
என்னதான் வீட்டில் பலவித உணவுகள் சமைத்துக் கொடுத்தாலும் ஓட்டல்களிலும், விருந்துகளிலும் கிடைக்கும் சுவை வீட்டில் செய்யும் உணவில் கிடைப்பதில்லை. எனவே தான் பலரும் வெளியில் சாப்பிடுவதை அதிகமாக விரும்புகின்றனர். அப்படி கல்யாணம் என்றாலே சாம்பார் சாதம் மற்றும் பிரியாணி தான் மிகவும் விசேஷமானது. சாம்பார் சாதம் போடப்படும் திருமண விழாக்களில் அதனுடன் தொட்டுக்கொண்டு சாப்பிட உருளைக்கிழங்கு வருவல், கோஸ் பொரியல் வைப்பது தான் பலரின் வழக்கமாக இருக்கிறது. நூற்றுக்குத் தொண்ணூறு சதவீத கல்யாண பந்திகளில் இந்த வகை பொரியல்கள் தான் இடம் பெறுகிறது. இந்தப் பொரியல்களை பலமுறை வீட்டிலும் செய்து கொடுக்கின்றனர். ஆனால் அவற்றின் சுவையை விட இந்த திருமணங்களில் போடப்படும் பொரியல்களின் சுவை மிகவும் அற்புதமாக இருக்கும். எனவே இந்த காய்கறிகள் பிடிக்காதவர்கள் கூட அதனை விருப்பமாக சாப்பிடுவார்கள். இப்படி கல்யாண வீட்டில் போடப்படும் அதே சுவையில் கோஸ் பொரியலை நாமும் வீட்டிலேயே செய்ய முடியும். வாருங்கள் இதனை எவ்வாறு செய்ய வேண்டும் என்பதை இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்வோம்.
தேவையான பொருட்கள்:
கோஸ் – அரை கிலோ, சிறுபருப்பு – 100 கிராம், வெங்காயம் – 1, பச்சை மிளகாய் – 2, தேங்காய் – 3 சில்லு, உப்பு – முக்கால் ஸ்பூன், எண்ணெய் – 3 ஸ்பூன், கருவேப்பிலை – ஒரு கொத்து, கடுகு – அரை ஸ்பூன், உளுத்தம்பருப்பு – அரை ஸ்பூன், மஞ்சள் தூள் – கால் ஸ்பூன், வறமிளகாய் – 2, கொத்தமல்லி தழை – ஒரு கொத்து.
செய்முறை:
முதலில் கோஸை பொடியாக நறுக்கிக் கொள்ள வேண்டும். பின்னர் ஒரு கிண்ணத்தில் தண்ணீர் ஊற்றி, அதனை அடுப்பின் மீது வைத்து சூடுபடுத்த வேண்டும். தண்ணீரில் கால் ஸ்பூன் மஞ்சள்தூள் மற்றும் கால் ஸ்பூன் உப்பு சேர்த்து கலந்து விட வேண்டும். தண்ணீர் நன்றாக சூடு ஏறியதும் அடுப்பை அனைத்து விட்டு, நறுக்கி வைத்துள்ள கோஸை முழுவதுமாக தண்ணீரில் சேர்க்க வேண்டும்.
பிறகு 5 லிருந்து 10 நிமிடம் அப்படியே விட்டு, விட்டு தண்ணீரை வடிகட்டிக் கோஸை தனியாக எடுத்து வைக்க வேண்டும். பிறகு வெங்காயத்தை பொடியாக நறுக்கி வைக்க வேண்டும். அதேபோல் பச்சை மிளகாயை சிறு துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவேண்டும். பின்னர் அடுப்பை பற்ற வைத்து, அதன் மீது ஒரு கடாயை வைத்து, எண்ணெய் ஊற்ற வேண்டும்.
எண்ணெய் நன்றாக காய்ந்ததும் அதில் அரை ஸ்பூன் கடுகு, அரை ஸ்பூன் உளுத்தம் பருப்பு சேர்த்து தாளிக்க வேண்டும். பிறகு இரண்டு வரமிளகாய் சேர்த்து வறுக்க வேண்டும். அதன் பின் நறுக்கி வைத்துள்ள பச்சை மிளகாய் மற்றும் வெங்காயம் சேர்த்து பொன்னிறமாக வதக்கிக் கொள்ள வேண்டும். பிறகு சிறு பருப்பை 15 நிமிடம் ஊற வைத்து, தண்ணீரை வடிகட்டி வெங்காயத்துடன் சேர்த்து நன்றாக வதக்க வேண்டும்.
அதன் பின் நறுக்கி வைத்துள்ள கோஸையும் சேர்த்து, அதனுடன் உப்பு சேர்த்து நன்றாக கலந்து விட வேண்டும். பின்னர் ஒரு தட்டு போட்டு மூடி, அடுப்பை சிம்மில் வைத்து விடவேண்டும். பத்திலிருந்து பதினைந்து நிமிடத்திற்குள் சேர்த்துள்ள சிறுபருப்பு, கோஸ் அனைத்தும் நன்றாக வெந்துவிடும். பின்னர் இறுதியாக 3 சில்லு தேங்காயை துருவி சேர்த்து, அதனுடன் கொத்தமல்லி தழையும் சேர்த்து கலந்து விட வேண்டும்.