
இப்பொழுதெல்லாம் அனைவரது வீட்டிலும் காலை, மாலை என்றாலே இட்லி அல்லது தோசையாக தான் உள்ளது. இதற்காகவே வாரத்தில் ஒருமுறை வீட்டில் உள்ள பெண்கள் மாவு அரைத்து ஃப்ரிட்ஜில் வைத்து விடுகின்றனர். ஆனால் ஒரு சில சமயங்களில் இந்த மாவு தீர்ந்துபோய் விடுகின்ற நேரத்தில் என்ன சமைப்பது என்ற குழப்பம் வந்துவிடுகிறது. இதுபோன்ற நேரங்களில் சற்றும் யோசிக்காமல் உடனடியாக இப்படி மாவு கரைத்து கிரிஸ்பியான மசாலா தோசை செய்து கொடுத்துப் பாருங்கள். எப்பொழுதும் செய்யும் இட்லிமாவு தோசையை விட இந்த கிரிஸ்பியான தோசை மிகவும் அருமையான சுவையில் இருக்கும். இதன் சுவையைக் கூட்டுவதற்கு இதனுடன் சில காய்கறிகளையும் சேர்த்து செய்தால் மிகவும் அருமையாக இருக்கும். வாருங்கள் இந்த மசாலா தோசையை எப்படி செய்ய வேண்டும் என்பதை இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்வோம்.
தேவையான பொருட்கள்:
அரிசி மாவு – ஒரு கப், வெங்காயம் – ஒன்று, கேரட் – 1, பச்சைமிளகாய் – 1, சில்லி ஃப்ளேக்ஸ் – ஒரு ஸ்பூன், மிளகு தூள் – ஒரு ஸ்பூன், சீரகம் – அரை ஸ்பூன், உப்பு – முக்கால் – ஸ்பூன், கறிவேப்பிலை – ஒரு கொத்து, கொத்தமல்லித்தழை – ஒரு கொத்து, எண்ணெய் – 5 ஸ்பூன்.
செய்முறை:
முதலில் ஒரு வாயகன்ற கிண்ணத்தில் ஒரு கப் அரிசி மாவை சேர்த்துக் கொள்ள வேண்டும். பின்னர் இதனுடன் 3 கப் தண்ணீர் ஊற்றி நன்றாகக் கரைத்துக் கொள்ள வேண்டும். பிறகு முக்கால் ஸ்பூன் உப்பு, அரை ஸ்பூன் சீரகம் மற்றும் ஒரு ஸ்பூன் மிளகுத் தூள் சேர்த்து நன்றாக கலந்து விட வேண்டும்.
பிறகு நான்கு அல்லது ஐந்து வரமிளகாயை மிக்ஸி ஜாரில் சேர்த்து சற்று கொரகொரப்பாக அரைத்துக் கொள்ளவேண்டும். பின்னர் இந்த சில்லி ஃப்ளேக்ஸ்லிருந்து ஒரு ஸ்பூன் எடுத்து மாவுடன் சேர்த்து நன்றாகக் கரைத்துக் கொள்ள வேண்டும். பிறகு வெங்காயம் மற்றும் பச்சை மிளகாயை பொடியாக நறுக்கி இதனுடன் சேர்த்துக் கொள்ள வேண்டும்.
பின்னர் ஒரு கேரட்டைக் காய்கறிகளை பயன்படுத்தி பொடியாகத் துருவிக் கொண்டு, இந்த மாவுடன் சேர்த்துக் கொள்ள வேண்டும். பிறகு இறுதியாக கருவேப்பிலை மற்றும் கொத்தமல்லி தழையை பொடியாக நறுக்கி சேர்த்து நன்றாக கலந்து விடவேண்டும். எப்பொழுதும் உள்ள தோசை மாவை விட இந்த மாவு சற்று தண்ணீர் பதத்தில் இருக்க வேண்டும்.
பின்னர் அடுப்பை பற்ற வைத்து, அதன் மீது ஒரு தோசைக்கல்லை வைத்து, ஒன்றரை கரண்டி மாவை ஊற்றி தோசை சுட வேண்டும். பின்னர் இதனை சுற்றி ஒரு ஸ்பூன் எண்ணெய் ஊற்ற வேண்டும். சிறிது நேரத்தில் தோசையை திருப்பிப் போட்டு எடுத்தால் போதும் நல்ல மொறு மொறுவென கிரிஸ்பியான மசாலா தோசை சட்டென தயாராகிவிடும். இதனுடன் தேங்காய் சட்னி, வெங்காய சட்னி அல்லது புதினா சட்னி போன்ற எதனை வேண்டுமானாலும் தொட்டுக்கொண்டு சாப்பிட மிகவும் அருமையான சுவையில் இருக்கும்.