
ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமான முயற்சிகளை செய்து அந்த முயற்சிகளின் மூலம் தங்கள் வாழ்க்கையில் வெற்றியை அடைவார்கள். இது அனைவருக்கும் பொருத்தமான ஒன்றுதான். இருப்பினும் ஒரு சிலருக்கு எவ்வளவு தான் முயற்சிகள் செய்தாலும் அந்த முயற்சியில் வெற்றி என்பது கிடைக்கவே கிடைக்காது. தரித்திரம் பிடித்து ஆட்டிக் கொண்டிருக்கிறது என்று கூட கூறுவார்கள். நாம் போவதற்கு முன்பாக நம்முடைய தரித்திரம் போய்விட்டது அதனால் தான் எதுவும் நடக்கவில்லை என்று கூறும் வழக்கமும் இருக்கிறது. இதை தான் ஜென்ம தரித்திரம் என்று கூறுவோம்.
முன் ஜென்மத்தில் நாம் செய்த கர்ம வினைகளின் பலனால் இந்த ஜென்மத்தில் நமக்கு தரித்திரம் ஏற்பட்டு இருக்கும். இந்த தரித்திரத்தை நீக்குவதன் மூலமே நமக்கு நன்மைகள் உண்டாகும். அப்படி இந்த ஜென்மத்தில் இந்த தரித்திரத்தை நீக்காமல் விட்டு விட்டோம் என்றால் அடுத்த ஜென்மத்திற்கும் இந்த தரித்திரம் தொடரும். மேலும் நம் வருங்கால சங்கதிகளுக்கும் இந்த தரித்திரம் வருவதற்குரிய வாய்ப்புகள் உள்ளது. அப்படிப்பட்ட ஜென்ம தரித்திரத்தை நீக்குவதற்கு செய்யக்கூடிய வழிபாட்டு முறையை பற்றி தான் இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் நாம் பார்க்க போகிறோம்.
நமக்கு கஷ்ட காலம் என்பது ஏற்பட்டுவிட்ட உடனே நாம் சொல்லக்கூடிய ஒரு வார்த்தை தரித்திரம் பிடித்து விட்டது என்றுதான். அந்த இடத்தில் மகாலட்சுமி என்பவள் குடியிருக்க மாட்டாள். அதனால் அந்த இடத்தில் செல்வ செழிப்பு என்பது ஏற்படாது. எந்த முயற்சிகளும் வெற்றி அடையாது. எந்த ஒரு நல்ல காரியமும் நடைபெறாது. எதற்கெடுத்தாலும் எதிர்மறையான செயல்களே நடைபெறும். தடைகள் உண்டாகி கொண்டே இருக்கும். இந்த சூழ்நிலையில் இருந்து வெளியே வந்து நலமுடன் வாழ்வதற்கு சிவபெருமானை வழிபட வேண்டும்.
மகாலட்சுமி தாயாரே தன்னுடைய அனைத்து விதமான செல்வங்களையும் பெறுவதற்கு சிவபெருமானை நோக்கி தான் தவம் இருந்தார்கள் என்று புராணங்கள் கூறுகிறது. இதே போல் தான் குபேர பகவான் இழந்த செல்வங்கள் அனைத்தையும் திரும்பப் பெறுவதற்கு சிவபெருமானை நோக்கி தவம் இருந்தார் என்று கூறப்படுகிறது. அவ்வளவு சக்தி மிகுந்த சிவபெருமானின் ஆலயத்தில் நாம் செய்யக்கூடிய வழிபாட்டு முறை நம்முடைய ஜென்ம தரித்திரத்தை நீக்கும் என்று புராணங்கள் கூறுகின்றன. அந்த வழிபாட்டு முறையை தெரிந்து கொள்வோம்.
நமக்கு எத்தனை வயது ஆகிறதோ அத்தனை எண்ணிக்கையில் பஞ்சு திரி வாங்கிக் கொள்ள வேண்டும். ஒரு பெரிய அகல் விளக்காக ஒரு அகல் விளக்கை வாங்கிக் கொள்ளுங்கள். அது நிரம்ப ஊற்றுவதற்கு தேவையான நல்லெண்ணையை வாங்கிக் கொள்ளுங்கள். அருகில் கண்டிப்பான முறையில் சிவாலயம் இருக்கும். அந்த சிவாலயத்திற்கு நல்ல சுபமுகூர்த்த நாளாக இருக்கக்கூடிய திங்கட்கிழமை அன்று செல்ல வேண்டும். அங்கு இருக்கக்கூடிய கொடிமரத்திற்கு முன்பாக தீபம் ஏற்ற வேண்டும்.
தீபம் ஏற்றும் இடத்தை சுத்தம் செய்து மஞ்சள் பூசி அதில் பச்சரிசி மாவில் கோலம் போட்டுக் கொள்ளுங்கள். பிறகு அதற்கு மேல் ஒரு வாழை இலையை விரித்து அதில் நாம் வாங்கி வந்த அகல் விளக்கை வைக்க வேண்டும். அந்த அகல் விளக்கிற்கும் மஞ்சளை தடவி குங்குமம் வைத்துக் கொள்ளுங்கள். பிறகு நல்லெண்ணையை ஊற்றி நம்முடைய வயதின் எண்ணிக்கையில் திரியை போட வேண்டும். தனித்தனியாக போட்டுக் கொள்ளுங்கள். 30 வயது ஆகிறது என்றால் 30 திரிகளை போட வேண்டும். 50 வயது ஆகிறது என்றால் 50 திரிகளை போட வேண்டும். இப்படி போட்டு முடித்த பிறகு இந்த தீபத்தை ஏற்ற வேண்டும்.
தீபத்தை ஏற்றி முடித்த பிறகு சிவபெருமானை நோக்கி “முன் ஜென்மத்தில் நான் செய்த கர்ம வினைகள் அனைத்தும் நீங்க வேண்டும். வருங்காலத்தில் அதனால் எந்தவித பாதிப்புகளும் ஏற்படக்கூடாது. சகல ஐஸ்வர்யமும் பெருக வேண்டும்” என்று மனதார வேண்டிக் கொள்ளுங்கள். அடுத்த வாரம் திங்கட்கிழமை அதே கோவிலுக்கு சென்று அங்கு இருக்கக்கூடிய சிவபெருமானுக்கு ருத்ராபிஷேகம் செய்ய வேண்டும் என்று கூறுங்கள். இது முழுக்க முழுக்க மந்திர உச்சாடலால் செய்யக்கூடிய அபிஷேகம் ஆகும். இந்த மந்திர உச்சாடலை செய்யும் பொழுது சுத்தமான தேனை பயன்படுத்தி சிவபெருமானுக்கு அபிஷேகம் செய்ய வேண்டும் என்றும் கூறிவிடுங்கள்.
இந்த தேனிற்கும், அபிஷேகத்திற்கும் உரிய தொகையை அவர்களிடம் வழங்கிவிட்டு எந்த நேரத்தில் ருத்ராபிஷேகம் செய்கிறார்களோ அந்த நேரத்தில் நாமும் ஆலயத்திற்கு சென்று சிவபெருமானை முழுமனதோடு வழிபாட்டு செய்ய வேண்டும். இப்படி சிவபெருமானை நாம் வழிபாடு செய்தோம் என்றால் நம்முடைய வாழ்க்கையில் இருக்கக்கூடிய அனைத்து விதமான கஷ்ட காலங்களும், தரித்திரமும், தடைகளும், தடங்கல்களும் நீங்கி செல்வ செழிப்புடன் சகல ஐஸ்வர்யங்களும் பெற்று நலமுடன் வாழ்வோம்.
இதையும் படிக்கலாமே:பண தேவையை பூர்த்தி செய்யும் ஆலமர பரிகாரம்
வாழ்க்கையில் முன்னேறுவதற்கு ஏற்படக்கூடிய தடைகள் விலக வேண்டும் என்று நினைப்பவர்கள் தங்களுடைய வாழ்க்கையில் சகல ஐஸ்வர்யங்களையும் பெறவேண்டும் என்று நினைப்பவர்கள் இந்த முறையில் சிவபெருமானை வழிபாடு செய்து அனைத்து விதமான நன்மைகளையும் பெறலாம் என்ற தகவலை கூறி இந்த பதிவினை நிறைவு செய்து கொள்கிறோம்.