
அல்வாவில் எத்தனையோ வகைகள் உண்டு. அதன் வகைகளை சொல்ல போனால் பெரிய பட்டியலே போடலாம். அந்த வகையில் இந்த சமையல் குறிப்பு பதிவில் மீதமான இட்லியை வைத்து சுவையான அல்வா எப்படி செய்வது என்பதை தெரிந்து கொள்ளலாம் வாங்க.
எல்லோர் வீட்டிலும் இட்லி செய்தால் மட்டும் கண்டிப்பாக நான்கு அல்லது ஐந்து இட்லி வரை மீந்து விடும். அதை வைத்து நாம் இட்லி உப்புமா அல்லது மசாலா இட்லி பொறித்த இட்லி என பலவகையில் செய்து குழந்தைகளுக்கு சாப்பிட கொடுத்து விடுவோம். ஆனால் இந்த சமையல் குறிப்பு பதிவில் மீதமான இட்லியை வைத்து ஒரு சூப்பரான அல்வா ரெசிபியை எப்படி செய்வது என்று பார்க்கலாம்.
இந்த அல்வா செய்வதற்கு முதலில் ஐந்து இட்லியை சின்னச் சின்ன துண்டுகளாக நறுக்கி கொள்ளுங்கள். அதன் பிறகு ஒரு மிக்ஸி ஜாரில் நறுக்கிய இட்லி துண்டுகளை சேர்த்த பிறகு இதை அரைக்க அரை லிட்டர் காய்ச்சாத பாலை எடுத்துக் கொள்ளுங்கள்.
பாலை மொத்தமாக ஊற்றாமல் கொஞ்சம் கொஞ்சமாக ஊற்றி இட்லியை நல்ல பைன் பேஸ்ட்டாக அரைத்துக் கொள்ளுங்கள். இதை அரைத்து முடிக்கும் தருவாயில் மீதம் இருக்கும் பாலையும் ஊற்றி ஒரு முறை அடித்து எடுத்து கொள்ளுங்கள்.
இப்போது அடுப்பில் அடி கனமான பேனை வைத்து அதில் 2 டேபிள் ஸ்பூன் நெய்யை ஊற்றி சூடான உடன் அரைத்து வைத்த இட்லி பேஸ்ட்டை அதில் சேர்த்து கலந்து கொள்ளுங்கள். ஐந்து நிமிடம் வரை கை விடாமல் கலந்த பிறகு ஒன்னரை கப் பாகு வெல்லத்தை பொடி செய்து சேர்த்துக் கொள்ளுங்கள்.
வெல்லம் சேர்த்த பிறகு மேலும் ஒரு ஐந்து நிமிடம் வரை கை விடாமல் கலந்து கொண்டே இருங்கள். இதன் இடையே மூன்று டேபிள் ஸ்பூன் நெய்யையும் சேர்த்த பிறகு மறுபடியும் கலந்தால் நமக்கு அல்வா தயாராகி விடும். அல்வாவை அடுப்பிலிருந்து இறக்கும் முன்பு டிரை ஃப்ரூட்ஸ் உங்களிடம் என்ன இருந்தாலும் அதை பொடியாக நறுக்கி இந்த அல்வாவில் சேர்த்து ஒரு முறை கலந்த பிறகு எடுத்து தட்டில் பரிமாறி குழந்தைகளுக்கு கொடுங்கள்.
இதையும் படிக்கலாமே: ரோட்டு கடை ஸ்பெஷல் சால்னா செய்முறை:
இதை இளம் சூட்டாக இருக்கும் போதும் கொடுக்கலாம். அல்லது ஆறிய பிறகும் சாப்பிடலாம். எப்படி இருந்தாலும் இதன் சுவை பிரமாதமாக இருக்கும். மீந்து போன இட்லியில் தான் இந்த அல்வாவை சேர்ந்தீர்கள் என்று சொன்னால் யாரும் நம்பவே மாட்டார்கள். அந்த அளவிற்கு சுவை பிரமாதமாக இருக்கும் ட்ரை பண்ணி பாருங்க.