
நாம் ஒவ்வொருவருக்கும் ஏதாவது ஒரு வகையில் கடன் என்பது இருக்கும். அந்த கடனை தீர்ப்பதற்குரிய முயற்சிகளிலும் நாம் ஈடுபடுவோம். எவ்வளவு முயற்சிகள் செய்தாலும் அந்த முயற்சியில் வெற்றி அடைய முடியவில்லை, கடன் பிரச்சினையை தீர்க்க முடியவில்லை, கடன் அடையவில்லை என்று வருத்தப்படுபவர்கள் அந்த கடன் பிரச்சினையை தீர்ப்பதற்கு விநாயகப் பெருமானை வழிபாடு செய்யும் ஒரு முறையைப் பற்றி தான் இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் நாம் பார்க்க போகிறோம்.
கடனுக்கு ருணம் என்ற மறு பெயரும் இருக்கிறது. கடனை தீர்க்கக்கூடிய விநாயகரை ருண விமோசன விநாயகர் என்று கூறுவோம் அப்படிப்பட்ட விநாயகரை தொடர்ச்சியாக 21 நாட்கள் யார் ஒருவர் இந்த முறையில் வழிபாடு செய்கிறார்களோ அவர்களுடைய வாழ்க்கையில் இருக்க கூடிய எவ்வளவு பெரிய கடனாக இருந்தாலும் அந்த கடன் தீருவதற்கு விநாயகப் பெருமான் அருள் புரிவார் என்றும், அந்த கடனை தீர்ப்பதற்குரிய வழியை காட்டுவார் என்றும் கூறப்படுகிறது. அந்த வழிபாட்டு முறையைப் பற்றி தெரிந்து கொள்வோம்.
இந்த வழிபாட்டை புதன்கிழமை அன்றுதான் ஆரம்பிக்க வேண்டும். அதுவும் அமாவாசை முடிந்து வரக்கூடிய முதல் புதன்கிழமை ஆரம்பிப்பது நல்ல பலனை தரும். இதற்கு ஐந்து கோமதி சக்கரம், ஐந்து லட்சுமி சோழி, 21 அத்திப்பழம் வேண்டும். இதோடு 21 மோதகத்தை எடுத்துக்கொண்டு அருகில் இருக்கக்கூடிய விநாயகரின் ஆலயத்திற்கு செல்ல வேண்டும். சோழி, கோமதி சக்கரம் அத்திப்பழம் இவை மூன்றையும் விநாயகரின் பாதத்தில் வைக்க சொல்லி தங்களின் பெயரில் அர்ச்சனை செய்ய சொல்ல வேண்டும். மோதகத்தை விநாயகருக்கு நெய்வேத்தியமாக படைத்து அங்கு வரும் பக்தர்களுக்கு பிரசாதமாக தர வேண்டும். வழிபாட்டை நிறைவு செய்த பிறகு விநாயகரின் பாதத்தில் இருக்கக்கூடிய கோமதி சக்கரம், சோழி, அத்திப்பழங்கள் இவற்றை வாங்கிக்கொண்டு வீட்டிற்கு வரவேண்டும்.
வீட்டில் இருக்கும் விநாயகப் பெருமானுக்கு முன்பாக இரண்டு அகல் விளக்கில் தேங்காய் எண்ணெய் அல்லது நெய் ஊற்றி தீபம் ஏற்ற வேண்டும். அப்பொழுதும் விநாயகருக்கு 21 என்ற எண்ணிக்கையில் மோதகத்தை நெய்வேத்தியமாக வைத்துவிட்டு ருண விமோசன விநாயகர் ஸ்லோகத்தை கூற வேண்டும். இப்படி கூறி முடித்த பிறகு 21 அத்திப்பழங்களில் இருந்து ஒரே ஒரு அத்திப்பழத்தை எடுத்து பிரசாதமாக சாப்பிட்டு விட வேண்டும். சோழி மற்றும் கோமதி சக்கரத்தை சிவப்பு நிற துணியில் போட்டு முடிந்து விநாயகரின் பாதத்திலேயே வைத்து விடுங்கள்.
மறுநாள் இதே போல் விநாயகருக்கு முன்பாக இரண்டு தீபங்களை ஏற்றி வைத்து ருண விமோசன விநாயகர் ஸ்லோகத்தை ஒருமுறை படித்துவிட்டு அத்திப்பழத்தில் இருந்து ஒரு பழத்தை மட்டும் எடுத்து பிரசாதமாக உண்ண வேண்டும். நம்மால் இயன்ற ஏதாவது ஒரு பொருளை விநாயகருக்கு நெய்வேத்தியமாக வைத்துக் கொள்ளலாம். மோதகத்தை தான் வைக்க வேண்டும் என்று எந்த அவசியமும் இல்லை. இப்படி ஒவ்வொரு நாளும் விநாயகருக்கு தீபம் ஏற்றி ருண விமோசன விநாயகர் ஸ்லோகத்தை கூறி அத்திப்பழத்தை உண்ண வேண்டும். 21 வது நாள் இந்த வழிபாட்டை நிறைவு செய்த பிறகு அருகில் இருக்கக்கூடிய விநாயகர் ஆலயத்திற்கு சென்று தங்களால் இயன்ற பிரசாதத்தை நெய்வேத்தியமாக வைத்து வழிபாடு செய்துவிட்டு அங்கு வரும் பக்தர்களுக்கு பிரசாதமாக தர வேண்டும்.
இந்த முறையில் விநாயகப் பெருமானை வழிபாடு செய்பவர்களுக்கு அவர்களுடைய வாழ்க்கையில் இருக்கக் கூடிய கஷ்டங்கள், கடன் பிரச்சினைகள் முற்றிலும் நீங்கும். மேலும் எப்பேற்பட்ட கஷ்டங்களாக இருந்தாலும் அந்த கஷ்டங்களில் இருந்து வெளியே வருவதற்கு விநாயகப் பெருமான் அருள் புரிவார் என்று கூறப்படுகிறது. சோழி மற்றும் கோமதி சக்கரம் எப்பொழுதும் பூஜை அறையில் இருக்கட்டும். அதை எதுவும் செய்ய வேண்டிய அவசியம் இல்லை.
இதையும் படிக்கலாமே: எதிர்மறை ஆற்றலை விலக அஷ்டமி பரிகாரம்
இந்த எளிமையான விநாயகர் வழிபாட்டை முழுமனதோடு செய்பவர்களுக்கு கடன் பிரச்சனை முற்றிலும் நீங்க விநாயகப் பெருமான் அருள் புரிவார் என்ற தகவலை கூறி இந்த பதிவினை நிறைவு செய்து கொள்கிறோம்.