
ருசியான இனிப்பு போண்டா கோதுமை மாவையும், பழுத்த வாழைப்பழத்தையும் வைத்து எப்படி வீட்டிலேயே சுலபமாக தயாரிப்பது? ஆரோக்கியமான பொருட்களை வைத்து தயாரிப்பதால் அனைவருமே விரும்பி சாப்பிடும் இந்த இனிப்பு போண்டாவை ரொம்ப சுலபமாக எப்படி தயாரிக்க போகிறோம்? என்பதைத் தான் இந்த சமையல் குறிப்பு பதிவின் மூலம் இனி தொடர்ந்து அறிந்து கொள்ள இருக்கிறோம்.
பழுத்த வாழைப்பழம் – 3, வெல்லம் – ரெண்டு டேபிள் ஸ்பூன், தேங்காய் துண்டுகள் – ஒரு டேபிள் ஸ்பூன், பேரிச்சை பழம் – நான்கு, நறுக்கிய முந்திரிப் பருப்பு – சிறிதளவு, ஏலக்காய் தூள் – அரை டீஸ்பூன், கோதுமை மாவு – ஒரு கப், நெய் – ஒரு டீஸ்பூன், சமையல் சோடா – ஒரு சிட்டிகை.
இனிப்பு போண்டா செய்வதற்கு முதலில் தேவையான எல்லா பொருட்களையும் தயாராக எடுத்து வைத்துக் கொள்ளுங்கள். நன்கு பழுத்த மூன்று வாழைப்பழங்கள் எடுத்து சிறு சிறு துண்டுகளாக நறுக்கி வைத்துக் கொள்ளுங்கள். ஒரு பவுலில் இதனை சேர்த்து அதனுடன் பொடித்த வெல்லம் ரெண்டு டேபிள் ஸ்பூன் அளவிற்கு சேர்க்க வேண்டும்.
வெல்லத்திற்கு பதிலாக நாட்டு சர்க்கரை கூட நீங்கள் சேர்க்கலாம். பின்னர் தேங்காயை துருவியும் அல்லது சிறு சிறு துண்டுகளாக நறுக்கியும் ஒரு டேபிள் ஸ்பூன் அளவிற்கு சேர்த்துக் கொள்ளுங்கள். அப்பொழுது தான் சாப்பிடும் பொழுது நறுக் நறுக் என்று இடையிடையே வந்து நன்றாக இருக்கும். பின்னர் இதனுடன் நான்கு பேரிச்சை பழங்களை எடுத்து சிறு சிறு துண்டுகளாக நறுக்கி சேருங்கள். பின் பொடித்து வைத்துள்ள முந்திரி பருப்புகளையும் சேர்க்க வேண்டும். உங்களிடம் வேறு ஏதாவது நட்ஸ் வகைகள் இருந்தாலும் நீங்கள் குட்டி குட்டியாக நறுக்கி சேர்க்கலாம்.
பின்னர் அரை டீஸ்பூன் அளவிற்கு ஏலக்காய் தூள் சேர்த்து வாசனைக்கு கலந்து விடுங்கள். ஒரு மூன்று ஏலக்காய்களை மிக்ஸியில் பொடித்து சேர்க்கலாம். பின்னர் கடைசியாக ஒரு கப் அளவிற்கு கோதுமை மாவை சேர்த்து நன்கு கலந்து விட வேண்டும். தண்ணீர் எதுவும் சேர்க்கக்கூடாது, வாழைப்பழத்தில் இருக்கும் ஈரப்பதத்தை வைத்து நன்கு பிசைய வேண்டும். உருண்டு திரண்டு ஈரப்பதத்துடன் மாவு வரும், அதுவரை நன்கு பிசையுங்கள். பிறகு கடைசியாக ஒரு ஸ்பூன் நெய்யை விட்டு ஒரு முறை நன்கு கலந்து உருண்டையாக பிசைந்து வைத்துக் கொள்ளுங்கள்.
கைகளில் ஒட்டாதவாறு வரும் அளவிற்கு நீங்கள் பிசைய வேண்டும். பிறகு அடுப்பை பற்ற வைத்து அதில் ஒரு வாணலியை வையுங்கள். பொரிக்க தேவையான அளவிற்கு எண்ணெய் விட்டு நன்கு காய விடுங்கள். எண்ணெய் காய்ந்ததும் அடுப்பை மிதமான தீயில் வைத்து மாவில் இருந்து சிறு சிறு உருண்டைகளாக எடுத்து உருண்டை பிடித்து எண்ணெயில் போட்டு பொரித்து எடுக்க வேண்டும். எல்லா புறமும் பொன்னிறமாக சிவக்க பொரித்து எடுத்தால் இனிப்பு போண்டா ரெடி! ரொம்பவே ஆரோக்கியம் நிறைந்த இந்த இனிப்பு போண்டாவை நீங்களும் இதே மாதிரி ட்ரை பண்ணி உங்களுடைய வீட்டில் அசத்துங்க!