்கு நேரம் கிடைப்பதில்லை. ஆகவே சனி, ஞாயிறு தினங்களில் அனைவரும் விடுமுறை பெற்று வீட்டில் இருப்பார்கள். அன்றைய தினத்தை சிறப்பாக மாற்றி அமைக்க அவர்களுக்குப் பிடித்த உணவுகளை செய்து கொடுத்து மகிழச் செய்யுங்கள். அவ்வாறு வடை செய்வதென்பது பொதுவாக விசேஷ நாட்களில் மட்டுமே செய்யப்படுகிறது. அதிலும் தயிர் வடை என்றால் பலரும் விருப்பமாக உண்பார்கள். இவ்வாறு அனைவரும் விரும்பி சாப்பிடும் இந்த தயிர் வடை ஹோட்டல்களில் தனிப்பட்ட சுவையில் இருக்கும். அதே சுவையில் வீட்டிலேயும் கிடைக்க இந்த சின்ன சமையல் குறிப்பைத் தெரிந்து கொண்டால் போதும். அதே சுவையில் வீட்டிலேயும் செய்யலாம் வாருங்கள். இதனை எவ்வாறு செய்ய வேண்டும் என்பதை இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்வோம்.
தேவையான பொருட்கள்:
உளுத்தம்பருப்பு 2 டம்ளர், தயிர் – ஒரு லிட்டர், பச்சை மிளகாய் – 3, கொத்தமல்லித் தழை – ஒரு குத்து, தேங்காய் – கால் மூடி, உப்பு – 2 ஸ்பூன், பெருங்காயத்தூள் – அரை ஸ்பூன், எண்ணெய் – கால் லிட்டர்.
செய்முறை:
முதலில் 2 டம்ளர் உளுத்தம்பருப்பை ஒரு கிண்ணத்தில் சேர்த்து, அதனை தண்ணீர் விட்டு, 2 முறை சுத்தமாக கழுவிய பின்னர், மீண்டும் தண்ணீர் ஊற்றி 2 மணி நேரம் ஊற வைக்க வேண்டும். பிறகு ஊறிய உளுத்தம்பருப்பில் இருக்கும் தண்ணீரை வடிகட்டி, அதனை கிரைண்டரில் சேர்த்து கெட்டியாக அரைத்துக் கொள்ள வேண்டும்.
சரியான பதம் கண்டறிய கொஞ்சம் உளுத்த மாவை எடுத்து, தண்ணீர் இருக்கும் பாத்திரத்தில் போட்டு பார்க்க வேண்டும். அப்பொழுது உளுத்தம் மாவு கரையாமல் தண்ணீரில் மிதக்க வேண்டும். இதுவே வடை செய்வதற்கான சரியான பதமாகும். தண்ணீர் கொஞ்சம் அதிகமாக சேர்த்தாலும் வடை சாஃப்டாக இருக்காது.
அதன் பின்னர் ஒரு லிட்டர் தயிரை நன்றாக கரைத்து வைக்க வேண்டும். பிறகு ஒரு மிக்ஸி ஜாரில் பச்சை மிளகாய், கொத்தமல்லி தழை, ஒரு ஸ்பூன் உப்பு மற்றும் கால் மூடி தேங்காயைத் துருவி சேர்க்க வேண்டும். பிறகு இதில் சற்று தண்ணீர் விட்டு, பேஸ்ட் பதத்திற்கு அரைத்துக் கொள்ளவேண்டும். பிறகு இந்த விழுதை தயிருடன் சேர்த்து நன்றாக கலந்து விட வேண்டும்.
பின்னர் உளுத்த மாவில் ஒரு ஸ்பூன் உப்பு மற்றும் பெருங்காயத் தூள் சேர்த்து கலந்து விட வேண்டும். பிறகு அடுப்பின் மீது கடாயை வைத்து, எண்ணெய் ஊற்ற வேண்டும். எண்ணெய் நன்றாக காய்ந்ததும் கொஞ்சம் மாவை எடுத்து வடை தட்டி, எண்ணெயில் போட்டு, பொரித்து எடுக்க வேண்டும். இவ்வாறு சுட்டு எடுத்த வடையை ஒரு பாத்திரத்தில் உள்ள தண்ணீரில் மூழ்க வைத்து, உடனே எடுத்து தயிரில் போட வேண்டும். இவ்வாறு தயிரில் போட்ட வடையை ஐந்து நிமிடம் ஊறவைத்து பிறகு வேறு தட்டிற்கு மாற்ற வேண்டும். அவ்வளவுதான் இந்த வடையை ஒரு தட்டில் வைத்து, அதன் மீது ஓம் பொடி தூவி சாப்பிடக் கொடுத்துப் பாருங்கள். அவ்வளவு அருமையாக