
வாழ்க்கையில் எந்தவித கஷ்டமும் படாமல் அனைத்து விதமான செல்வங்களையும் பெற்று நலமுடன் வாழ வேண்டும் என்று நினைக்கும் ஒவ்வொரு நபரும் மகாலட்சுமியின் அருளைப் பெற வேண்டும். மகாலட்சுமியின் அருள் இருந்தால்தான் அனைத்து விதமான கஷ்டங்களும் நீங்கி சிறப்பான வாழ்க்கையை வாழ முடியும். அப்படி மகாலட்சுமியின் அருளை பெறுவதற்கு மகாலட்சுமிக்குரிய நாட்களில் நாம் வழிபாடு செய்ய வேண்டும். அந்த நாட்களை பற்றி தான் இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் நாம் பார்க்க போகிறோம்.
ஐப்பசி மாதத்தில் வரக்கூடிய அமாவாசை தினத்தன்று நாம் மகாலட்சுமி பூஜை என்பதை கண்டிப்பான முறையில் செய்வோம். அதுவும் வட இந்தியாவை சேர்ந்த அனைவருமே மகாலட்சுமி பூஜையை மிகவும் சிறப்பாக செய்வார்கள். அதனால் தான் அவர்கள் செல்வ செழிப்புடன் வாழ்கிறார்கள் என்று கூட கூறலாம். ஐப்பசி அமாவாசை தினத்தில் இருந்து ஐப்பசி பௌர்ணமி வரக்கூடிய அந்த 15 வளர்பிறை நாட்களும் மகாலட்சுமி தாயாரை வழிபாடு செய்வதற்குரிய அற்புதமான நாட்களாக கருதப்படுகிறது. அந்த நாட்களில் மகாலட்சுமி தாயாரை வழிபாடு செய்வதன் மூலம் நமக்கு விரைவில் மகாலட்சுமியின் கடைக்கண் பார்வை கிடைக்கும் என்றும் அதன் மூலம் நம்முடைய கஷ்டங்கள் தீரும் என்றும் கூறப்படுகிறது. அந்த வழிப்பாட்டு முறையை எப்படி செய்வது என்று பார்ப்போம்.
ஐப்பசி மாதம் அமாவாசை தினத்தில் மகாலட்சுமி தாயாரை வழிபாடு செய்ய இயலவில்லை அல்லது வழிபடுவதற்குரிய சூழ்நிலை அமையவில்லை என்று நினைப்பவர்கள் ஐப்பசி பௌர்ணமி வருவதற்குள் ஏதாவது ஒரு நாளாவது மகாலட்சுமி தாயாரின் வழிபாட்டை மேற்கொள்ள வேண்டும். 15 நாட்களுமே வழிபாடு செய்வதற்கு உகந்த நாட்கள் தான். 15 நாட்களும் மகாலட்சுமி தாயாரை வழிபாடு செய்யலாம் அப்படி தினமும் வழிபாடு செய்ய இயலவில்லை என்பவர்களாக இருந்தால் இந்த 15 நாட்களில் ஒரு நாளாவது மகாலட்சுமி தாயாரை அஷ்டலட்சுமிகளாக பாவித்து வழிபாடு செய்ய வேண்டும்.
மகாலட்சுமி தாயாரின் விக்ரகம் இருக்கும் பட்சத்தில் பால், பன்னீர், சந்தனம், மஞ்சள், தேன், பஞ்சாமிர்தம் போன்ற பொருட்களால் அபிஷேகம் செய்து அலங்காரம் செய்யலாம். வீட்டில் நெல்லிக்காய் தீபம் ஏற்றி வைப்பதும் கனகதாரா ஸ்தோத்திரத்தை படிப்பதும், மகாலட்சுமி அஷ்டகத்தை பாராயணம் செய்வதும், மல்லிகைப்பூ, நாட்டு ரோஜா, தாமரைப்பூ, முல்லைப் பூ போன்ற வாசனை நிறைந்த மலர்களால் அம்பாளுக்கு அர்ச்சனை செய்வதும், குங்குமத்தால் அர்ச்சனை செய்வதும், வில்வம், துளசி போன்ற தெய்வீக இலைகளை பயன்படுத்தி அர்ச்சனை செய்வதும் மிகவும் சிறப்புக்குரியதாக திகழ்கிறது. இதில் எதை நம்மால் செய்ய முடியுமோ அதை செய்யலாம்.
அதை போல் அம்பாளுக்கு 8 விதமான மலர்களை சமர்ப்பித்து வழிபாடு செய்வதும், எட்டு விதமான நெய்வேத்தியங்களை வைத்து வழிபாடு செய்வதும், எட்டு தீபங்களை ஏற்றி வைத்து வழிபாடு செய்வதும் அஷ்டலட்சுமிகளை வழிபாடு செய்வதற்குரிய பலன் கிடைக்கும். இப்படி வீட்டில் வழிபாடு செய்ய இயலாதவர்கள் அருகில் இருக்கக்கூடிய மகாலட்சுமியின் ஆலயத்திற்கு சென்று மகாலட்சுமி தாயாருக்கு பச்சை நிற வளையலை வாங்கித் தருவதும், திருமஞ்சனப் பொடி, சந்தனம், மஞ்சள் குங்குமம் போன்ற பொருட்களை வாங்கித் தருவதும், அங்கு மகாலட்சுமி தாயார் நெய் தீபம் ஏற்றி வைத்து வழிபாடு செய்வதும் நல்ல பலனை தரும்.
இந்த முறையில் ஐப்பசி பௌர்ணமி வருவதற்குள் ஏதாவது ஒரு நாள் மட்டுமாவது மகாலட்சுமி தாயாரை முழுமனதோடு வழிபாடு செய்து நம்முடைய கஷ்டங்கள் தீர வேண்டும் என்று வேண்டிகொண்டால் அந்த கஷ்டங்கள் அனைத்தையும் தீர்ப்பதற்குரிய வழியை மகாலட்சுமி தாயார் அருள்வார்.
இதையும் படிக்கலாமே: 11-11-2024 அன்று செய்ய வேண்டிய பரிகாரம்
நம்மால் எந்த முறையில் வழிபாடு செய்ய இயலுமோ அந்த முறையில் முழுமனதோடு மகாலட்சுமி தாயாரை ஐப்பசி பௌர்ணமி தினத்திற்கு முன்பாக ஒரு நாள் மட்டுமாவது வழிபாடு செய்வதன் மூலம் நம் வாழ்வில் இருக்கக்கூடிய வறுமைகளும், கஷ்டங்களும் நீங்கும் என்ற தகவலை கூறி இந்த பதிவினை நிறைவு செய்து கொள்கிறோம்.